
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
தேசபக்தி, தேச முன்னேற்றம், தேசப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, ஊழலின்மை, அனைத்து மதங்களின் மீதும் சம பார்வை, கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது, உண்மையான வரலாற்றோடு தேசத்தின் பண்டைய வைபவத்தை நிலை நாட்டுவது, நம்முடையதேயான அழிக்கப்பட்ட கலைகளை மீண்டும் எடுத்து வருவது, நம் தேசத்திலிருந்தும் உலகின் நான்கு மூலைகளில் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடும் பக்தியோடும் வரும் க்ஷேத்திரங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்தும் மிகச் சிறந்த பணிகள்.
இவற்றைச் செய்தால் பாரத தேசத்தின் புகழ் உலகில் அனைத்து நாடுகளும் போற்றும் விதமாகப் பரவும். அவ்விதம் பரப்பும் ஆட்சியைப் பாராட்டுவது ஒரு நல்ல பண்பாடு. இந்தப் பண்பாடு பிற நாடுகளில் இருப்பது போல நம் நாட்டில் பதவி மோகத்தோடு கூடிய அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு ஜால்ரா போடும் மேதாவி வர்க்கங்களுக்கும் இல்லாமல் போவது வருத்தத்துக்குரியது.
பதவி கிடைத்தவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதவியைப் பிடிப்பதற்காக எப்போது பார்த்தாலும் தம் ஆஸ்தியையும் அந்தஸ்தையும் பெருக்கிக் கொள்வதற்காக அரசியல் தலைவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.
அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு, முன்னோக்குப் பார்வையோடு பாரத தேசத்தை அனைத்து விதத்திலும் ஒருமித்து முன்னேற்றுவதற்காக, தூய்மையான வரலாற்றோடும் அர்ப்பணிப்பு சிந்தனையோடும் முயற்சி செய்யும் ஆட்சி அமைப்பு பிடிப்பதில்லை. அந்த உயர்ந்த செயல்களை தவறு என்று நேராக சுட்டிக்காட்டும் வாய்ப்பு இல்லாமல் போவதால், அவை அனைத்தையும் மதக் கண்ணோட்டத்தோடு பார்த்து இந்த நல்ல செயல்களுக்கு மதவாதம் என்றும் அது ஹிந்து மத தத்துவம் என்றும் இல்லாத வீண்பழியை முத்திரையிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியை நிர்பந்தத்திற்கு உள்ளாக்க முயற்சி செய்வதும், அதற்காக கூட்டமாகச் சேர்வதும் அனைவரும் அறிந்த விஷயமே.
எதிர்க்கட்சிகளில் அமர்ந்துள்ளவர்களோடு கூட மாநிலங்களை ஆளும் சில பிராந்திய கட்சிகளும் கூட்டு சேர்ந்து இந்த ஆட்சியை இறக்கி விட வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு நாட்டின் மதிப்பு, மரியாதைகளை குறைப்பதற்கு கூட தயாராகின்ற கொடுமையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
விண்வெளி விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் தேசப் பாதுகாப்பிலும் தேசத்தை பலப்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் வேகமாக செல்லுகின்ற பாரததேசத்தின் முன்னேற்றத்தையும் தன்மானத்தையும் பார்த்து பொறுக்க இயலாத பகை நாடுகள், தீவிரவாதக் கூட்டங்கள், முன்னேறிய தேசங்களின் அகம்பாவங்கள் – எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து எப்படியாவது பாரதத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளன. அவர்களோடு கை சேர்த்து பாரத தேசத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று துடிக்கிறார்கள் இந்த எதிர்க் கூட்டுத் தலைவர்கள்.
தீவிரவாத, பயங்கரவாத மதவெறிகளுக்கு பாரத தேசத்தின் இந்த வளர்ச்சி தடையாக இருப்பதால் அவர்கள் கூச்சலிடுகிறார்கள். அதையே வாய்ப்பாகக் கொண்டு அந்த மத வெறியர்களின் துணையோடு நம் தேசத்தில் மதத்தின் பெயரால் வேறுபாடுகளை வளர்த்து தம் ஒட்டு வங்கிகளை நிரப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கட்சியின் மேல் கொண்ட வெறுப்பு சனாதன தர்மத்தின் மீதான வெறுப்பாக மாற்றப்படுகிறது. தேசத் துரோகத்தில் ஈடுபடத் துணிகிறார்கள்.
தம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஹிந்து மதமல்லாதவர்களுக்கே முதலிடம் என்று முழங்கி, அவர்களுக்காக மட்டுமே தேசத்தின் செல்வத்தை வழங்குவோம் என்று கூவி அறிவித்து, தம் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஹிந்துக்களின் மீது செய்யும் தாக்குதலை தொடர்ந்தபடி, தாக்குதல் செய்பவர்களுக்குத் துணை நின்று, மத மாற்றங்களை அதிக அளவில் ஊக்குவித்தபடி, பிற மதத்தவரைத் தம் ஓட்டு வங்கிகளாக வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். பிளவுபட்டுக் கிடக்கும் ஹிந்து ஓட்டுகள் தமக்குத் தேவையில்லை என்றும் தாம் ஹிந்துக்களின் எதிரி என்றும் வெளிப்படையாகவே கூறிக் கொள்கிறார்கள். சுயநலத்துக்காக பல ஹிந்து மேதாவிகள் அவர்களின் அடிவருடிகளாக நடந்து கொள்கிறார்கள்.
