October 20, 2021, 6:34 pm
More

  ARTICLE - SECTIONS

  அண்ணா என் உடைமைப் பொருள் (56): துறவு என்பது…!

  அவர் துறவறம் ஏற்கவில்லை. அதேநேரத்தில், அவரிடம் துறப்பதற்கு எதுவும் இல்லை. தானாகவே வந்து சேர்ந்த விஷயங்களையும் துடைத்து

  anna en udaimaiporul 2 - 1

  அண்ணா என் உடைமைப் பொருள் – 57
  துறவு என்பது…
  – வேதா டி. ஸ்ரீதரன் –

  ஒருமுறை நானும் இளங்கோவனும் அண்ணாவைப் பார்க்கப் போயிருந்தோம். அன்று அண்ணா எனக்கு ஒரு வேஷ்டியும், இளங்கோவனுக்கு இரண்டு வேஷ்டிகளும் கொடுத்தார். நான் அலுவலகத்துக்கு பேண்ட்-சட்டையில் வருபவன், இளங்கோவன் எப்போதுமே வேஷ்டி அணிபவர். எனவே தான் எனக்கு ஒரு வேஷ்டியும், அவருக்கு இரண்டு வேஷ்டிகளும் என்பது எனக்குப் புரிந்தது.

  அண்ணா கொடுப்பது எதுவானாலும், என்னைப் பொறுத்த வரை, அது பிரசாதமே. ஆனால், இளங்கோவன் பார்வை வேறு. அவரைப் பொறுத்த வரை, ‘‘நாம் கிரஹஸ்தர்கள். நாம் தான் அண்ணாவுக்குக் காணிக்கைப் பொருட்கள் தர வேண்டும். அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது’’ என்பது அவர் எண்ணம். எனவே, வேஷ்டிகளை மிகுந்த கூச்சத்துடனேயே அவர் வாங்கிக் கொண்டார்.

  இளங்கோவன், ‘‘அண்ணா, எனக்கு எதுக்கு அண்ணா இதெல்லாம் தரீங்க? நாங்க தான் அண்ணா உங்களுக்கு சர்வீஸ் பண்ணணும்’’ என்றார். அதற்கு அண்ணா, ‘‘பரவாயில்லைப்பா, நான் பிரியமா தரேன். வாங்கிக்கோ’’ என்றார்.

  இளங்கோவனின் கூச்சம் குறையவில்லை. ‘‘அண்ணா, ரெண்டு வேஷ்டி குடுத்திருக்கீங்க, ஒரு வேஷ்டியை யாருக்காவது குடுத்துடட்டுமா?’’ என்று கேட்டார்.

  உடனே அண்ணா, ‘‘இளங்கோ, அதை நான் உனக்குக் கொடுத்துட்டேன். இப்போ அது உன்னோடது. அதை நீ என்ன பண்ணினா எனக்கென்னப்பா?’’ என்றார்.

  ‘‘பிறரிடம் கொடுத்து விட்ட’’ பொருட்களை மட்டுமல்ல, தன்னிடம் இருந்த ‘‘தன்னுடைய’’ என்றே சொல்லப்படும் பொருட்களையும் அண்ணா தன்னுடையதாகக் கருதவில்லை.

  அவர் துறவறம் ஏற்கவில்லை. அதேநேரத்தில், அவரிடம் துறப்பதற்கு எதுவும் இல்லை. தானாகவே வந்து சேர்ந்த விஷயங்களையும் துடைத்து எறிந்து விட்டார்.


  அண்ணா காலம் முடிந்த உடனேயே திவ்ய வித்யா ட்ரஸ்டின் ஆயுளும் முடிவடைந்தது.

  புத்தகங்களின் ஃபிலிம்களோ, பிரின்ட்அவுட்களோ, கம்ப்யூட்டர் ஃபைல்களோ அவர்களிடம் கைவசம் இல்லை. ட்ரஸ்ட் டீட் உட்பட அனைத்தும் தொலைந்து விட்டன.

  பதிப்பகத்தின் சொத்து என்பது புத்தக ஸ்டாக் அல்ல – ஃபிலிம்களும் கம்ப்யூட்டர் ஃபைல்களுமே.

  இனி, அண்ணாவின் புத்தகங்களை மீண்டும் அச்சிடுவது என்றால், அனா, ஆவன்னாவில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

  இது என்ன பொறுப்பற்றதனம் என்று அதன் ட்ரஸ்டிகள் மீது கோபம் வந்தது. இந்தக் கோபம் பல மாதங்கள் நீடித்தது.

