~ ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட் ~
நம் மகாகவியான சுப்ரமணிய பாரதியார், “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்”- என்று தன் ஒரு பாடலில் கூறினார்.
புரட்சிக் கவியின் வார்த்தைகளினால் அவருக்கு பிற மொழிகளில் உள்ள நல்ல விஷயங்களை தமிழ் மொழியில் கொண்டு வரவேண்டும் என்ற அவரது அக்கறையும், பிற மொழிகளின் மேல் அவர் வைத்திருந்த மரியாதையும் விளங்குகிறது.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அதன்மூலம் பல்வேறு மாநிலங்களை, மண்டலங்களை, மதங்களை, நாடுகளை மற்றும் கண்டங்களை இணைக்க முடியும்.
தொடர்புத்துறையில் மொழிபெயர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பலவிதமான கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு சாதனமாக மொழிபெயர்ப்பு உள்ளது.
மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் எழுதப்பட்டுள்ளவற்றை மற்ற மொழிகளுக்கு எடுத்துச்செல்லும் அருமையான தொடர்பு சாதனம். இலக்கியத்தை மூலமாகக் கொண்ட மொழிபெயர்ப்பு அந்தந்த சமுதாயத்தின் பொக்கிஷமாய் உள்ளது, என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு இலக்கியமானது அந்த காலத்தின் கண்ணாடி என்று கூறும்போது- மொழிபெயர்ப்பானது, அதனை பிரதிபலிக்கும் பிம்பமாகும். மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைகளால் ஆனதல்ல. ஒரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆற்றல் பெற்றது என்கின்றனர், அறிஞர் பெருமக்கள்.
நான்கு மொழிகள் அறிந்த நாக்பூரில் வசிக்கும் மருத்துவத் துறை மாணவனான ரோஷன் பாலிவால், “எளிமையான மூல மொழிக்கு இணையான அர்த்தத்துடன் கூடிய வார்த்தைகளே மொழிபெயர்ப்பின் போது என் விருப்பம்,” என்கிறார்.
நரேந்திர சுர்கார், மூத்த பத்திரிகையாளர், தன் கருத்தை தெரிவிக்கும் போது, நேர மேம்பாடு தான் ஒரு மொழிபெயர்ப்பாளர் முக்கியமாக கவனிக்க வேண்டியது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு வேலைகளை முடிப்பதே ஒரு மொழிபெயர்ப்பாளரின் வெற்றிக்கு வழி வகுக்கும்,” என்கிறார்
“மொழிபெயர்ப்பாளருக்கு மூலமொழியில் சிறந்த அறிவும், மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியில் வலுவான திறமையும் இருக்க வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை கொண்ட மொழிபெயர்ப்பை தவிர்க்க வேண்டும்,” என்பதை வலியுறுத்துகிறார்.
வர்தாவில் இயங்கும் மகாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வவித்யாலயாவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் புத்ததாஸ் மிர்கே, “தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு பற்றிய பலவிதமான படிப்புகள் இருக்கின்றன. மாணவர்களும் ஆர்வத்துடன் புதிய புதிய மொழிகளை கற்க விழை கின்றனர். இத்துறையில் மாணவர்களுக்கு மொழிகளை கற்றுத்தரும் ஆசிரியர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகவும் பத்திரிகையாளராகவும் பணிபுரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன,” என்றார்.
புத்தகப் பிரியரான கும்பகோணத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேசன் கூறுகையில் “மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களை படிப்பது என்பதே ஒரு அருமையான அனுபவம்.வார்த்தைகள் உலகம் முழுவதும் சுற்றும் சுற்றினாலும் அதை சுற்ற வைப்பவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள். தங்கள் பணியில் ஈடுபடும்போது மொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழி பேசுகின்ற பகுதியின் வரலாற்று மற்றும் பூலோக முக்கியத்துவத்தை அறிந்தவராய் இருப்பது மிகவும் அவசியம்.
சரித்திரத்தை மூலமாகக் கொண்ட மொழிபெயர்ப்பு நூல்கள் படிப்பவர்களுக்கு அந்தந்த பகுதியின் நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் அருமையான ஒரு அனுபவத்தை கொடுக்கும். மருத்துவத் துறையிலும், சட்டத் துறையிலும் பல மொழிபெயர்ப்பு நூல்கள் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது,” என்றார்.
இன்றைய உலகமயமாக்குதல் என்னும் விஷயத்தில் தொழில் முன்னேற்றத்திற்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் மொழிபெயர்ப்பு கட்டுரைகளும் மொழிபெயர்ப்பு நூல்களும் மிகவும் இன்றியமையாததாய் உள்ளது.
பல மொழிகளை அறிந்தவராக இருந்தாலும் ஒருவருக்கு தாய்மொழி அவர்களது மனதிற்கு நெருக்கமாய் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு நல்ல வாசகர் நல்ல விஷயங்களை மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக் கொள்பவராக இருப்பார். ‘வசுதைவ குடும்பகம்’ என்னும் சமஸ்கிருத வரியானது உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற உண்மையை இக்கட்டான இக்காலத்தில் நமக்கெல்லாம் நம்பிக்கை கொடுக்கும் விதமாக உள்ளது.
ஒவ்வொருவரும் உலகப் பொருளாதாரத்திற்கும் உலக அமைதிக்காகவும் மனிதநேயத்திற்காகவும் ஒவ்வொரு மொழியிலும் கூறப்பட்டுள்ள நல்ல விஷயங்களை மொழிபெயர்ப்பின் மூலமாக அறிந்து கொள்ளும் ஒரு அருமையான தருணத்தில் நாம் இருக்கிறோம்.
மொழிபெயர்க்க பல நவீன முறைகள் இருந்தாலும் மனித அறிவினை உபயோகப்படுத்தி, வார்த்தை வளத்தை கையாண்டு, மொழியறிவை பயன்படுத்தி, சமயோஜிதமான கருத்துகளை உபயோகித்து செய்யப்படும் மொழிபெயர்ப்பே நிலைத்து நிற்கும். ஏனேன்றால் மொழிபெயர்ப்பு இயந்திரத்திற்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு கலையேயாகும்.