இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை, நம் கோயில்கள், ஆன்மீகத் தலங்களில் பார்க்கிறோம். பாரம்பரியமான கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது, குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, ஆலயங்களின் தேர்த் திருவிழா போன்ற திருவிழாக்களில் பங்கேற்பது என்பதெல்லாம் காலம் காலமாக நம்மிடம் இருந்து வரும் நல்ல பழக்கம் தான். ஆனால் இப்போது புதிதாக முளைத்துவிட்ட ஜோதிடர்களாலும், யுடியூப் போன்ற சமூகத்தளங்களின் கைங்கரியத்தாலும் கணக்கற்ற மக்கள், எவர் சொல்வதை எல்லாமோ கேட்டு, கண்களை மூடிக்கொண்டு அப்படியே நம்பி, அவற்றை செயல்படுத்த முனைவது பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்துகிறது!
இதற்கு அண்மைய உதாரணம், திருச்செந்தூர்! முன்பெல்லாம் கடற்கரைக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்ற குளித்து, முருகப்பெருமானை தரிசித்து வருவது பாரம்பரிய வழக்கம். ஆனால் அண்மைக்காலமாக பௌர்ணமி வந்துவிட்டால் இரவு நேரம் முழு நிலவொளியில், கடற்கரையில் பாயை விரித்துப் படுக்கும் ‘ஜோதிட’ பரிகாரத்தால், திருச்செந்தூர் திக்குமுக்காடி விடுகிறது. உள்ளூர் மக்கள் கையைப் பிசைந்து கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கித் தவிக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல், மகான்களின் வழிகாட்டலில் நடைபெற்று வந்த பாரம்பரிய ஆன்மிகக் கண்ணோட்டத்தில் இருந்து மாறி, பரிகாரங்களில் பார்வையில் பட்டு விட்டதால், லட்சக்கணக்கான மக்களின் நெரிசலைச் சமாளிக்கத் தேவையான கட்டுமான வசதிகளின்றி திருவண்ணாமலை திக்கு முக்காடித் தவிக்கிறது. உள்ளூர்வாசிகள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறுகளைச் சொல்லி நொந்து போயிருக்கிறார்கள்.
எங்கு சுற்றிலும் அரங்கனைச் சேர் என்பது பழமொழி. எந்த ஊர்களில் இருந்தாலும் இறுதியில் திருவரங்கம் வந்து அரங்கன் அடி பணிய வேண்டும் என்பது பழங்காலத்தில் இருந்தே வந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடம் முழுமையாகவாவது திருவரங்கம் கோயிலை சுற்றி எங்காவது வசித்து தினமும் உத்ஸவங்களைக் காண வேண்டும் என்பதை வாழ்நாள் இலக்காகக் கொண்டிருப்போர் பலர். ஆனால் இப்போதெல்லாம் அத்தகைய நிலை சாத்தியமற்றதாகவே மாறிவிட்டது.
பாரம்பரிய ஆன்மீகத் தலங்களில் இடையூறுகள் இப்படி என்றால், இன்று சுற்றுலாத்தலமாக உருவெடுத்து விட்ட தலங்களிலோ இடையூறுகள் வேறு வகையில் முன்நிற்கின்றன! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருக்குற்றாலம்!
திருக்குற்றாலம் பிரதான அருவியுடன் இணைந்த குற்றாலநாதர் கோயில், ஒரு பாடல் பெற்ற தலம். மூர்த்தி- தலம்- தீர்த்தம் எனும் வகையில் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த புனிதத் தலம். அருவி நீர் விழும் பாறையில், நந்தி, சிவ லிங்கங்கள் நிறைய செதுக்கி வைத்திருப்பார்கள். குற்றாலநாதர் கோயில் பூஜைகளுக்கு அருவித் தண்ணீர்தான். இங்கே பூஜை, புனஸ்காரங்களுக்கே முன்னுரிமை இருந்தது. அது சுற்றுலா தலம் என்று ஆன பின்னர், பாரம்பரிய ஆன்மிகத் தலம் எனும் நிலையை இன்று இழந்து விட்டது!
ஆடி அமாவாசை, தை அமாவாசை நீத்தார் கடன்கள் இங்கே அருவியில் பிரதானம், சபரிமலை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் முன் செய்யும் கடமைகளில் அருவி நீராடலும் குற்றாலநாதர், சித்திரசபை ஆடல்வல்லானை தரிசிப்பதும் முக்கியமான ஒன்றாக இருந்தது. சுற்றிலுமுள்ள கிராமங்களில் ஆடி மாத விழாக்கள், கோயில் கொடை விழாக்கள், அம்மன் ஆலய செவ்வாய் வெள்ளி விழாக்கள், கோயில் கும்பாபிஷேகங்கள் நடந்தால் யானை மீது குற்றால அருவி நீர் எடுத்து சுமந்து வந்து அந்த அந்த ஊருக்குள் கம்பீரமாக வலம் வந்து கும்பாபிஷேகம் செய்வது என்பதெல்லாம் வழக்கமான ஒன்று!
இப்போது சுற்றுலாவாக வருபவர்க்கே முன்னுரிமை என்பதால், திருக்குற்றாலம் எனப்பட்டது ‘குற்றாலம்’ ஆகிவிட்டது. காவல் துறையும் உள்ளூர் நிர்வாகமும் சீசன் காலங்களில் காட்டும் கெடுபிடிகள் அனேகம். உள்ளூர்வாசிகள் சீசன் காலத்தில் ஒரு நாள் கூட குளிக்கச் செல்ல முடிவதில்லை என்று புலம்புகிறார்கள். அது ஒருபுறம் என்றால், ‘வெள்ளம் ஏற்பட்டதால் அருவியில் குளிக்க அனுமதி மறுப்பு’ என்ற காரணத்தைக் காட்டி, கோயில் திருவிழாவிற்காக புனித நீர் எடுக்கக் கூட போலீசார் அனுமதி மறுத்ததால் பக்தர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள சடையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பள்ளத்து பேச்சியம்மன் கோவில் திருவிழாவிற்காக புனித நீர் எடுக்க குற்றாலம் மெயினருவிக்கு வந்தனர். ஆனால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருகே செல்லக்கூட அனுமதி வழங்க முடியாது என போலீசார் தடுத்தனர். இதனால் குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள ஒரு தண்ணீர்க் குழாயில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குளித்து விட்டு, அதையே புனித நீராக எடுத்துச் சென்றனர் என்பது செய்தி.
உள்ளூர் மக்களின் பாரம்பரிய ஆன்மிகச் செயலுக்கான வேண்டுகோளை ஏற்று, போலீஸாரே தகுந்த பாதுகாப்புடன் புனித நீர் எடுக்க மட்டுமாவது உதவியிருக்கலாம். சுற்றுலா வந்து குளிப்பவர் மீதான தடையை உள்ளூர் பக்தர்கள் மீதும் திணித்திருப்பது, நிர்வாகத்தின் அவல நிலையையே காட்டுகிறது!