  (இந்த விஷயத்தில் திவ்ய வித்யா ட்ரஸ்டிகளை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது தவறு, என்னையும் சேர்த்தே தான் ஏற்ற வேண்டும். ஒரு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைத் தொடர்களை என்னிடம் கொடுத்த அண்ணா, தனது காலத்துக்குப் பின்னர் அதை நூலாக வெளியிடுமாறு கூறி இருந்தார். அண்ணா என்னிடம் கொடுத்த அச்சுப் பிரதியைத் தொலைத்து விட்டேன். டைப் பண்ணி வைத்திருந்த ஃபைல்கள் இருந்த ஹார்ட் டிஸ்க் பழுதாகி விட்டது. தொடர் வெளிவந்த பத்திரிகை அலுவலகத்திலும் பிரதி இல்லை.)

  அண்ணா காலத்துக்குப் பின்னர், அண்ணாவின் சில புத்தகங்களை திவ்ய வித்யா இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்கள். விரைவிலேயே அதன் ஆயுளும் முடிந்து விட்டது.

  anna alias ra ganapathy9 - 2

  போன வருடம் திவ்ய வித்யா ட்ரஸ்டி ஒருவரைத் தொடர்பு கொண்டு, அந்த இணையதளத்தைப் புதுப்பிக்கலாமே என்று கேட்டேன். அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை அவர் விளக்கினார். மேலும், தன்னிடம் திவ்ய வித்யா வெளியிட்ட புத்தகங்கள் சிலவற்றின் பிரதிகள் இருப்பதாகவும் அதை உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று கேட்டார்.

  திவ்ய வித்யா ட்ரஸ்டிகளுக்கு ‘‘அர்ச்சனை’’ பண்ணிக் கொண்டே அந்தப் பிரதிகளை ஓர் அன்பருக்கு அனுப்பி வைத்தேன். அவர் அவற்றைப் பலருக்குப் பிரசாதமாக வினியோகம் செய்தார்.

  எனது நண்பர் ஒருவர், அடிக்கடி, ‘‘தான தர்மம் பண்ண ஆசைப்பட்டால் ட்ரஸ்ட் நடத்து. பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால் வியாபாரம் நடத்து’’ என்று சொல்வதுண்டு. இது தான் எனக்கு மீண்டும் மீண்டும் மனதில் தோந்றியது. திவ்ய வித்யா ட்ரஸ்டை எதற்காக ஆரம்பித்தார்கள், எவ்வாறு நடத்தினார்கள் என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தேன்.

  அது, ஸ்வாமி சொன்னதன் பேரில், அண்ணா உத்தரவின்படி ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம் அண்ணா புத்தகங்களை சலுகை விலையில் விற்பனை செய்வது மட்டுமே.

  அதன் ட்ரஸ்டிகளுக்குப் பதிப்பக வேலையில் நாட்டமோ, அனுபவமோ, தொடர்புகளோ கிடையாது.

  அண்ணா மீதான பக்தியின் காரணமாக மட்டுமே அவர்கள் ட்ரஸ்ட் நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் தனிப்பட்ட ரீதியில் அவர்களுக்குப் பொருளாதார இழப்பும், நேர விரயமும் ஏற்பட்டன. அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

  இதற்கு ஒரே காரணம் அண்ணா மீதான பக்தி மட்டுமே.

  ஆனால், திவ்ய வித்யா ட்ரஸ்ட் என்பது ஒரு பதிப்பகம். அதை வியாபாரமாக நடத்த வேண்டும். அது அவர்களுக்கு சாத்தியப்படவில்லை. திவ்ய வித்யா ட்ரஸ்ட், ஐம்பது ரூபாய் புத்தகத்தை முப்பது ரூபாய்க்கு விற்பனை செய்தது உண்மையே. இதனால் யாருக்கு என்ன ஆதாயம்? இந்தக் காலத்தில், ஐம்பது ரூபாய்க்கும் முப்பது ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?

  ஆனால், இதே புத்தகங்களை வியாபார ரீதியில் நடைபெறும் பதிப்பகங்கள் வெளியிட்டிருந்தால் பத்தாயிரம் பிரதிகளுக்குப் பதில் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்குமே!

  anna alias ra ganapathy3 - 3

  இதையெல்லாம் விடப் பெரிய விஷயம், அண்ணா எழுதிய அனைத்து நூல்களையும் திவ்ய வித்யா ட்ரஸ்ட் வெளியிட்டது தான். பல்வேறு பதிப்பகங்கள் செய்த வேலைகள் அனைத்தும் திவ்ய வித்யாவில் குவிக்கப்பட்டன. திவ்ய வித்யா ட்ரஸ்ட் அஸ்தமனமானதும், அதனுடன் சேர்ந்தே அத்தனை புத்தகங்களும் அஸ்தமனமாகி விட்டன.

  எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது!

  இந்த முட்டாள்தனத்துக்கு யார் காரணம்?

  அண்ணா, அண்ணா, அண்ணா மட்டுமே!

  தனது உடலைச் சக்கையாகப் பிழிந்தது போலவே தனது நூல்களையும் பிழிந்து, அனைத்தையும் அஸ்தமனம் ஆக்கி விட்டார்.

  அகஸ்தியர், அம்மா, ஜயஜய சங்கர, காமகோடி ராமகோடி முதலான சில நூல்கள் மட்டும் அண்ணா காலத்துக்குப் பின்னர் வேறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. என் பார்வையில் இவையும் ஏற்கெனவே அஸ்தமனம் ஆகி விட்டன. காரணம், இவற்றின் மறு பதிப்பு வெளியாவதற்கான சாத்தியக் கூறு எதுவும் என் கண்களில் தென்படவில்லை.

  திவ்ய வித்யா ட்ரஸ்ட் என்பதில் ஒளிந்திருந்த ‘‘திவ்ய சங்கல்பம்’’ இது தான்.

  இந்த ‘‘அஸ்தமன’’ கைங்கர்யத்தில் தெய்வத்தின் குரல், ஸ்வாமி ஆகிய இரண்டு மட்டுமே விதி விலக்கு.

  இவை இரண்டு மட்டுமே அண்ணாவிடமிருந்து ‘‘தப்பிய’’ நூல்கள்.

  தெய்வத்தின் குரல் முழுக்க முழுக்க பெரியவாளின் கருத்துகளே. ‘‘அது சமுதாய நன்மையை உத்தேசித்து பெரியவா சொன்ன கருத்துகளின் திரட்டு. அதன் மீது எனக்கு எந்த உரிமையும் கிடையாது’’ என்று அண்ணா என்னிடம் தெரிவித்துள்ளார். எனவே, தெய்வத்தின் குரலில் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்வதில் அண்ணாவுக்கு விருப்பம் இல்லை. தன்னைப் பெரியவா பாத சம்பந்தம் உள்ளவராகக் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே அதில் தனது பெயரை வெளியிட்டார். அதிலும், தான் தொகுப்பாசிரியர் மட்டுமே என்பதை மறக்காமல் குறிப்பிட்டிருப்பார்.

  பெண்மை இரண்டாவது பதிப்பில் நான், தொகுப்பாசிரியர் என்று போடாமல் வெறுமனே ரா. கணபதி என்று போட்டிருந்தேன். புத்தகப் பிரதியைப் பார்த்ததுமே, ‘‘ஐயய்யோ என் பெயரை ஏன் போட்டாய்?’’ என்று கேட்டார். ‘‘அது உங்கள் சாய்ஸ் இல்லை அண்ணா, என்னோட சாய்ஸ். அப்படித் தான் போடுவேன்’’ என்று சொன்னேன். அண்ணாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அதன்பிறகு இதைப்பற்றி வேறு ஒன்றும் சொல்லவில்லை.

  அண்ணா தன்னையோ, தனது எழுத்தையோ, தனது வாழ்க்கையையோ ஒரு பொருட்டாகக் கருதவில்லை. தெய்வத்தின் குரல், ஸ்வாமி ஆகிய இரண்டு நூல்கள் உருவாக்கம் மட்டுமே அதற்கு விதிவிலக்கு.

  இந்த இரண்டு நூல்கள் இருக்கும் வரை ‘‘தவிர்க்க முடியாமல்’’ ரா. கணபதி என்ற பெயரும் இருக்கும்.

  ஆம், ‘‘தவிர்க்க முடியாமல்’’ தான். மற்றபடி, அண்ணா, தனது பெயரையும் ஒட்டுமொத்தமாகத் துடைத்துப் போட்டு விட்டார்.

  துறவு என்பது உடைமைகளையோ, உறவுகளையோ, பந்த பாசங்களையோ தொலைப்பது அல்ல.

  துறவு என்பது தன்னைத் தொலைப்பது, பரிபூரணத்தில் இரண்டறக் கலப்பது.

  இது தான் நான் பார்த்த அண்ணா.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-