spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்கோவையில் நவஇந்தியாவும் கலைக்கதிரும், மதுரையில் தமிழ்நாடும்!

கோவையில் நவஇந்தியாவும் கலைக்கதிரும், மதுரையில் தமிழ்நாடும்!

- Advertisement -

கோவை நகரில் 1970களின் துவக்கம் வரை நவஇந்தியா என்ற தினசரி ஏடு வெளியானது. அதற்கென்று ஒரு வரலாறு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர், சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழக சட்ட மேலவையின் உறுப்பினர் என்ற பொறுப்புகளை வகித்த உண்மையான, நேர்மையான கல்வித் தந்தையான பி.எஸ்.ஜி. கல்லூரியின் நிறுவனர் ஆசிரியராக கொண்டு வெளிவந்த தமிழ் அறிவியல் ஏடான கலைக்கதிர் என்பவை கோவையின் அடையாளங்கள் ஆகும்.

இன்றைக்கும் அவினாசி சாலையில் பீளமேடு பகுதியில் லட்சுமி மில்லுக்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தை நவஇந்தியா என்று நடத்துனர்கள் பேருந்தில் செல்லும் போது கூவிச் சொல்வதுண்டு.

அதைப் பற்றியான செய்திகளையும், வரலாற்றையும் கோவையில் இருக்கும் மக்களுக்கே தெரியாமல் இருப்பது வேதனையான இருக்கின்றது. கடந்த வாரம் கோவை சென்ற போது ஒரு கல்லூரிப் பேராசிரியர் நண்பர் சந்திக்க வந்தார். என்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் வீடு எங்கிருக்கிறது என்று சொல்லும் போது நவ இந்தியா என்றார். ஓ! நவஇந்தியா மில் பக்கத்திலா இருக்கிறது என்று சொன்னபோது எனக்கு கோபம் கலந்த ஆச்சரியமான மனநிலைக்கு வந்தேன். என்னடா, ஒரு பேராசிரியருக்கு நவஇந்தியா பத்திரிக்கையைப் பற்றி கூடத் தெரியவில்லை என்று வேதனைப்பட்டேன்.

1950 களிலும் 1960 களிலும் கோவையில் பிரசித்தி பெற்ற நாளிதழ் ஒன்று அந்த இடத்திலிருந்து தான் வந்து கொண்டிருந்தது! அந்த நாளிதழ் தயாரான அலுவலகம், அச்சகம், அனைத்துமே இன்னமும் கூட அப்படியே பழமை படிந்த நிலையில் இருக்கின்றன! அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றிய அந்த இடம் இப்போது பார்க்க சோகமாக இழந்த நிலையில் இருக்கின்றது. எத்தனை பெரிய ஆளுமைகள் வந்து சென்ற இடம்.

kalaikatirநவ இந்தியா நின்ற பின் அங்கே எந்தச் செயல்பாடும் இல்லை, எனினும் ‘நவ இந்தியா’ எனும் பெயரை நினைவுபடுத்திக் கொண்டு அந்த நிறுத்தத்தில் இறங்கி வடக்கு நோக்கி எஸ்.என்.ஆர். கல்லூரி ரோட்டில் ஆவாரம்பாளையம் செல்வோரும், தெற்கு நோக்கி இந்துஸ்தான் கல்லூரி ரோட்டில் செல்வோரும் தினந்தோறும் கடந்து போகும் சந்திப்பாக உள்ளது.

1961 – ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த ‘நவ இந்தியா’ நாளிதழ் அப்போது பிரபலமாக இருந்த திரையுலக நடிகர், நடிகைகளின் படங்களை வரைந்து அனுப்பினால், அவற்றில் சிறப்பான படங்களுக்குப் பரிசளிப்பும், அந்தப் படங்களைப் பிரசுரிப்பும் செய்வதாக ‘போட்டி’ ஒன்றை அறிவித்தது! அந்த அறிவிப்பைப் பார்த்து அதிலே கலந்து கொண்டவர் பலர்! அதிலே சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களும் சிலர்!

