spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்தாய்மொழியின் தனித்துவம்!

தாய்மொழியின் தனித்துவம்!

- Advertisement -

தாய்மொழியின் தனித்துவம்

– ஜெயஸ்ரீ எம்.சாரி –

தாய்மொழி, இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஏற்படும் ஒர் உற்சாகத்தை கூறவும் வேண்டுமோ?

தமிழகத்தில் சிறு வயதில் இஸ்லாமியர் தோழிகளின் வீடுகளில் பேசப்படும் ஹிந்தியோ, உருதோ, பிற மாநிலங்களில் இருந்து நம் தமிழகத்தில் குடியேறியவர்கள் தங்கள் வீடுகளில் அவர்கள் தத்தம் தாய்மொழியில் பேசும் போது வியப்பாகவே இருந்தது. குறைந்தப் பட்சம் மூன்று மொழிகள் தெரிந்தவர்களாய் இருந்தனர்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் பல ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு என் பெற்றோர் என்னை அழைத்துச் சென்றதாலும், பொழுதுபோக்கிற்காக வார, மாத இதழ்கள் படித்ததாலும், கல்லூரியில் தமிழ் இரண்டாம் வருடம் வரை இருந்ததாலும் தமிழின் மேல் அபரிவிதமான அன்பே ஏற்பட்டது. தமிழ் என்னும் பொக்கிஷத்தில் உள்ளவற்றை படிக்க படிக்க அமுதாய் உள்ளதை என்னால் உணர முடிகிறது.

நம் தமிழ் மூதாட்டி ஓளவையாரின் வாக்கான ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பதே நமக்கு நாம் கற்பதை எந்த வயதிலும், எந்த சந்தர்ப்பத்திலும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் வண்ணமாய் இன்றும் நம்மால் அறியப்படுகிறது.

என் திருமணமான பின் மராட்டியத்திற்கு வந்த போது எனதருமை தமிழை நான் மிகவும் இழந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, என் வீட்டில் இருந்தவர்கள் என்னிடம் மட்டுமாவது தமிழில் பேசினர். மூன்று தலைமுறையாய் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்ததால் என் குடும்பத்தினருக்கோ மராட்டியே தாய்மொழியானது.
எனக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லவோ கொஞ்சம் தயக்கம். ஹிந்தியும் அரைகுறை, மராட்டியோ அறிமுகமே இல்லை. என் நிலையைப் புரிந்த கடவுளே எனக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியத்தை கொடுத்தாரென்றே நினைக்கிறேன். நான் குழந்தையை வெளியில் அழைத்துச் செல்லும் சாக்கில் கொஞ்சம் பிறரிடம் பேச முயற்சி செய்ததனால் எனக்கு கொஞ்சம் உள்ளூர் மொழியும் பழக்கமானது.

நானும், என் பையனும் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம். இதற்கிடையில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பச்சமரி ( Pachmarhi) என்ற இடத்திற்கு சென்றோம். அங்கு, பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் சென்றுக் கொண்டிருந்தோம். தீடீரென்று என் பையனை காணவில்லை. பதறியடித்து தேடினோம். அது வேறு மலைப்பிரதேசம். எங்கள் தேவையில்லாத கற்பனை வேறு எங்களை பயமுறுத்தியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் என் குழந்தையை தேடினோம். பார்த்தால், அவன் ஒரு குடும்பத்தினருடன் உட்கார்ந்திருந்தான். எங்களுக்கும் அப்போது தான் நிம்மதியானது. நாங்கள் எல்லோரும் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த போது குழந்தை கடகடவென முன்னேறி சென்றுள்ளான். பின்னர், நாங்கள் அவனுக்கு தெரியாததால் ‘அப்பா, அப்பா’ என்று குரல் கொடுத்துள்ளான். அதிர்ஷ்டவசமாக அங்கேயும் ஒரு தமிழ் குடும்பம் இருந்ததால் அவர்கள் குழந்தையை தங்களுடன் வைத்துக் கொண்டனர். நாங்களும் அவர்களுக்கு நன்றி கூறி குழந்தையை அழைத்து வந்தோம். அன்று தமிழால் என் குழந்தையும் கிடைத்தான். என் குடும்பத்தில் ஒருவர் குழந்தை ‘அப்பா மொழி தானே பேசினான். தாய்மொழி பேசவில்லையே என்றார். உடனே, நான் தமிழ் மொழி பேசி கிடைத்து விட்டானே, அதுவே போதும் என்றேன்.

இன்னொரு உதாரணமும் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் தமிழில் கட்டுரைகள் எழுதும் போதெல்லாம் திருவள்ளுவரையும், பாரதியாரையும் குறிப்பிடும் போது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கும். நான் எழுதியவற்றின் சாரத்தை என் கணவர் மற்றும் என் பையன்களுக்கு சொல்லி விடுவேன். அதனால் அவர்களுக்கு திருவள்ளுவர் பற்றியும், பாரதியார் பற்றியும் அறிந்துள்ளனர். என் இரண்டாவது பையன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பாரதியாரின் கவிதையான ‘காற்று’ ஆங்கிலத்தில் ‘The Wind” என மொழிபெயர்க்கப்பட்டு பாடத்திட்டத்தில் இருந்தது. அந்த மாதம், ஒரு நாள் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடந்தது.அப்போது ஆங்கிலம் எடுக்கும் ஆசிரியை “உங்கள் பையன் இங்கே இருந்தாலும் புரட்சிக் கவிஞர் சுப்ரமணிய பாரதியைப் பற்றி தெரிந்து வைத்திருக்கான்.,” என்றார்.

மேலும் அந்த ஆசிரியை, “நான் அவனிடம் அதைப் பற்றி கேட்டபோது, எங்கள் அம்மா எழுதும் கட்டுரைகளில் பாரதியாரின் வரிகளை உபயோகப்படுத்துவார், அதனைப் பற்றி எனக்கும் சொலவ்வார் என்றான்,”, என்றார். இதனால் அவனோடு சேர்ந்து எனக்கும் பாராட்டுக் கிடைத்தது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஷேகாவ் என்னும் இடத்தில் மஹாராஷ்டிர துறவிகளில் ஒருவரான கஜானன் மஹாராஜ் கோயில் உள்ளது. அதனருகில் உள்ள ஒரு கார்டனில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகழ்பெற்றவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் நம் திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இதனைப் பற்றி நாக்பூரில் இருந்து வெளிவரும் ‘தி ஹித்வாத்’ நாளிதழில் ஆங்கிலத்தில் திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரிப்போர்ட் எழுதினேன். அதன் பிறகு, பிரதமர், தன் சுதந்திர தின உரையில் ‘நீரின்றி அமையா உலகு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். உடனே, என் அலுவலகத்தில் இருந்த மராட்டியரான சப்- எடிட்டர், ” மேடம், உங்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை இன்று பிரதமர் கூறினார்,” என்றார். கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆன பின்பும் அவருக்கு நினைவில் இருந்ததே அதுவே நம் திருவள்ளுவரின் புகழ் போலும்.

இவ்வாறு ஒருவருடன் ஒருவர் தம்மை தொடர்புக் கொள்ளும் சாதனமாக இருப்பதே மொழியாகும்.

தாயின் மூலமாக அறிமுகப்படுத்துவதன் காரணமாகவே இதற்கு தாய்மொழி என்று பெயர் வந்ததோ? அல்லது சிறு வயதிலிருந்து ‘யாரும் ஊரே யாவரும் கேளீர்’ என்றக் கோட்பாடுடன்
நாம் இருக்கும் சூழ்நிலையில் பேசப்படும் மொழியை தாய்மொழி என்பதா? அல்லது எந்த மொழியில் நாம் சிந்திக்கிறோமோ, அந்த மொழியை நாம் தாய்மொழியாக கொள்கிறோமோ? இது சிந்தனைக்கு உள்ளாகும் விஷயமாகிறது.

அது எவ்வாறாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியும் சிறப்பானவையே, தனித்தன்மையுடையவே. அவர் அவர்களுக்கு அவரவர் தாய்மொழியினால் பெருமையே. அதிக மொழிகள் தெரிந்திருக்க வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயமாகும். அதே சமயத்தில், நாம் போற்றும் நம் தாய்மொழியும் நமக்கு கண்கள் போலவே. எந்த தாய்மொழியும் மனித நேயத்தையே வலியுறுத்தும் ஒரு ஊடகமாக இருக்கிறது, இருக்கவும் வேண்டும் என்பதே முற்றிலும் உண்மை.

மகாகவி பாரதியாரே ” பிற மொழிகளில் உள்ள நல்ல நூல்கள் எல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்’ என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

நம் தாய்மொழியை நேசிப்போம். பிற மொழிகளை மதிப்போம், கற்போம். நம் தமிழ் மொழியிலேயே தமிழ் தெரிந்தவர்களிடம் உரையாடுவோம். குழந்தைகளுக்கும் தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து அடுத்த தலைமுறையினருக்கு நம் மொழியை கொண்டு செல்ல வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது.

வாழ்க பாரத அன்னை, வாழ்க அவளது மொழிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe