30-05-2023 1:10 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஅரசியல்பாஜக., தலைவர் அண்ணாமலை, மக்களை ஈர்ப்பது எப்படி? ஏன்?
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    பாஜக., தலைவர் அண்ணாமலை, மக்களை ஈர்ப்பது எப்படி? ஏன்?

    தமிழகத்தில் ஊழல் இல்லாத, திறமையான, நேர்மையான ஆட்சியை விரும்புவோர் அண்ணாமலையை வாழ்த்தலாம். அதோடு, அவருக்குப் பின்னால் அமைதியாக

    Annamalai
    KAnnamalai

    — ஆர். வி. ஆர் (R. Veeraraghavan)

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுகிறது. அவரைப் பார்க்கும், கேட்கும் கூட்டம் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு? திமுக, அதிமுக என்ற இரு பெரிய கட்சிகளுக்கும் ‘திக் திக்’ எனும் அளவுக்கு.

    அண்ணாமலை 2020-வது வருடம் பாஜக-வில் சேர்ந்தார். ஐந்து நாட்களில் தமிழகத்தில் கட்சியின் ஒரு உப தலைவராக நியமிக்கப் பட்டார். ஒரு வருடத்திற்குள் தமிழக பாஜக-வின் தலைவராக உயர்த்தப் பட்டார். வரும் ஜூன் மாதம் அவர் 39 வயது நிரம்புவார்.

    பாஜக-வின் தலைவர்கள் யாருக்கும் அண்ணாமலை உறவினர் இல்லை. இன்னொரு அரசியல் கட்சியில், அதுவும் தமிழகத்தில், தலைவரின் வம்சாவழி வராத ஒரு இளைஞர் இந்த அளவிற்கு வளர முடியுமா, இல்லை விடுவார்களா? ஏன் இந்தப் புரட்சியான மாறுதல் பாஜக-வில் நிகழ முடிகிறது?

    இன்று இந்தியாவில் தேச நலனைப் பிரதானமாக வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி பாஜக. அந்த மேலான எண்ணத்தைச் செயலாற்றும் அசாத்திய வல்லமையும் அரசியல் சாதுர்யமும் கொண்ட தலைமை பாஜக-விற்கு இருக்கிறது. அதனால்தான் அண்ணாமலை தமிழகத்தில் தலைவராக உருவாவது சாத்தியம் ஆகிறது. சரி, கட்சி அப்படியானது. அண்ணாமலை எத்தகையவர்?

    அண்ணாமலையின் ஒரு தன்மையைப் பற்றி நாம் உணரலாம், காட்சிகளாகவும் பார்க்க முடியும், ஆனால் காரணத்தை முழுமையாக அறிய முடியாது. அதுதான் அதிக மக்கள் அவர் மீது வைத்திருக்கும் பெரும் நம்பிக்கை. அவர் கட்சியில் சேருவதற்கு முன்பாக அவர் யாரென்றே தமிழக மக்களுக்குத் தெரியாது, ஆனால் கட்சியில் சேர்ந்த பிறகு சடசடவென்று அவர் பெரிய அளவில் பொது மக்கள் நம்பிக்கையைப் பெற்று மிளிர்கிறார். இது பேரதிசயம்.

    ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் தங்களின் சினிமாப் பிரபலத்தை மேடையாக்கி அரசியல் பிரவேசம் செய்தார்கள். ரஜினிகாந்த், அரசியல் வாசல் படியில் கால் வைத்த வேகத்தில் பின் வாங்கி விட்டார். கட்சி ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகியும், கமல் ஹாசன் நேராக ஒரு விஷயத்தைப் பேசக் கூடத் தெரியாமல் தத்தளிக்கிறார். தமிழகத்தில் முன் அறிமுகம் இல்லாத போதும், வந்த உடனேயே வெற்றிப் படிகளில் ஏறும் அண்ணாமலையைப் பற்றி நாம் இப்படி யோசிக்கலாம்.

    அண்ணாமலையைப் போன்ற ஒரு இளம் தலைவர் தமிழக மக்களுக்குத் தேவையாக இருந்தது. அப்படி என்ன தேவை அது? “நம் வாழ்க்கையின் இடர்கள் குறைய, நம் வாழ்க்கையில் வளம் பெருக” இந்தத் தலைவர் உதவுவார் என்ற நம்பிக்கை காட்டும் ஒரு தலைவர் மக்களுக்குத் தேவையாக இருந்தது. தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கை போக, ஒரு அரசியல் தலைவன் அளிக்கும் நம்பிக்கையும் மக்களுக்குத் தேவை – அதுவும் ஏழ்மையும் வசதியின்மையும் நிறைந்த இந்தியாவில். தமிழகத்தில் பல பத்தாண்டுகள் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளாக விளங்கும் திமுக மற்றும் அதிமுக-வின் இன்றைய தலைவர்கள், அத்தகைய நம்பிக்கையை மக்களுக்குத் தரவில்லையா? நிச்சயமாக இல்லை. அந்தப் பக்கம் அப்படி ஒரு தலைவர் இருந்தால் அண்ணாமலை அரசியலில் நுழைந்து மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாக மக்கள் கவனத்தை அமோகமாகக் கவர மாட்டார்.