அவர்களிலே ஒருவர் தான் வரைந்த மூன்று படங்களை அந்தப் போட்டிக்கு அனுப்பி வைத்து, பரிசுக்குரியவராக வெற்றி பெற்றார்! அவர் அனுப்பிய படங்கள் சிவாஜிகணேசன், பத்மினி, டெய்சிராணி ஆகியோரின் முகத்தோற்றங்கள் ஆகும்! இதில் முதலாவது படம், அப்போதைய நாடகமொன்றில் சிவாஜிகணேசன் ஏற்றிருந்த முதியவர் தோற்றம்! இரண்டாவது படம் சம்பூர்ண ராமாயணம் படத்தில் பத்மினியின் தோற்றம்! மூன்றாவது படம் பையன் வேடத்தில் நடித்திருந்த டெய்சிராணி எனும் குழந்தை நட்சத்திரத்தின் தோற்றம்! ஆக இந்த மூன்றுமே பரிசு பெற்று தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று நாட்கள் பிரசுரமாகி, பலருடைய பாராட்டுதல்களையும் பெற்றன.

அதை வரைந்து அனுப்பிய ஓவியக் கல்லூரி மாணவர், ஒவ்வொரு படத்தையும், ஒவ்வொரு விலாசத்திலிருந்து அனுப்பி வைத்தார். அவர் வேறு யாருமில்லை. நமது திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் தான்.

‘நவ இந்தியா’ கோவையிலிருந்து வெளிவந்த அந்த கால கட்டத்திலேயே சென்னையில் இருந்து நவசக்தி, நவமணி எனும் நாளிதழ்களும் வெளிவந்து கொண்டிருந்தன. பின்னர் 1980 களின் மத்தியில் ‘நமது இந்தியா’ என்ற நாளிதழும் கோவையில் இருந்து வெளிவந்தது.

அந்தப் பத்திரிகையில் பணியாற்றியவர்களில் டி.சி. ராமசாமி அவர்கள், தொன்னூற்று ஐந்து வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் முதிய நிலையிலும் இப்போதும் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். ஆங்கிலத்திலிருந்து அருமையான படைப்புகளை மொழிபெயர்த்தவர்.

ஆர். சண்முகசுந்தரத்தின் கட்டுரைகளும், இ. பாலகிருஷ்ண நாயுடுவின் ‘டணாய்க்கன் கோட்டை’ நாவலும், ‘நவ இந்தியாவில்’ வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்ததை வசந்த காலமாக எண்ணிக் கொள்ளலாம்.

இந்த ‘டணாய்க்கன் கோட்டை’ நாவலை ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான திலகவதியின் அம்ருதா பதிப்பகம் வெளியிட்டது. நவ இந்தியா, ஒன்றுபட்ட இந்தியாவினுடைய ஒருமைப்பாடு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவான நிலை என்ற வகையில் இந்த ஏடு தன் பணியைச் செய்தது. மத்திய முன்னாள் அமைச்சர் பிரபுவுடைய தந்தையார் பி.ஆர். இராமகிருஷ்ணனுடைய முயற்சியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம், லட்சுமி மில் ஆலை அதிபர்கள் ஜி.கே.தேவராஜூ, ஜி.கே. சுந்தரம், பொள்ளாச்சி நா. மகாலிங்கம், ஜி.ஆர்.தாமோதரன், போன்றவர்களுடைய ஆதரவும் இந்த பத்திரிக்கைக்கு உண்டு. இன்றைக்குள்ள பத்திரிக்கைகளை பார்க்கும்போது மதுரையில் தியாகராஜ செட்டியார் நடத்திய தமிழ்நாடு, நவ இந்தியா போன்ற ஏடுகள் பாரபட்சமில்லாமல் நேர்மையான செய்திகளை மக்களுக்கு வெளிக்கொணர்ந்து வந்தது.
கோவையிலேயே 1948ம் ஆண்டில் ஜி.ஆர்.தாமோதரன் நடத்திய கலைக்கதிரும் முக்கியமான மாதச் சஞ்சிகையாகும்.

அருமைத் சகோதரர் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் திரு. பிரபாகரன், கலைக்கதிரை 60,70களில் வாங்கிப் படித்து அதை பைண்ட் செய்து வைத்து பாதுகாப்பது வாடிக்கை என்று சொன்னார். 1985 காலக்கட்டத்தில் அவரோடு கோவை சென்ற போது கலைக்கதிர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்று சொன்னார். என்னுடைய உறவினர் தாமோதரனை அழைத்துக் கொண்டு அவிநாசி சாலையில் உள்ள கலைக்கதிர் அலுவலகத்திற்கு சென்றோம்.