ஹிந்துமத வெறுப்பைச் சார்ந்துள்ள இந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒரு தலைவர் சனாதன தர்மத்தை வியாதியோடு ஒப்பிட்டு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று எல்லை மீறிப் பேசியுள்ளார். ஒரு நாய் குரைத்தால் உடனே மேலும் சில குரல்கள் சேர்வது போல, சிலர் அவருக்கு ஒத்தாசைக் குரல் கொடுத்தனர். அதிக எண்ணிகையில் உள்ள மக்கள் தொகை மீது ஒரு மத வெறியரைப் போல பேசுவதைத் தவிர, ஒரு தலைவரைப் போல பெருந்தன்மையோடு நடந்து கொள்ள அவரால் இயலவில்லை என்பதை ஒத்து ஊதுபவர்கள் அடையாளம் காணவில்லை.
ஒரு ஜனநாயக தேசத்தில் அதிக மக்கத்தொகை உள்ள ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று அறிவிப்பது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதனைப் பொறுப்புள்ளவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது வருத்தத்திற்குரியது.
ஹிந்து மதத்தின் சகிப்புத்தன்மை மீண்டுமொருமுறை உலகிற்கு தெரியவந்தாலும் பாரத தேசமெங்கிலும் உள்ள தர்மவாதிகளின் பண்பட்ட எதிர்ப்புகளும் கிளம்பாமலில்லை. எங்கோ ஓர் இடத்தில் பொறுக்க முடியாமல், தலையைக் கொண்டுவந்தால் பரிசு என்று ஆவேசத்தில் கூறப்பட்டாலும் அது பிற மதத்தவர் ஒலிக்கும் தீவிரக் குரல் அல்ல என்றும், பனை ஓலை சப்தமே என்றும், உண்மையில் நிந்தனை செய்தாலே தலையை எடுக்கவேண்டும் என்ற தீய எண்ணமோ தீவிரவாதமோ ஹிந்துக்களுக்கு என்றுமே இருந்ததில்லை என்பதும் எல்லோரும் அறிந்ததே.
ஆனால் அனைத்து மத மக்களின் ஓட்டுக்களால் வென்று பதவியைப் பிடித்த ஒரு தலைவர் சில மதங்களை திருப்தி படுத்துவதற்காக அவர்களின் ஓட்டுக்காக சனாதன தர்மத்தின் மீது வெறுப்பைக் கக்குவது மன்னிக்கக் கூடியதல்ல. இதற்கு தார்மிகமாக சரியான பலன் கிடைத்தே தீரும். யோகிகள், தர்ம வீரர்கள், தபஸ்விகளின் மனவேதனை சாபமாக மாறாமல் போகாது. கூட்டணியைக் உடைக்காமல் சும்மாயிருக்காது.
எது எப்படியானாலும், இந்த விவாதத்திற்குக் காரணமான – வாய்க்கு வந்தபடி அநாகரிகமாகப் பேசியவர் – கட்சியில் நாத்திகர். சமுதாயத்தில் பிற மதத்தவர், வீட்டிற்குள் ஹிந்து. இந்த வஞ்சகரின் பேச்சால் சில ஹிந்துகளின் உதவி கிடைக்காமல் போய் விடுமோ என்று ஓரிரு பிராந்திய கட்சித் தலைவர்கள் எங்களுக்கு சனாதன தர்மத்தின் மீது கௌரவம் உள்ளது என்று முதலைக் கண்ணீர் விட்டு வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இப்போது வரை, இன்றும் கூட கடினமான ஹிந்து வெறுப்போடு தம் மாநிலங்களில் ஹிந்துக்களின் மீது அடக்குமுறையில் ஈடுபடுகிறார்கள் என்ற விஷயத்தை மக்கள் சமுதாயம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஒரு புறம் இருபது வெளிநாடுகள் உலக நலனுக்காகவும் உலக முன்னேற்றத்திற்காகவும் பாரத தேசத்தில் ஒன்று கூடிய அபூர்வமான மாநாட்டைப் பாராட்டிவரும் தருணத்தில், விண்வெளி வெற்றியோடும் சாமானியனின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களோடும் தேசம் முன்னேறிவரும் நேரத்தில், அனைத்து வசதிகளும் ஏழைகளுக்கு கைவசமாகும் தருவாயில் – தேவையற்றதும் இல்லாததும் பொல்லாததுமான வெறுப்புக் கொந்தளிப்புகளைக் கிளப்பும் கூட்டணிகளின் அதிகார தாகம் என்னும் விஷப் பாம்பு படமெடுத்தாடுகிறது.
அயோத்தியைச் சேர்ந்த நூறு வயதான சாது ஸ்ரீ ராமபத்ராசாரியார் கூறியது போல், ‘இது கட்சிகளின் இடையேயான போர் அல்ல. சனாதன தமர்த்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர்’. உண்மைதான். வெற்றி யாருக்கு?
யதோ தர்மஸ்தத: க்ருஷ்ண:, யத: க்ருஷ்ண: ஸ்ததோ ஜய:
தர்மம் எங்கே இருக்குமோ கடவுள் அங்கே இருப்பார். கடவுள் எங்கே இருப்பரோ வெற்றி அங்கே இருக்கும். இது மகாபாரதம் கூறும் சத்திய சூத்திரம். மூன்று உலகங்களிலும் மாறாத தர்ம நிர்ணயம்.
(ருஷிபீடம் மாத இதழ் தலையங்கம், அக்டோபர், 2023)