~ கட்டுரை: கமலா முரளி ~
மகாகவியின் பல்வேறு ஆக்கங்களைப் பற்றியும், அவரது படைப்பகளை நாம் படிக்கையிலே நாம் பெறும் ஊக்கத்தைப் பற்றியும் பத்தியாக,பத்தியாக, பக்கம் பக்கமாக கட்டுரையாளர்களும் பேச்சாளர்களும் எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் பாரதி நினைவு தின நூற்றாண்டு நிகழ்வில், அவரது இன்னொரு முகமான பன்மொழித்திறன் பற்றியும் மொழிபெயர்ப்பு படைப்புகளையும் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
‘தமிழ் மட்டும் தான் தெரியும் போடா” என வாளா இருக்கவில்லை அந்த முண்டாசுக் கவிஞன். “யாமறிந்த மொழிகளிலே …” என்று சொல்லி, “தமிழைப் போல் இனிதாவது எங்கும் காணோம்” எனக் கூறுகிறான். கிட்டத்தட்ட பதினான்கு மொழிகளை அறிந்தவர் பாரதியார். பிற மொழிகளில் நல்ல ஞானமும் அவருக்கு இருந்திருக்கிறது. மொழிகளை ஒட்டிய கலாசாரத்தையும் அறிந்தவர்.
அவர் காசியில் வசித்த காலத்தில் இந்து மத ஆன்மிக தத்துவங்களை நன்கு உணர்ந்து அறிந்து கொண்டார். அச்சமயத்தில் அவர் சம்ஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நல்ல தேர்ச்சியும் பெற்றார்.
1904 ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் இதழில் துணை ஆசிரியரான பாரதியார், ஆங்கிலத்திலிருந்த படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இயற்கையைப் பாடும் ஷெல்லி ,பைரன் மற்றும் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகளை அதன் அழகுணர்ச்சியை உள்வாங்கியவர்.தன்னை, ‘ஷெல்லிதாசனாக’ வரித்துக் கொண்டவர்.
அவர் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களுக்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். 1906 ஆம் ஆண்டில், ‘இந்தியா’ தமிழ் இதழ் மற்றும் ’பாலபாரதம்’ ஆங்கில இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவர் பாண்டிச்சேரியில் இருந்த போது பிரெஞ்சு மொழியையும் நன்கு அறிந்து கொண்டார். ’இந்தியா’ இதழ் பாண்டிச்சேரியில் இருந்து வெளிவரத் தொடங்கியது. “ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸகோதரத்துவம்” என்ற புகழ் பெற்ற பிரெஞ்சு சொற்கள், ’இந்தியா’ இதழின் முகப்பில் காணப்படும்.
பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அவர் அன்டொய்ன் ஆர்லோக் ( Antoine Arloque) என்பவரிடம் பிரெஞ்சு கற்றுக் கொண்டார். மிக விரைவிலேயே சரளமாகப் பேசவும், பிரெஞ்சு தேசியகீதம் பாடவும் கூடக் கற்றுத் தேர்ந்தார்.
ஒரு ஐரோப்பியர் பாடுவது போல, பேசுவது போல சிறப்பாக இருக்குமாம்.
பிரெஞ்சு தேசிய கீதத்தின் முதல் இரண்டு பத்திகளை, “போர்க்கோலம் பூணுவீரே” என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் பாரதியார். பிரெஞ்சு அரசியல்,கலாச்சாரம் மற்றும் பிரெஞ்சு தத்துவங்களும் சொல்லாடல்களும் அவரது படைப்புகளில், குறிப்பாகக் கட்டுரைகளில் விரவிக்கிடக்கும். ரூசோ, வால்டேர், மான்ட்ஸ்கியூ போன்றோரின் தாக்கத்தையும் காணலாம்.
வழிபாட்டு முறைகளின் ஊடே தலைவிரித்தாடும் மூடநம்பிக்கைகளைச் சாடும் , இடைத்தரகர்களாய் இருக்கும் பூசாரிகளைச் சாடும், மான்ட்ஸ்கியூ எழுதிய “The Spirit of Laws” என்ற நூலின் தாக்கத்தை ,”அறிவே கடவுள்” கவிதையிலும் மற்றும் ”யாரைத் தொழுவது ? கட்டுரையிலும் காணலாம்.
”பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனை காலம் ஒரு மோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வங் காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் “சீக்கிரம் வெளுத்துப் போகிறது. ” (’யாரைத் தொழுவது’ கட்டுரை.)
வால்டேரின் ‘எல்டராடோ’ தீவின் தாக்கம்,”சந்த்ரத்வீப’த்திலும், ரூசோவின் ‘ தீ சோஷியல் காண்ட்ராக்ட்”டின் தாக்கம் ‘ராஜ்யசாஸ்த்ரம்’ கட்டுரையிலும் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
“செல்வம்” என்ற கட்டுரையில் லெனின் மற்றும்,மின்தொர்ஸ்கி போன்ற புகழ் பெற்றோரின் கோட்பாடுகளைக் குறிப்பிடும் பாரதியார்,பிரெஞ்சு நாட்டின் ப்ருதோம் அவர்களின் சொற்களை மேற்கோளாகச் சொல்கிறார்.
‘அன்னவிசாரம் அதுவே விசாரம்” என்று பட்டினத்துப் பிள்ளைசொல்லியது போல், உங்களுக்கு இந்த ஆகார விசாரம் தீராத பெரு விசாரமாக வந்து மூண்டிருக்கிறது. நியாயமானஉழைப்பாலோ, அல்லது ப்ரூதோம் என்ற பிரான்ஸ்தேசத்து சாஸ்திரி, ‘உடைமையாவது களவு’ என்ற”சொல்லியபடி வஞ்சனைத் தொழில்களாலே, இந்தஊரிலுள்ள வயல்கள் தோட்டங்கள் எல்லாவற்றையும்எங்கள் சிலருக்கு மாத்திரம் உரிமையாகும்படி ஏற்பாடுசெய்துவிட்டார்கள்”.
( ’செல்வம்’ கட்டுரை)
பாரதியார் வங்காள மொழி மேதைகளான விவேகானந்தர், பக்கிம்சந்திரர் மற்றும் தாகூர் அவர்களது எழுத்துகளாலும் மிகவும் கவரப்பட்டார். அரவிந்தரின் தாக்கமும் அவரிடத்தில் உண்டு. தாகூரின் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பக்கிம் சந்திரரின் “ஆனந்த மடம்” புதினம் அவரால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ’வந்தேமாதரம்” பாடலை, இருமுறை :
“இனிய நீர்ப் பெருக்கினை ! இன்கனி வளத்தினை!”
எனத் தொடங்கும் பாடல் முதல் முறையாகவும்,
“நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்”
எனத் தொடங்கும் பாடலை இரண்டாம் முறையாகவும்… ஒரே பாடலை இரு வேறு சொற்த்தொகுப்புடன் மொழி பெயர்த்துள்ளார். அரவிந்தரின் படைப்புகளின் தாக்கம், “அக்கினி குஞ்சொன்று கண்டேன்’ பாடலாக உருவெடுத்தது.
சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றிருந்த பாரதியார் சம்ஸ்கிருதத்திலிருந்து பதஞ்சலி யோக சூத்ரம், வியாச பாரதம் ( பாஞ்சாலி சபதம்), பகவத் கீதை, வேதங்கள் மற்றும் உபநிடதங்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் .1913-15 ஆம் ஆண்டில் ‘வேதரிஷிகளின் கவிதை”யைத் தமிழிலில் மொழி பெயர்த்தார். அது, தொடர்ந்து மூன்றாண்டுகள் “ஞானபானு” இதழில் வெளிவந்தது. ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் இருந்து 178 ரிக்குகளை மொழி பெயர்துள்ளார்.ஈஸாவாஸ்ய உபநிடதம் மற்றும் கேநோபநிடதத்தையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 1922 ல் , பாரதியாரின் பகவத் கீதையின் தமிழாக்கம் வெளி வந்தது.
பாரதியாரின் ஆங்கில ஞானமும் அளப்பரியது. பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. ( 1937 ஆம் ஆண்டு : அக்னி முதலிய பாடல்கள்,மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள்).
அவரது, ‘கற்பனையூர்” ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையே ! ஜான் ஸ்கார் (John Scarr ) எழுதிய, ‘தி டௌன், லெட்ஸ் பிரிடெண்ட்” (The Town Lets Pretend ) என்ற கவிதை, கற்பனையூராக மலர்ந்துவிட்டது.
தனது பாடல்களைத் தாமே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.சில ஆழ்வார் பாசுரங்களை மொழிபெயர்த்துள்ளார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையே வெளியுட்டுள்ளார்.
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்றும் சொல்லி உள்ளார்.
அதே பாடலில்
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்”
என்றும் சொல்லியுள்ளார்.
இந்த இரண்டு வகைப் பணிகளையும் பாரதியாரே செய்துள்ளார். பாரதியார் நேரடி மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார்.
பாரதியாரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு :
தற்போது, மொழிபெயர்ப்பு இலக்கியம் வளர்ந்து வரும் சூழலில், பாரதியாரின் படைப்புகளும் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுதல் சாத்தியமே !
பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே அவரது படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். காந்திஜி தனது “யங் இந்தியா” ஆங்கில இதழிலும், “நவ ஜீவன்” குஜராத்தி இதழிலும் , பாரதியாரின் பாடல்களின் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ராஜாஜி அவர்களும் பாரதியின் பாடலை மொழிபெயர்த்துள்ளார்.
அயர்லாந்து நாட்டு ஜேம்ஸ் ஹெச் கஸின்ஸ் என்ற புலவர் 1916 மற்றும் 1917ல் பாரதியாரின் ‘விடுதலை’ என்ற பாடலையும்,’கண்ணம்மா என் காதலி” என்ற பாடலையும் மொழிபெயர்த்துள்ளார்.
பிற மொழிகளைத் தூற்றாமல், நம் மொழியைப் பேணிப் போற்றும் கலையை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்.