அந்த இடத்தினைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு இயந்திரங்களை எல்லாம் பார்த்தார். இப்படியெல்லாம் வருமான நோக்கில்லாமல் ஏடுகளையும், சஞ்சிகைகளையும் நடத்திய காலங்கள் உண்டு.

கருமுத்து தியாகராஜ செட்டியார் தமிழ்நாடு என்ற ஏட்டினை மதுரையில் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். தமிழ் பற்றின் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தினார். இந்து நாளிதழ் உரிமையாளர்கள் மதுரைப் பதிப்பு வெளியிட விரும்பி அதனோடு, அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. 1960, 70 கள் வரை இந்த ஏடு தினசரி ஏடாக வந்தது. இது குறித்து பல முறை பழ. நெடுமாறன் அவர்களோடு இருந்தபோது பலமுறை இந்த ஏட்டைப் பற்றி சொல்லிக் கேட்டதுண்டு.

அவருடைய தந்தையார் தியாகராஜ செட்டியாருக்கு நெருக்கமான நண்பர். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1950களில் எம்.ஏ படித்து முடித்தவுடன் தமிழ்நாடு பத்திரிக்கைக்கு வேலைக்கு அனுப்பினார். அந்த அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பத்திரிக்கை செய்திகளை ஒவ்வொன்றாக சேகரித்து ஒருங்கினைத்து திரு. செட்டியாரிடம் ஒப்புதல் பெற்று அச்சிட்டு வெளியிடும் பொறுப்பு நெடுமாறனிடம் இருந்தது. அந்த பத்திரிக்கையில் எந்த ஒரு இடத்திலும் பிழை இல்லாமல் இருப்பதை கவனமாக கொண்டிருந்தார். அப்படி பிழை ஏற்பட்டால் அதில் சம்மந்தப்பட்டவரை பணியில் இருந்து நீக்கிவிடுவாராம் செட்டியார்.

தன்னுடைய வருமானத்தில் லாப நோக்கில்லாமல் தமிழ்நாடு இதழ் நடத்தப்பட்டது. தமிழ்நாடு இதழின் இலச்சினை வட்டத்துக்குள் கோவில் கோபுரம் இருக்கும்.
நவ இந்தியா, கலைக்கதிர், தமிழ்நாடு பத்திரிக்கைகளை என் தந்தையார் சந்தா கட்டி இரண்டு நாட்கள் கழித்து தபாலில் வரும். அப்போது இந்த பத்திரிக்கைகளை எல்லாம் பார்த்துள்ளேன்.
தியாகராஜ செட்டியாருடைய பணி, தன்னுடைய தொழில் சார்ந்தது மட்டுமில்லாமல், நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய தொண்டு யாராலும் மறுக்க முடியாது. இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.

இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும் அமைத்தார்.

தமிழ்நாட்டில் இந்தியைத் தேசிய மொழியாக ஏற்பாடமாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்த கொள்கைகளை எதிர்த்தவர்களுள் இவரும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக இளம் வயது முதல் தாம் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.

ஜனவரி 19_ந்தேதி, திருச்சியில் “இந்தி எதிர்ப்பு மாநாடு” ஒன்றை “முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் நடத்தினார். மாநாட்டுக்கு பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். கருமுத்து தியாகராஜ செட்டியார் தமிழ்க்கொடி ஏற்றி வைத்தார்.

இப்படியான பெருந்தகைகள் நாட்டின் நலனுக்காக பத்திரிக்கைள், ஏடுகளை நடத்திய காலமுண்டு. இன்றைக்கு ஏடுகளுடைய நோக்கமும், புலனாய்வு என்ற முறையில் மக்களை திசைத் திருப்புகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நேர்மையான பத்திரிக்கைகளும், பத்திரிக்கை தர்மமும் காக்கப்பட வேண்டுமென்ற பெருந்தகைகளை எத்தனை பேர் அறிவார்கள்.

#நவஇந்தியா
#கலைக்கதிர்
#கோவை
#தமிழ்நாடு
#மதுரை
#கருமுத்துதியாகராஜசெட்டியார்
#பிரபாகரன்
#KSRadhakrishnanpostings
#KSRpostings

கட்டுரை: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe