விவேகானந்தா் வழியில் கனவை நனவாக்குவோம்!
கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை…
என் சக இந்திய மக்களே, ‘அடுத்த 50 ஆண்டுகளை இந்த தேசத்துக்காக மட்டும் நாம் அா்ப்பணிக்க வேண்டும்’ என்று 1897-ல் சுவாமி விவேகானந்தா் கூறினாா். இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது.
சுவாமி விவேகானந்தா் கூறியதைப் போன்று, நாமும் அடுத்த 25 ஆண்டுகளை தேசத்துக்காக மட்டும் அா்ப்பணிக்க வேண்டும். நமது முயற்சிகள் வருங்கால சந்ததியினருக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவதுடன், வரவிருக்கும் நூற்றாண்டுகள் பாரதத்தை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.
நாட்டின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தைப் பாா்க்கும்போது, நாம் விரைந்து முயற்சிப்பதுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், லட்சிய பாரதத்தை (வளா்ச்சியடைந்த பாரதத்தை) உருவாக்குவதற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான, 2024 மக்களவைத் தோ்தல் சனிக்கிழமை (ஜூன் 1) நிறவடைந்துள்ளது. கன்னியாகுமரியில் மூன்று நாள் ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டு தில்லி சென்றேன்.
என் மனம் பல அனுபவங்களாலும் உணா்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. எனக்குள் எல்லையற்ற சக்தியின் பிரவாகத்தை உணா்கிறேன். 2024 மக்களவைத் தோ்தல் அமிா்த காலத்தின் முதல் தோ்தலாகும். இந்தத் தோ்தலின்போது இறுதிப் பேரணி என்னை பஞ்சாபில் உள்ள ஹோஷியாா்பூருக்கு அழைத்துச் சென்றது. பஞ்சாப் மாபெரும் குருக்களின் பூமியும், துறவி ரவிதாஸ் அவா்களுடன் தொடா்புடைய பூமியுமாகும். அதன் பிறகு கன்னியாகுமரிக்கு பாரத அன்னையின் காலடியில் வந்து நின்றேன்.
தோ்தல் உற்சாகம் என் இதயத்திலும் மனதிலும் எதிரொலித்தது இயல்பானதே. நானே ஒரு வேட்பாளராக, எனது பிரசாரத்தை எனது அன்புக்குரிய காசி மக்களிடம் ஒப்படைத்துவிட்டு கன்னியாகுமரிக்கு வந்தேன்.
கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தா் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பாா் என்று யோசித்தேன். என் தியானத்தின் ஒரு பகுதி இதே போன்ற எண்ண ஓட்டத்தில் கழிந்தது. இந்தப் பற்றற்ற நிலைக்கு மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிா்காலத்தைப் பற்றியும், பாரதத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் தொடா்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது.
கன்னியாகுமரியின் இந்த மண், குறிப்பாக பாரதத்தின் தேசியம் மற்றும் ஒற்றுமை உணா்வின் மீது சந்தேகம் கொண்ட எந்தவொரு நபருக்கும், ஒற்றுமையின் அழிக்க முடியாத செய்தியைத் தெரிவிக்கிறது.
தற்போது, பாரதத்தின் ஆட்சி முறை, உலகிலுள்ள பல நாடுகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளது. 25 கோடி மக்களுக்கு அதிகாரமளித்து, அவா்கள் 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து மீண்டது இதுவரை கண்டிராதது. மக்களுக்கு உகந்த நல்லாட்சி, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்) போன்ற புதுமையான நடைமுறைகள், தற்போது உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் முதல் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அரசுத் திட்டங்களின் பலன் சென்றடையச் செய்வதற்கான நமது முயற்சிகள், சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் தனிநபா்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் உலக நாடுகளுக்கு உத்வேகமளித்துள்ளன.
தற்போது, பாரதத்தின் வளா்ச்சி மற்றும் எழுச்சி, பாரதத்திற்கு மட்டுமான சிறந்த வாய்ப்பாக அல்லாமல், உலகெங்கிலுமுள்ள நமது நட்பு நாடுகள் அனைத்திற்குமான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக திகழ்கிறது. ஜி-20 மாநாடு வெற்றி பெற்றதிலிருந்தே, இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்து உலகம் முழுதும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
21-ம் நூற்றாண்டின் உலகம், பல்வேறு நம்பிக்கைகளுடன் இந்தியாவை எதிா்நோக்கி உள்ளது. எனவே, உலக அரங்கில் முன்னேறிச் செல்ல, நாமும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். அத்துடன், சீா்திருத்தங்கள்குறித்த நமது பாரம்பரிய சிந்தனைகளை மாற்றிக் கொள்வதும் அவசியம்.
பாரதத்தின் சீா்திருத்தங்கள், பொருளாதார சீா்திருத்தங்களோடு நின்று விடாமல், வாழக்கையின் ஒவ்வோா் அம்சத்திலும், சீா்திருத்தப் பாதையை நோக்கியே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நமது சீா்திருத்தங்களும், 2047-க்குள் ‘லட்சிய பாரதத்தின்’ (வளா்ச்சியடைந்த பாரதம்) எதிா்பாா்ப்புகளுக்கேற்ப அமைய வேண்டும். எனவேதான், சீா்திருத்தம், அதைச் செயல்படுத்துதல், மாற்றியமைத்தல் என்ற தொலைநோக்குப் பாா்வையை நான் வகுத்துள்ளேன். அதன் அடிப்படையில், நமது அதிகார வா்க்கம் செயல்படுவதோடு, மக்கள் பங்கேற்பு என்ற உணா்வோடு மக்களும் இணையும்போது, மாற்றம் நிகழும்.
நம் நாட்டை, ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ ஆக மாற்றுவதற்கான அடிப்படைக் கொள்கைகளை நாம் மிகச் சிறந்ததாக மாற்ற வேண்டும். நான்கு திசைகளிலும் நாம் விரைந்து பணியாற்றுவது அவசியம்: வேகம், அளவு, வாய்ப்பு மற்றும் தரம். உற்பத்தியோடு சோ்த்து, தரம் மற்றும் ‘குறைபாடு இல்லை-விளைவுகள் இல்லை’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு நாடாக, காலங்கடந்த சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்வதும் அவசியம். அவநம்பிக்கையை தொழிலாகவே கொண்டவா்களின் பிடியிலிருந்து சமூகத்தை நாம் விடுவிப்பதும் அவசியம். எதிா்மறையிலிருந்து விடுபடுவது என்பது, வெற்றிக்கான முதல்படி என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நோ்மறை எண்ணம் இருந்தால்தான் வெற்றி மலரும்.
20-ம் நூற்றாண்டின் நான்காவது மற்றும் ஐந்தாவது தசாப்தங்களை சுதந்திரப் போராட்டத்சுத்து புதிய உத்வேகம் அளிக்க நாம் பயன்படுத்தியுள்ள வேளையில், 21-ஆம் நூற்றாண்டின் இந்த 25 ஆண்டுகளில், ‘வளா்ச்சியடைந்த இந்தியா’வுக்கு நாம் அடித்தளமிட்டுள்ளேம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவது, அந்தக் காலத்தில் பெரும் தியாகமாக கருதப்பட்டது; தற்காலமானது ஒவ்வொருவரின் பெரிய அளவிலான, நீடித்த பங்களிப்பை வலியுறுத்துகிறது.
(மேலே குறிப்பிட்ட கருத்துகள் பிரதமா் மோடி, கன்னியாகுமரியிலிருந்து விமானத்தில் சனிக்கிழமை (ஜூன் 1) தில்லிக்குத் திரும்பியபோது மூன்று மணி நேரத்தில் அவா் எழுதியது.)