பத்மன்
பாரதப் பண்பாட்டில் பண்டிகைகள் எல்லாமே, உட்பொருள் நிறைந்த தத்துவங்களை உள்ளடக்கியபடி, வெளிப்புறச் சடங்குகளால் விமரிசையாகக் கொண்டாடப்படும் வகையில் அமைந்துள்ளன. புத்தாண்டும் அவ்வகையில் பொருள் பொதிந்த விழாவே! தமிழகம் உட்பட பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசந்தத்தை வரவேற்கும் திருநாளே, சித்திரையில் பிறக்கும் புத்தாண்டு தினம்.
பூமத்திய ரேகைக்கு நேர் மேலே சூரியன் செங்குத்தாக வந்து, பகலும் இரவும் சரிசமமாக இருக்கும் நாளை, பகலிரவுச் சமநாள் (Equinox) என்பார்கள். அந்தச் சமநாளில் இரவுப் பொழுதும், பகல் பொழுதும் சரிசமமாக இருக்கும். இந்தச் சமநாள் ஆண்டுக்கு இரு முறை வரும். பகல் பொழுது அதிகமாக இருக்கும் வேனில் காலத்தின் தொடக்கத்திலும், அதற்குப் பின் 6 மாதங்கள் கழிந்து, இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் குளிர்காலத்தின் தொடக்கத்திலும் இந்தச் சமநாள் வரும்.
இவற்றில், முடக்கிப் போடும் பனிக்காலம் நீங்கி, சூரியனின் பொற்கதிர்கள் வீரியம் பாய்ச்சும் இளவேனிற்காலத்தின் தொடக்கத்தையே நம் முன்னோர்கள் புத்தாண்டு தினமாக வகுத்தனர். ஒரு நாளின் தொடக்கம் எவ்விதம் சூரியனின் முதல் கிரணம் பூமியில் விழுகின்ற விடியலில் தொடங்குகிறதோ, அதைப்போல வருடத்தின் தொடக்கமும் சூரியனின் கதிர்கள் இதமளிக்கும் வெம்மையாக விழத் தொடங்குகின்ற இளவேனில் காலத்தில் தொடங்குகிறது.
ஆறுவகைப் பருவங்களில், சித்திரை, வைகாசி என்ற இரு மாதங்களே இளவேனில் பருவகாலத்துக்கு உரியவை. வானியல் கணக்கின்படி சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். மேஷம் என்றால் ஆடு. வானத்தில், ஆடு போல் தோற்றம் அளிக்கின்ற ராசிக் கூட்டத்தின் ஊடாக சூரியன் பிரவேசிக்கின்ற நாளே ஆண்டின் தொடக்கமாகும். சித்திரை மாதமே ஆண்டின் தொடக்க மாதம் என்பதற்கு, சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடை சான்று பகர்கிறது. “திண்நிலை மருப்பின் ஆடு தலைஆக, விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” என்பன அந்தப் பாடல் வரிகள் (160-161). வீங்குசெலல் மண்டிலம் என்பது சூரியனைக் குறிக்கும். “ஆகாயத்திலே, திண்மையான நிலைத்த கொம்பைக் கொண்ட ஆடு போல் தோற்றமளிக்கும் மேஷ ராசி தொடங்கி, ஏனைய ராசிகளில் சென்று திரிகின்ற, மிகுதியான இயக்கத்தைக் கொண்ட சூரியன்” என்று இதற்குப் பொருள். ஆகையால்தான், சூரியனின் பயணம் தொடங்குகின்ற சித்திரை முதல் நாளைப் புத்தாண்டு தினமாக நம் முன்னோர்கள் கொண்டனர்.
