
மதுரை ஆதீனம் உடலுக்கு அமைச்சர்கள், ஆட்சியர் அஞ்சலி!
மதுரை : மதுரை 292 வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாதர் உடல் நலக்குறைவால் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் மதுரை ஆதீன மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொது மக்கள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயற்கை எய்திய மதுரை ஆதீனம் அவர்களின் பூத உடலுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மதுரை ஆதீனம் மடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் அடக்கம் மதுரை முனிச் சாலையில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
மறைந்த மதுரை ஆதீனத்தின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் (குருமூர்த்தம்) செய்யப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக காலமான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதின மடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை மதுரை ஆதினத்தில் 293வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகளை நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுர ஆதினம் முன்நின்று நடத்திவைத்து தீட்ஷையும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மதுரை ஆதினத்தின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் இதனை தொடர்ந்து, அமமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், இந்து மக்கள் கட்சி தலைவர், இந்து முண்ணனி, மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி, நாம் தமிழர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
திருவாவடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம், தருமபுர ஆதினம், குன்றக்குடி அடிகளார், கேரளா மாநில ஹிந்து ஆச்சார்ய சபையின் சௌபர்னிகா விஜயேந்திர பூரி சுவாமிகள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்
இதனை தொடர்ந்து ஆதினத்தின் உடலுக்கு மீனாட்சியம்மன் கோவில் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4கோவில்களில் இருந்துகொண்டுவரப்பட்ட புனித நீரால் அபிஷகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
இதனையடுத்து ஆதீன மடத்தில் இருந்து அவரது உடல் பூப்பல்லக்கில அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு திருவாவடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம், தருமபுர ஆதினம், குன்றக்குடி அடிகளார் ஊர்வலமாக வந்தவாறு உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளை வலம் வந்து பின்னர் காமராஜர் சாலை வழியாக முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டுவரப்பட்ட து.
இதனையடுத்து தருமபுர ஆதினம் திருச்சி ஆதினம் , காமாட்சிபுரி ஆதினம் , வேளாக்குறிச்சி ஆதீனம் , குன்னக்குடி ஆதினம் உள்ளிட்ட ஆதினங்கள் பல்வேறு அபிஷேக சம்ப்ராதயங்கள் செய்யப்பட்டு பின்னர் அமர்ந்த நிலையிலயே நல்லடக்கம் செய்யப்பட்டது.