தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
‘சனாதன தர்மம் பெண்களால்தான் நிலைத்திருக்கிறது’ என்றார் சுவாமி விவேகானந்தர். அது உண்மை. அந்நியர் ஆட்சியில், மேல்நாட்டாரின் ஆடம்பரம், நடை உடை, வேலை, வியாபாரம் ஆகியவற்றின் தாக்கத்தால் கலாசாரத்தையும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் மிகப் பெருமளவு விட்டுவிட்ட ஆண்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், பெண்கள் குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் பாரத ஆடை அணிகளோடு சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தும், நினைவுபடுத்தியும் வந்தார்கள். அதன் மூலம் பாரம்பர்யம் அண்மைக்காலம் வரை இல்லங்களில் நிலைபெற்றது. சிறிது சிறிதாக இந்த வகைமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
கல்வி முறைகள் மாறிவிட்டன. குழந்தைகள் வீட்டில் இருப்பதை விட பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல்களில் செலவிடும் நேரம் அதிகரித்து வருகிறது. வீட்டின் தாக்கத்தை விட வெளி உலகின் தாக்கமே அதிகமாக உள்ளது. ஆடை அணியும் விதமும் மாறிவிட்டது. காலச்சாரத்தின் மீதும் சம்பிரதாயங்களின் மீதும், அலட்சியமும், புரிதலின்மையும், உதாசீனமும் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் காட்டும் ‘ஏளனம்’ வருத்தத்தை அளிக்கிறது. இது இளம் பெண்களிடமும் இளைஞர்களிடமும் சமமாகவே காணப்பட்டாலும், இளைஞர்களிடம் மேலும் அதிகமாகக் காணப்படுகிறது. சொந்த மதத்தோடு தொடர்பில்லாமல் வளரும் ஹிந்து இளைஞர்களைத் தம் மதத்திற்குள் இழுத்துக் கொள்ளும் வியூகங்களோடு பிற மதங்கள் செயலாற்றுகின்றன. ஸ்வதர்மத்தைப் பற்றிய அறிவோ, அதன் மீது கௌரவமோ இல்லாத ஹிந்து இளைய சமுதாயத்திடம் பிற மதமே உயர்ந்தது என்ற எண்ணத்தை எளிதாக ஏற்படுத்தி, தம் மதத்தைச் சேர்ந்த இளைஞர்களோடு காதலில் இறக்கி மதம் மாற்றுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
உண்மையில், இவர்கள் மாறிய பிற மதத்தில் பெண்களுக்கு கௌரவம் கிடையாது. ஒரு ஆண் பல பெண்களை மணம் செய்து கொள்ளலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம். அவர்களுடைய சித்தாந்தத்தில் பெண்கள் வெறும் போகப் பொருள் மட்டுமே. ஆனாலும் மயக்கும் பேச்சுகள் என்ற வலையில் சிக்கி, அந்த மதத்திற்கு மாறி, கொடுமையை அனுபவிக்கிறார்கள். மற்றும் சிலர் இஷ்டம் வந்தாற்போல் மது போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாகி, தாம்பத்தியத்தின் மதிப்பு, குடும்ப உறவுகளின் மரியாதை போன்றவற்றின் மேல் வெறுப்பு கொள்கிறார்கள்.
ஆனால் பிற மதங்களில் சிறு வயதிலிருந்தே தம் மத கல்விக் கூடங்களின் மூலம் பிள்ளைகள் இருபாலாருக்கும், தம் மத நம்பிக்கைகளின் மேல் திடமான தொடர்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். ஆனால், ஹிந்து குடும்பங்கள், பிள்ளைகளை சனாதன தர்மத்திலிருந்து தொலைவாக, எதுவும் கற்றுத் தராமல் வளர்க்கிறார்கள். படிப்பு, ராங்க், அதிக வருமானம் தரும் கேரியர் ஆகியவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பெற்றோர், மீதி விஷயங்களைப் பற்றி கண்டுகொள்வதில்லை.
அதற்குத் துணையாக சயின்ஸ், லாஜிக், என்று நம் சம்பிரதாயங்களை கேள்விகேட்டு கிண்டல் செய்யும் வழிமுறை ஹிந்து குடும்பங்களில் மட்டுமே அதிகம். மதம் என்றால் ‘நம்பிக்கை’. சயின்சுக்கும் நம்பிக்கைக்கும் இடையில் அழுத்தமான கோடு உண்டு. ‘நம்பிக்கை’ ஏற்படுத்தும் பாசம், உணர்ச்சி, தாக்கம் போன்றவற்றை சயின்ஸ் ஏற்படுத்தாது. இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து பிற மதத்தவர் வாழப் பழகியது போல, ஹிந்துக்கள் தம் பிள்ளைகளை வாழப் பழக்கவில்லை.
பிறழ்வாக மாற்றி எழுதிய வரலாற்றுப் பாடங்களில், அற்புதமான ஹைந்தவ வரலாறு, கலாசாரம் போன்றவை தென்படுவதில்லை. தீய அபிப்பிராயங்களே எழுதப்பட்டு ஹிந்து மதம் மீது அகௌரவத்தை எற்படுத்துகின்றன. சுமார் நூறாண்டு காலமாக இந்தத் தவறான வரலாற்றுப் பாடங்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்களே உண்மை என்று செல்லுபடியாகி வருகிறது.
உலக மேதாவிகளில் பலரிடம் தாக்கம் ஏற்படுத்திய ஹிந்து தர்மத்தின் வேத விஞ்ஞானம், ஜோதிடம், யோக சாஸ்திரம், ஆயுர்வேதம், உபாசனகளுக்கான மந்திரம், தந்திரம் ஆகிய விஞ்ஞானங்கள், போன்றவை பற்றி பெரியவர்களுக்கும் தெரிவதில்லை. பிள்ளைகளுக்கும் தெரியச் செய்வதில்லை. தொடர்பே விட்டுப் போனது. இளைய தலைமுறைக்குத் தம் உயர்ந்த பாரம்பரியச் செல்வத்தின் மீதும், ஸ்வதர்மத்தின் மீதும் நல்லெண்ணமோ, அன்போ இல்லாமல் போனது. எல்லோரிடமும் இல்லாவிட்டாலும், அதிக சதவிகிதம் ஹிந்துக்களிடம் இருக்கும் நிதரிசனம் இதுதான்.
‘கேரளா ஸ்டோரி’ போன்ற திரைப்படங்களும், சமூக வலைதளங்களில் பல செய்திகளும் வந்தபடி இருந்தாலும் ஹிந்து குடும்பங்களுக்கு சுரணை எதுவும் இருப்பதில்லை. பங்களாதேஷ், மேற்கு வங்காளம், காஷ்மீர், கேரளா போன்ற இடங்களில் ஹிந்து பெண்களின் மீது கொடூரமான வன்முறைகளும், ஹிந்து குடும்பங்களின் மீது தாக்குதல்களும் நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல வாழ்கிறார்கள்.
இவ்வாறு, குடும்ப சம்பிரதாயங்களின் மீதும், பூர்வீகர்களின் வரலாறு மீதும், பாரம்பர்யத்தின் மீதும் கௌரவம் இன்றி, பிற மத நட்பின் தாக்கத்தால் அவர்கள் பக்கம் சாயும் இளைஞர்களுக்கு, குடும்பத்தினர், புத்தி கூற இயலாமல் போகின்றனர்.
அவற்றை ஈடுகட்ட சில தன்னார்வ தர்ம பிரச்சார ஹிந்து அமைப்புகள் முன்வந்துள்ளன.
கேரளாவில், ‘ஆர்ஷவித்யா சமாஜம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த, சனாதன தர்மம் குறித்த அறிவிறசிறந்த கல்வியறிஞர்களும், இளைய தலைமுறையினரும் மிகுந்த முயற்சி செய்து வருகின்றனர். தவறான வழியில் சென்று, பயங்கரமான பிற மதத்திற்குள் சென்று அவதியுறுபவர்களை மீண்டும் சொந்த மதத்திற்கு வரவழைத்து, சனாதன தர்மம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி வருகிறார்கள். பிற மத போதனைகளின் காரணமாகத் தம் மதத்தின் மீது தவறான புரிதலும், தீய அபிப்பிராயமும் ஏற்படுத்திக் கொண்ட பிள்ளைகளின் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறி, மீண்டும் அவர்களைக் கொண்டே சனாதன தர்மத்தின் உயர்வை பரப்பச் செய்வதில் இந்த நல்ல அமைப்புகள் வெற்றி கண்டுள்ளன.
ஆனால் அரசியல்வாதிகளின் விதிமீறலாலும், பதவி மோகத்தாலும், மதமாற்றத்தில் ஈடுபடும் மதங்களின் அட்டூழியங்கள் அளவுக்கு அதிகமாகி வருகின்றன. அவற்றின் மூலம் ஹிந்து தர்ம அமைப்புகளின் நடைமுறைக்கும் இடையூறு ஏற்படும் அபாயங்கள் உள்ளன. ஆனால், சுய அழிவுக்குத் தயாராகிவிட்ட ஹிந்துக்களுக்கு, எறும்பு கடித்த அளவு சொரணை கூட இருப்பதில்லை.
இந்தப் பின்னணியில், ஒவ்வொரு பெற்றோரும், அதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார் என்பதை கவனிக்கக் வேண்டும். சிறு வயதிலேயே ஸ்வதர்ம அனுஷ்டானத்தையும், அவற்றின் விழுமியங்களையும் கற்றுத் தர வேண்டும். அவற்றுக்காக மேற்சொன்ன நல்ல அமைப்புகளின் உதவியை நாடலாம். அவற்றை ஊக்குவித்தல் வேண்டும். ‘ஆர்ஷவித்யா சமாஜம்’ செய்து வரும் சேவைகளை அடையாளம் கண்டு, சமீபத்தில் சிருங்கேரி சங்கர பீடாதிபதிகள் அதிக அளவு நன்கொடை வழங்கி ஆசீர்வதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே போல் சில காட்சி ஊடகங்களும், இன்ஃபினிட்டி பவுண்டேஷன் போன்ற அமைப்புகளும் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றன. அவற்றின் கருத்துக்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும்படி பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
ஒரு வருத்தமான விஷயம்…
வைதிகமான, ஸ்மார்த்த குடும்பங்களில், ஆண்களுக்கு வேதமும் ஸ்மார்த்த வித்யையும் கற்றுத் தந்தாலும், பெண் குழந்தைகளை மட்டும் நம் காலாசாரத்திலிருந்து தொலைவாக, நவீன முறையில், நம் பரம்பரையின் மீது கௌரவம் இல்லாமல் வளர்க்கின்றனர். அதனால், வைதிக குடும்பத்து இளைஞர்களைக் கண்டால், இந்தப் பெண்களுக்கு பரிகாசமும் ஏளனமும் ஏற்படுகிறது. அதனால், சிறந்த வருமானம் இருந்தபோதிலும் பல வேத ஸ்மார்த்த அறிஞர்களான இளைஞர்கள், திருமணமாகாதவர்களாக இருக்கிறார்கள்.
பெற்றோர் தம் பெண் பிள்ளைகளுக்கு எந்தப் படிப்பு படிக்க வைத்தாலும், சம்பிரதாய விழுமியங்களைச் சொல்லிக் கொடுத்து, வைதிகத் தொழிலில் இருப்பவர்களிடம் கௌரவம் ஏற்படுத்தினால் இந்த விபரீத சூழ்நிலை மாறும்.
சனாதன தர்மத்தோடு தொடர்பை அறுத்துக் கொண்டால், கடுமையான எதிர்காலத்தைச் சந்திக்க வேண்டி வரும். மார்க்குகளும், ராங்குகளும், வருமானங்களும் அவற்றை சரி செய்ய இயலாது. இந்த உண்மையை ஹிந்து பெற்றோர் அடையாளம் காண வேண்டும்.
(தலையங்கம், ருஷிபீடம், ஆன்மீக மாத இதழ், டிசம்பர் 2024)