மேஷ மாதம் என்ற சித்திரை மாதத்தைத்தான் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதற்குக் கூடுதல் ஆதாரங்களும் உள்ளன. பத்துப்பாட்டைச் சேர்ந்த மலைபடுகடாம் என்ற மற்றொரு நூலில் “தலைநாள் பூத்த பொன்இணர் வேங்கை” என்ற வரி (305) வருகிறது. தலைநாள் என்றால் ஆண்டின் தொடக்க நாள் என்று பொருள். பொன் போன்ற நிறத்தில் கொத்துக் கொத்தாகப் பூக்கும் இயல்பைக் கொண்ட வேங்கைப் பூ, சித்திரையில்தான் பூக்கும். ஆகையால்தான் ஆண்டின் தொடக்கத்தில் பூத்தது என்பதைக் குறிக்க “தலைநாள் பூத்த” என்று மலைபடுகடாம் ஆசிரியர் பெருங்கௌசிகனார் கூறியுள்ளார். இதேபோல், புலவர் நத்தத்தனார் பாடியுள்ள சிறுபாணாற்றுப்படை என்ற நூலிலும் சித்திரை முதல் தேதி தலைநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்” என்பது அந்தப் பாடல் வரி (147). இளவேனிற்காலம் தொடங்குகின்ற சித்திரை முதல் நாளில் பூத்துள்ள செருந்திப் பூ (நெட்டுக்கோரைப்பூ), தன்னைக் கண்டாரைப் பொன்னோ என்று வியக்கவைக்கிறது என்று இதற்குப் பொருள்.
இதேபோல் சித்திரையில் பொன்போலும் பூக்கள் பூக்கத் தொடங்குவதை வால்மீகி மகரிஷி எழுதியுள்ள ராமாயணமும் தெரிவிக்கிறது. “சைத்ர: ஸ்ரீமான் அயம் மாஸ: புண்ய: புஷ்பிதகானன:” என்பன அவ்வரிகள். “சித்திரை மாதம் ஸ்ரீ எனப்படும் வளமையோடு கூடியிருக்கிறது. இதேபோல் மகாவிஷ்ணுவும் ஸ்ரீ எனப்படும் திருமகளோடு கூடியிருக்கிறார். மாதங்களில் ஆதி மாதம், சித்திரை. தேவர்களில் ஆதிமூலர், மகாவிஷ்ணு. சித்திரை மாதத்தில் தொடங்கப்படும் செயல்கள் நற்பலன்களைத் தருவதைப்போல், திருமாலும் புண்ணியமாகிய நற்பலனைத் தருகிறார். சித்திரை மாதத்தில் செடிகளின் உச்சியில் பூக்கள் பூத்திருப்பது செடிகளுக்கு மகுடம் வைத்தாற்போல் இருக்கும். திருமாலும் பூக்கள் நிறைந்த மகுடத்தைச் சூடியுள்ளார்” என்று வால்மீகி சிலேடையாகக் கூறியுள்ளார்.
இவ்விதம் பூக்கள் பூக்கத் தொடங்கும் இளவேனில் காலத்தைத்தான் வசந்தகாலம் என்று நம் முன்னோர்கள் வரவேற்றனர். இவ்வகையில் வசந்த காலத் தொடக்கமாகிய சித்திரையில் புத்தாண்டும் மலர்கிறது. இந்தச் சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு மாத்திரம் உரியது அல்ல, நாட்டின் பெரும்பாலான பகுதியினருக்கும் சித்திரை முதல் நாளே புத்தாண்டு. ஆயினும் சூரிய நாட்காட்டி, சந்திர நாட்காட்டி ஆகிய இருவேறுபட்ட நாட்காட்டிகளின் அடிப்படையில் புத்தாண்டு பிறக்கும் தினம் மாறுபடுகிறது.
சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில், சித்திரை மாதத்தின் முதல் நாளன்று, பெரும்பாலும் ஆங்கில மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி, புத்தாண்டு பிறக்கிறது. தமிழர்களால் “புத்தாண்டு” கொண்டாடப்படும் இதே தேதியில் கேரளத்தில் சித்திரை விஷு என்ற பெயரில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், பஞ்சாப், ஹரியாணாவில் பைசாகி என்ற பெயரிலும், ஜம்மு, ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மேஷ சங்கராந்தி என்ற பெயரிலும், கர்நாடக மாநிலத்தில் துளு பேசும் பகுதிகளில் பிஷு பர்ப என்ற பெயரிலும், பிகாரில் மைதிலி மொழி பேசும் பகுதிகளில் ஜுயிர் சீத்தல் என்றும், ஒடிஷாவில் பனா சங்கராந்தி என்றும், வங்காளத்தில் பெஹ்லா பைசாக் என்றும், அஸ்ஸாமில் போஹாக் பிஹு என்ற பெயரிலும் இதே நாளன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
சந்திர நாட்காட்டியைப் பின்பற்றும் மாநிலங்களில், நமது தமிழ் மாதத்தின் பங்குனியின்போதே சித்திரைக்கு நிகரான சைத்ர மாதம் தொடங்கிவிடுகிறது. அதற்கேற்ப அப்பகுதிகளில் புத்தாண்டு தினம் மாறுபடுகிறது. இவற்றில் ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உகாதி என்ற பெயரிலும், கர்நாடக மாநிலத்தில் யுகாதி என்றும், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் குடி படுவா என்றும், உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகள், மத்தியப்பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சைத்ர நவ்வர்ஷ் என்றும், ஜார்க்கண்டில் சர்ஹுல் என்றும், காஷ்மீரில் நவ்ரே என்றும், சிந்தி மொழி பேசுபவர்களால் சேத்தி சந்த் என்ற பெயரிலும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.
ஆண்டின் தொடக்கமான சித்திரை மாதத்தை மிகவும் தெய்வீகமானதாகப் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சித்திரை மாதம் முதல் நாளன்றுதான் பிரும்மா இந்த உலகைப் படைத்தாராம். இதேபோல் சித்திரை மாதம் முதல் நாளன்றுதான் அகத்திய முனிவருக்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தபடி உமையம்மை உடனான தமது திருமணக் காட்சியைக் காண்பித்து அருளினாராம். உயிரினங்கள் செய்யும் நன்மை, தீமைகளைக் கணக்கெடுக்கும் சித்திரகுப்தனை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் சிவபெருமான் தோற்றுவித்தாராம். சித்திரை மாதம் சுக்லபட்ச அஷ்டமி திதியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை, பொன் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும், தானம் வழங்கவும், பிற நற்செயல்களைப் புரியவும் உகந்த நாளாக மதிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு தொன்மை வாய்ந்த ஆலயங்களில் சித்திரை மாதத்தில்தான் பிரும்மோத்ஸவம் நடைபெறுகிறது. இத்தனைத் தெய்வீகச் சிறப்புகள் வாய்ந்திருப்பதால்தான் சித்திரை முதல் நாள் புத்தாண்டு தினத்தன்று, கோவில்களில் புத்தாண்டுப் பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.
வசந்தகாலத்தில் பகலிரவுச் சமநாளை ஒட்டித் தொடங்குவது அல்லவா சித்திரைப் புத்தாண்டு! அதற்கேற்ப வாழ்வில் எது நடந்தாலும் சமநிலையில் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தத்தான் புத்தாண்டு தினத்தில் அறுசுவையும் கொண்ட பச்சடி பரிமாறப்படுகிறது. இனிப்புக்கு வெல்லம், கசப்புக்கு வேப்பம்பூ, காரத்துக்கு மிளகாய்வற்றல், உவர்ப்புக்கு உப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்புக்கு மாங்காய் என அறுசுவையும் கலந்து இருக்கும் பச்சடியைச் சுவைப்பதுபோல் வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் சமநிலையில் நுகர்வோம். அதேநேரத்தில், சூரிய ஒளி மிகுந்திருக்கும் இளவேனிலில் புத்தாண்டு தொடங்குவதை மனத்தில் நிறுத்தி, இறை நம்பிக்கை ஒளியோடு இனிய செயல்களை ஆற்றுவோம்!