
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
முதல் ஆட்டம், இங்கிலாந்து vs நியூசிலாந்து
அகமதாபாத் -05.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (282/9, ஜோ ரூட் 77, ஜாஸ் பட்லர் 43, பெயர்ஸ்டோ 33, மேட் ஹென்றி 3/48) நியூசிலாந்து அணி (283/1, கான்வே 152, ரச்சின் ரவீந்த்ரா 123) வெற்றி பெற்றது.
முதல் போட்டி எப்போதுமே சென்ற உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிப் போட்டியில் பங்கு பெற்ற அணிகளுக்கிடையேதான் நடைபெறும். அவ்வாறு அகமதாபாத்தில் நடந்த இந்த முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி ஊதித்தள்ளியது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளின் சார்பிலும் மொத்தம் 14 சிக்ஸர்கள் அடிக்கபட்டுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 8 சிக்ஸர்களும் இங்கிலாந்து 6 சிக்ஸர்களும் அடித்துள்ளன. இரு அணிகளும் சேர்ந்து 51 பவுண்டரிகள் விளாசியுள்ளன. இதில் இங்கிலாந்து 21 பவுண்டரிகளும் நியூசிலாந்து 30 பவுண்டரிகளும் விளாசியுள்ளன. கான்வே மற்றும் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 273 ரன்கள் குவித்து நியூசிலாந்து இமாலய வெற்றி பெற உதவினர்.
அறிமுக உலகக் கோப்பைப் போட்டியில் கான்வே 121 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 152 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். 96 பந்தில் 11 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 123 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்களை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி நடைபெற்று வரும் அகமதாபாத்தில் நியூசிலாந்து ஆடும்போது பனிப்பொழிவு மெல்ல மெல்ல அதிகரித்தது.
283 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவாக, வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட்டாகினார்.
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகக்கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து மற்றும் கனடா அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக உள்ளது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணி விளையாடியபோது உலகக்கோப்பை வரலாற்றில் களமிறங்கிய 11 பேட்ஸ்மேன்களும் இரண்டு இலக்க ரன்கள் சேர்த்தனர். அவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது.