
கட்டுரை : பத்மன்
“ஊருக்கு உழைத்திடல் யோகம், நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்” என்று உரைத்துள்ளார் மகாகவி பாரதியார். அதற்கோர் எடுத்துக்காட்டாக, நாட்டுக்கு உழைத்திடல் யோகம் என்றும், மக்களின் நலம் ஓங்குவதற்காகத் தன்னையே வருத்துதல் யாகம் என்றும் வாழ்ந்து வருகிறார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
தூங்குவதற்கு இவருக்கு நேரம் இருக்கிறதா என்று அனைவரும் மலைக்கின்ற வகையில், தினந்தோறும் இவர் விழிப்போடு செயலாற்றுகின்ற நேரமே அதிகம்.
தாம் செய்கின்ற பணிகளே இறைத்தொண்டு என்று வாழ்வதே கர்மயோகம். அவ்வாறு வாழ்பவர் கர்மயோகி. நிகழ்காலத்திலே நாம் காணுகின்ற கர்மயோகியாகத் திகழ்கிறார் பிரதமர் மோடி. இவரது இறைத் தொண்டு, நாட்டின் வளமும், நாட்டு மக்களின் நலமும் என்பதாகவே இருக்கிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், பின்னர் 2014-ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமாகி, தற்போது வரையிலும் மோடி அவர்கள் ஆற்றிவரும் செயல்பாடுகள், அவர் மாபெரும் கர்மயோகி என்பதை உணர்த்தும்.

2001-இல் மோடி குஜராத் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு காலகட்டத்தில், குஜராத் மாநிலத்தின் வேளாண் வளர்ச்சி சுமார் 11 சதவிகிதம் என மிக உயர்ந்தபட்ச அளவில் இருந்தது. நீர்வளம், மின்வளம் ஆகிய இரண்டிலும் இவர் காட்டிய அசாத்திய முனைப்பே இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி குஜராத்தில் 5 லட்சம் நிலத்தடி நீர் சேமிப்புக் கட்டுமானங்கள் கட்டப்பட்டன. இவற்றில் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கட்டுமானங்கள், தடுப்பு அணைகள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் தண்ணீர் தேவையின்றி வீணாவது தடுக்கப்பட்டு முறையாகப் பயன்படுத்தப்பட்டதால் பொன் விளைந்தது.
இதேபோல், மின்சார நுகர்வையும் முறைப்படுத்தினார். “ஜோதிகிராம் யோஜனா” என்ற திட்டத்தின் மூலம், குஜராத்தின் குக்கிராமங்களுக்கும் மின்விளக்குகளையும் இதர மின்சாதனங்களையும் கொண்டுபோய்ச் சேர்த்தார். கிராமப்புற மின்சார நுகர்வில் இருந்து விவசாய மின்சார நுகர்வு தனியாகப் பிரிக்கப்பட்டு, தனிக் கவனம் செலுத்தப்பட்டது. விவசாயப் பணிகளுக்கான மின்சாரம், முறைப்படுத்தப்பட்டு தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைத்தது.
தொடக்கத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்த விவசாயிகள், பின்னர் இதனால் கிடைத்த நன்மையைப் புரிந்துகொண்டு ஆதரித்தனர். இதனால் இலவசமும் இருட்டடிப்பும் ஒரேநேரத்தில் நடைபோடும் முரண்பாடு, குஜராத்தில் இல்லாமல் போனது.

குஜராத் மாநிலத்தில் பல பொருளாதாரப் பூங்காக்களும், தொழில்நுட்பப் பூங்காக்களும் மலர்ந்தன. மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டாடா நிறுவனத்தின் நானோ சிறு கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு, குஜராத்தில் ரத்தின கம்பள வரவேற்புக் கிடைத்தது. நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களின் முறைப்படுத்தப்பட்ட பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்திருந்த மோடி, குஜராத்தில் தொழில் வளர்ச்சியையும் சாதித்தார். 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற “வைப்ரண்ட் குஜராத்” மாநாட்டில், 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பதே இதற்குச் சான்று.
2014-இல் பிரதமராகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடிக்கு, முதலமைச்சராகப் பணியாற்றி சாதித்த முன்னனுபவம் கைகொடுத்தது. நாடு முழுவதிலும் பயன்தரும் புதுப்புது திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தத் தொடங்கினார்.
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, நாட்டு நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதையே தம் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டங்களால் கிடைத்துவரும் பயன்கள், எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் சிறப்பானவை. அவரது செயல்திட்டங்கள் அவர் ஒரு கர்மயோகி என்பதை நிரூபித்து வருகின்றன.
வங்கி என்பது வசதி படைத்தவர்களுக்கு மாத்திரமே என்ற எண்ணத்தை மாற்றியமைத்தது, இவரது கர்மயோகத்தில் குறிப்பிடத் தகுந்த தலையாய விஷயம். அதுதான் ஜன்தன் யோஜனா. அதுவரை வங்கிப் பக்கமே போயிருக்காத ஏழை, எளிய மக்கள் 42 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவைத்து, நேரடி மானியங்களைப் பெற வழிவகுத்தது இந்தத் திட்டம்.
எளிமையான டிஜிட்டல் பணப்பட்டுவாடா திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் மற்றொரு மைல்கல். பீம் செயலி போன்றவற்றின் அறிமுகத்தால் மொபைல் ஃபோன்கள் மூலமான UPI தொழில்நுட்ப வழியில், கடந்த ஆண்டில் மட்டுமே இரண்டாயிரத்து 500 கோடி எண்ணிக்கையிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

சுயதொழில் நடத்துவது வசதி படைத்தவர்களுக்கு மாத்திரமே சாத்தியம் என்பதை மாற்றியமைத்தது மற்றொரு செயல்திட்டமான, முத்ரா யோஜனா. 2015-இல் அறிமுகமான இத்திட்டத்தின் மூலமாக, கடந்த ஆண்டு வரையில், சுயதொழில் செய்யும் சிறு வணிகர்களுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் மானியங்களும், இதரப் பணப்பட்டுவாடாக்களும் வழங்கப்படுவதால் ஊழலும், கருப்புப் பண உருவாக்கமும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன.
ஏழை விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் மொத்தம் ஆறாயிரம் ரூபாய் வழங்கும் கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் பதினாலு கோடியே 50 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதேபோல் “கிஸான் பென்ஷன் யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் பல கோடி விவசாயிகளுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்க வழிபிறந்துள்ளது.

சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைய தலைமுறையினருக்கு “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டம் கைகொடுக்கிறது. “மேட் இன் இந்தியா” என்ற மற்றொரு திட்டமோ, 25 பெரிய தொழில் துறைகளுக்குத் தேவையான பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும், வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் வழிசெய்துள்ளது.
ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உறுதிசெய்ய, பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்கும் “பேட்டி பசாவ், பேட்டி படாவ்” திட்டம் உறுதுணை புரிகிறது. நதிகளின் தூய்மையைப் பாதுகாக்க “நமாமி கங்கே” திட்டத்தையும், நாட்டின் தூய்மையைக் காப்பாற்ற “ஸ்வச் பாரத்” திட்டத்தையும் செவ்வனே செயல்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. இப்படிப் பல திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு கர்மயோகியின் குணநலன் என்பது, இதுபோன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதோடு அடங்கிவிடுவதல்ல. போற்றுவோர் போற்றினாலும் தூற்றுவோறும் தூற்றினாலும் அவற்றுக்கெல்லாம் மயங்கிவிடாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, துணிவாகவும், நிலைபிறழாமலும் செயலாற்றுவதே கர்மயோகியின் பண்பு. அந்த வகையில் பல அருஞ்செயல்களை பிரதமர் மோடி ஆற்றியுள்ளார்.
நாடு முழுவதற்கும் ஒரே சீரான வரி விதிப்பு என்பது வெறும் கனவாகவே இருந்த நிலையை மாற்றி, ஜிஎஸ்டி திட்டத்தின் மூலம் அதனை நனவாக்கியுள்ளார். நாட்டுக்கு நன்மை பயக்கும் வேளாண் சீர்திருத்தத் திட்டங்களை, தூண்டிவிடப்பட்ட கடும் எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்த முனைப்புக் காட்டுகிறார். பெண்ணடிமைத் தனத்தைப் போக்க, முத்தலாக் விவாகரத்து முறைக்கு முடிவு கட்டினார்.

காஷ்மீர் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை, அதனை யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்ததன் மூலம் நிலைநாட்டினார். அகதிகள் என்ற போர்வையில் நாட்டின் எதிரிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும், வெளிநாடுகளில் அல்லப்படும் நமது சொந்தங்களை அரவணைக்கவும் சி.ஏ.ஏ. சட்டத்தைக் கொண்டுவந்துள்ளார். பிரிட்டிஷ் காலத்தில் இருந்து வெறும் சுமையாக மட்டுமே இருக்கும் நூற்றுக்கணக்கான தேவையற்ற சட்டங்களை அடியோடு அகற்றினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து அவற்றுக்குத் தைரியமாக ஆதரவளிக்கிறார். ஒரு கர்மயோகியின் தலைமையில், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமிருக்காது என்பதை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல்களும், டோக்லாம் விவகாரத்தில் அண்டை நாட்டின் பிடிவாதத்தை முறியடித்த சாதுர்யமும் பறைசாற்றுகின்றன.

தேசமே பிரதானம் என்ற இந்தக் கர்மயோகியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள், பாரதத்தை உலகின் மைய அரங்குக்குக் கொண்டு வந்துள்ளன. எதிரியாக நினைத்த பல நாடுகள் தற்போது நெருங்கி வந்துள்ளன, இன்னமும் எதிரியாகக் கருதும் சில நாடுகள் எதிராகச் செயல்பட அஞ்சுகின்றன. இவரது கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகள், தேச விரோத சக்திகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை முறித்துள்ளன.

கொரோனா தொற்றுநோய் உலகை அச்சுறுத்தத் தொடங்கிய காலகட்டத்தில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் 21 நாள் தடையை வெற்றிகரமாக அமல்படுத்திய நாடு என்ற பெருமையை இவரது கர்மயோகத்தால் இந்தியா பெற்றது. அதனால்தான் குறைந்த மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகள் கூட, இத் தொற்றுநோயால் பீடிக்கப்பட்டு தள்ளாடிய நிலையில், மிகுந்த மக்கள்தொகை கொண்ட இந்தியாவினால் சமாளித்து நிற்க முடிந்தது.
இரண்டாவது கொரோனா அலை எழுந்தபோதிலும் அதனை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது. கடுமையான நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் சமாளித்து உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடிந்தது. அது மட்டுமல்ல, “ஊருக்குத்தான் உபதேசம்” என்றில்லாமல் பிறருக்குத் தனது செயல்கள் மூலமும் இந்த கர்மயோகி வழிகாட்டினார்.
சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட உள்நாட்டுத் தடுப்பூசியை முதலில் தனக்கே செலுத்திக்கொண்டு, நாட்டு மக்களை சரியான திசையில் வழிநடத்தினார்.

பாரதத்தை, வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கான பொருளாதார பலம் கொண்ட நாடாக உயர்த்த இந்தக் கர்மயோகி திட்டமிட்டு அயராது செயல்பட்டு வருகிறார். உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் நலமாக வைத்திருக்க உதவும் பாரதத்தின் பழம்பெரும் ஆன்மீக அறிவியலான யோகக் கலையை, சர்வதேச யோகாசன தினத்தின் மூலம் உலகமே கொண்டாடும் வகையில் செய்த பெருமை இந்தக் கர்மயோகியையே சாரும்.

காணொளி மூலம் நடைபெற்ற கடந்த ஆண்டு யோகாசன தின நிகழ்ச்சியின்போது, “யோகா கர்மாஸு கௌஷல்யம்” என்று எடுத்துரைத்தார் பிரதமர் மோடி. திறமையான செயல்பாடே யோகம் என்று இதற்குப் பொருள். இதற்கேற்ப தனது திறமையான செயல்பாடுகளின் மூலம் சிறந்த கர்மயோகியாகத் திகழ்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
யோகம் என்பதற்கு ஒன்றிணைத்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. நாட்டை வளப்படுத்தி, பலப்படுத்தி, அதன் பயன்களை கடைநிலையில் உள்ளவரும் அனுபவிக்க வழிசெய்யும் வகையில் அயராது செயலாற்றி வரும் கர்ம யோகியான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளில் நாமும் ஒன்றிணைவோம்!
ஜெய் ஹிந்த்! பாரத் அன்னை வெல்க!