    அண்ணாமலை ஒரு பாஜக தலைவராகத் தலை எடுப்பதற்கு முன்பாக, தமிழகத்தின் சாதாரண மக்கள் ஒன்றும் துயரத்தில் தோய்ந்து துவண்டு சுருண்டு விடவில்லை. “நமக்கு ஏற்பட்ட வாழ்க்கை இதுதான். நமக்குக் கிடைத்ததை ஏற்று, ஏதோ நம்பிக்கையோடு காத்திருப்போம்” என்று வாழ்க்கையை அவர்கள் பாட்டுக்கு நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த மக்களில் கணிசமான பகுதியினர் இப்போது அண்ணாமலையைக் கவனித்து, தமது முன்னேற்றத்திற்கு இவர் கைகொடுப்பார் என்று எண்ணுகிறார்கள். ஒரு உதாரணம் சொல்லி இதை விளக்கலாம்.

    எப்போதாவது வரும் கூட்டம் நிறைந்த பஸ்ஸில் முண்டியடித்து ஏறி தினமும் நெடுந்தூரம் பயணம் செய்யும் ஒருவன், சாலையில் சொகுசாக ஸ்கூட்டரில் அல்லது காரில் போகிறவனைப் பார்த்தால் பெரிதாக பாதிப்பு ஏதையும் உணர மாட்டான். பஸ்தான் தனக்கு தெய்வம், தனது பயணத்திற்கு அதுதான் கிடைத்தது என்று இருந்து விடுவான். ஓட்டை உடைசல், ஒழுகல் நிறைந்து, அடிக்கடி மக்கர் செய்யும் பஸ்ஸானாலும் பரவாயில்லை, யாரிடம் புகார் செய்து என்ன பயன்? ‘ஏதோ இந்த பஸ்ஸாவது கிடைத்ததே’ என்று அந்த பஸ் முதலாளியை நன்றியோடு நினைத்துக் கொள்வான். அப்படித்தான் தமிழகத்தில் இரண்டு பெரிய பஸ் முதலாளிகள் தாங்கள் கொழித்து பெருவாரியான மக்கள் தங்களை நோக்கிக் கும்பிட்ட படியே இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.

    திக்கற்ற அந்தப் பயணிக்கு திடீரென்று ஒரு ஸ்கூட்டர் இலவசமாகக் கிடைத்து, அதற்கான ரிப்பேர் செலவு மற்றும் பெட்ரோலும் இலவசமாகக் கிடைப்பது போல் தெரிந்தால், அந்தப் பயணி ஸ்கூட்டரை அப்போது சிலாகிப்பான், அதை விரும்பத் தொடங்குவான், அதைப் பற்றிக் கனவு காண்பான் – பஸ்ஸை விட்டு விலக நினைப்பான். திமுக, அதிமுக என்ற பாடாவதி பஸ் சர்வீஸ் கம்பெனிகளுக்கு நடுவில், களைப்புற்றுக் கிடக்கும் பயணிகளுக்கு ஸ்கூட்டர்கள் அளிப்பவராகத் தெரிகிறார் அண்ணாமலை. இதுதான் விஷயம். ஆனாலும் அந்தப் பாடாவதி பஸ் சர்வீஸ் கம்பெனிகள் தொடர்ந்து இயங்கும். அவதிப்படும் பயணிகள் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைப்பார்கள். நமது மக்கள் ஆட்சியில் அது போன்ற பஸ் கம்பெனிகளுக்கு நேராகவும் மறைமுகவாகவும் கூடும் பலன்கள் ஏராளம்.

    அண்ணாமலையைப் பார்த்தால், அவர் பேசுவதைக் கேட்டால், உண்மைத் தன்மை பளிச்சிட்டு, ‘இந்தத் தலைவர் நமது வாழ்க்கை மேம்பட நல்லது செய்வார்’ என்ற நம்பிக்கை நிறைய சாதாரண மக்களிடம் தோன்றுகிறது. அந்த எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த அவர் உடலால் எவ்வளவு உழைக்கிறார் என்பதை யாரும் பார்க்கலாம், அதை மற்ற எவரும் தனது போக்கில் செய்யவும் செய்யலாம். ஆனால் அவர் எண்ணத்தில், மனதில் உழைப்பதை மற்றவர்கள் எளிதில் கிரகிக்க முடியாது. அதன் விளைவாக, அவர் ஒவ்வொருவரிடம் பேசும் போதும் அவரது வாக்கால், உடல் மொழியால் எவ்வளவு மெனக்கெடுகிறார், தன்னைப் பற்றி மற்றவர்களை என்ன நினைக்க வைக்கிறார் என்பது, ஒரு மனிதருக்கு இயற்கையாக அமையும் தலைமைப் பண்புகள். அவற்றில் இதுவும் அடக்கம்: விஷமாகப் பேசும் திமுக தலைவர்களை, விஷமமாக வாயாடும் பத்திரிகைக்காரர்களை, சிண்டைப் பிடித்து பதில் சொல்லி ஓரம் கட்டுகிறார்.

    அண்ணாமலையின் இந்த குணங்கள் எல்லாமாக, மக்களை சட்டென்று ஈர்க்கும் ஒரு தலைவராக அவரை உயர்த்தி இருக்கின்றன. அவர் இயற்கையின் கொடை – குஜராத்திலும் பின் மத்தியிலும் நரேந்திர மோடி வந்ததைப் போல. பாஜக-வின் மற்ற தமிழகத் தலைவர்கள் இதைப் புரிந்து கொண்டு தேச நலனுக்காக அண்ணாமலையுடன் ஒத்துழைப்பது பாராட்டத் தக்கது. மற்ற பண்ணைக் கட்சிகளில் இது கண்டிப்பாக நடக்காது.

    திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் அண்ணாமலையின் தலைமை கொண்ட தமிழக பாஜக நல்ல மாற்று என்றால், அவர் மாநிலத் தலைவராக இருக்கும் வரை பாஜக அந்த இரண்டு கட்சிகளையும் வரப்போகும் லோக் சபா மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களில் எதிர்க்கும் அல்லது எதிர்க்க வேண்டும் என்று அர்த்தமா? இல்லை. இது, முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் அமைந்திருக்கும் கள நிலவரத்தைப் பொறுத்தது. தமிழகத்தில் அரசியல் சீர்கேடுகளுக்கு நெடுங்காலமாகத் தலைமை வகிக்கும் திமுக-வுடன் மட்டும் பாஜக அணி சேராது என்று தெரிகிறது. அதிமுக-வுடன் வைக்கலாம்.

    கூட்டணி உண்டா இல்லையா என்று முடிவாகும் வரை அந்த விஷயத்தை சூசகமாகத் தள்ளி வைத்து, பாஜக தமிழகத்தில் தனது மக்கள் சக்தியைப் பெருக்கி அதை ஊருக்கு எடுத்துக் காட்டி, தனது வலிமையைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் அதிமுக-வுடன் கௌரவமான சீட் எண்ணிக்கை உள்ள கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்ற முடிவைத் திருப்தியாக எடுக்க முடியும். அடுத்து அடுத்து வரும் தேர்தல்களில் பாஜக-வின் கூட்டணித் தேர்வுகள் மாறலாம். அதைத்தானே மற்ற எல்லாக் கட்சிகளும் செய்கின்றன?

    ஒன்று நிச்சயம். தமிழகத்தில் இனி வரப் போகும் தேர்தல்களில், கூட்டணி பற்றி பாஜக என்ன முடிவெடுத்து எந்த விளைவைச் சந்தித்தாலும், அண்ணாமலை ஒரு பெரிய தலைவராக உருவாகி பாஜக-வை ஒரு பெரும் அரசியல் சக்தியாகத் தமிழகத்தில் நிலை நாட்டுவார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. காலம் செல்ல, அனுபவம் கூட, அவர் இன்னும் மெருகேறுவார்.

    பின்னாளில் தமிழகத்தில் ஊழல் இல்லாத, திறமையான, நேர்மையான ஆட்சியை விரும்புவோர் அண்ணாமலையை வாழ்த்தலாம். அதோடு, அவருக்குப் பின்னால் அமைதியாக, அவரின் பலமாக, நிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி சொல்லலாம். நமக்கு முன்பாக அண்ணாமலையை சரியாகக் கணித்து தமிழகத்திற்கு அனுப்பியவர் அவர் அல்லவா?


    கட்டுரையாளர் – வழக்கறிஞராகப் பணியாற்றுபவர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × five =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக