rss 100 years celeb - 2026

அனைவரையும் அரவணைத்து முன்னேறும் ஆர்எஸ்எஸ்.,!

கட்டுரைகள் அரசியல் லைஃப் ஸ்டைல்
rss 100 years celeb - 2026
#image_title

— வால்டர் ஆண்டர்சன் —
– ஐஸ்வர்யா பண்டிட்
–
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

1975 ஜூன் 25 தேதி இந்திரா காந்தியின் அரசு நெருக்கடி நிலையை அறிவித்தது. ஊழல் மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றியதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு தங்களை ஒடுக்க முனையும் என்று ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கருதினர். பிஹாரில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆர் எஸ் எஸ் ஆதரவளித்ததால் அரசின் கோபத்திற்கு அது உள்ளாகி இருந்ததென அவர்கள் நினைத்தனர். ஆனால் அரசு அதைவிட அதிகமாக, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டம் தேசிய அளவில் பரவவும் பிரபலமடையவும் ஆர்எஸ்எஸ் தான் காரணமென கருதியது.

அதற்கு சில காலம் முன்புதான் மதுக்கர் தத்தாத்ரேயா தேவரஸ் (பாளாசாஹேப் ) ஆர் எஸ் எஸ் ஸின் மூன்றாவது தலைவராக (1973 – 1994) பொறுப்பேற்று இருந்தார். அவருக்கு முன் சமய சாய்வு கொண்டிருந்த மாதவ சதாசிவ கோல்வல்கரை (1940 -1973) விட அமைப்பை செயலூக்கம் கொண்ட பாதையில் வழி நடத்தி வந்தார். தேச விடுதலைக்கு பின்னான கலவரங்கள் , அது தொடர்பான தடை (1947 – 48) ஆகியவற்றிலிருந்து மீட்டு ஆர் எஸ் எஸ் ஸை வலுவாக கட்டமைப்பதில் கோல்வல்கர் கவனம் செலுத்தினார்.

தேவரஸ் தன் முதல் பொதுக்கூட்ட உரையிலேயே ஜாதி முறைமையை சாடினார். குறிப்பாக சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்களை கீழ்த்தரமாக நடத்தும் விதத்தை கண்டித்தார். ஜெயபிரகாஷ் நாராயணனின் செயல்கள் அவருக்கு பிடித்திருந்தால் அவருடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார்.

அதேபோல் ஜெ பி யும் ஆர்எஸ்எஸ் மீது மதிப்பு கொண்டவரானார். குறிப்பாக தேவரஸின் தலைமையில் அது ஏழை எளியோருக்கு ஆற்றும் சேவைகளை பாராட்டினார். பிஹாரில் நடந்த ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் உரையாற்றிய போது , ” ஆர்எஸ்எஸ் உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான இயக்கம். நாட்டில் உள்ள வேறெந்த இயக்கமும், ஒப்பிட , இதற்கு அருகில் கூட வர முடியாது. இதுமட்டுமே ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வலிமை கொண்டுள்ளது. இதன் பெயரிலேயே ராஷ்டிரம் , தேசம் இருக்கிறது. நீங்கள் உங்கள் இயக்கத்தை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் என்றுதான் சொல்கிறீர்கள். ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் என்றல்ல,” என்று குறிப்பிட்டார்.

நெருக்கடி காலகட்டத்தில் காங்கிரஸ் செய்த அட்டூழியங்களை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர் எஸ் எஸ் ஸூம் தேவரஸூம் ஆற்றிய பங்களிப்பு பற்றி மிகக் குறைவாகவே பதிவாகி உள்ளது. சர்சங்கசாலக்காக இருந்த பாளாசாஹேப் தேவரஸூம் அவருடைய மூத்த, இளைய சகாக்களும் அவருடன் நெருக்கடி காலகட்டத்தின் போது (1975 – 77) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த காலத்தில் அவர்கள் வெவ்வேறு கருத்து கொண்டவர்களுடன் கலந்துறவாடி , அவர்களுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் பணிபுரியகூடிய அம்சங்களை, களங்களை கண்டறிந்தனர். இந்த நல்லுறவு நெருக்கடி காலகட்டத்திற்கு பிறகும் தொடர்ந்தது.

நெருக்கடி நிலை காலகட்டமும் கைது நடவடிக்கைகளும் அரசியல் குறித்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சிந்தனையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தின. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்கள் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வதில் கவனம் செலுத்தினர் . அரசியலிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தங்கள் தலைமையை வற்புறுத்தினர். சிலர் ஆர்எஸ்எஸ் ஸையே அரசியல் கட்சியாக வேண்டும் என்றனர். ஏற்கனவே இருந்த ஆர்எஸ்எஸ் தலைவர்களை போலவே தேவரஸூம் இந்த விஷயத்தை ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும் அனுபவத்தின் அடிப்படையில் அரசியல் உட்பட நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்களில் செயலூக்கத்துடன் கூடிய நிலைப்பாட்டை மேற்கொண்டார்.

1978 மார்ச் 12 தேதி நடந்த அகில பாரத பிரதிநிதி சபாவில் தேவரஸ் , ‘ அரசியலில் ஈடுபட்ட சிலர் வழுக்கி விழுந்து விட்டதால் அந்த களத்தையே தேவையற்றது என்று கருதக்கூடாது. குளியல் அறையில் வழுக்கி விழுந்து விட்டதால் குளிப்பதையே நிறுத்தி விட முடியாது, ‘ என்று பேசினார். 1978 மார்ச் 15 தேதி உரையில் சங்கம் தனது பாதையை மாற்றிக் கொள்வதை பற்றி , ஹெட்கேவார் தலைமையில் ஆர் எஸ் எஸ் க்கு அரசியல் நோக்கம் இருந்தது. குருஜி (கோல்வல்கர்) தலைமையில் கலாச்சார முனைப்பு கொண்டது. இப்போது சமுதாய ஒருங்கிணைப்பை மையம் கொண்டதாக செயல்படும், என்று குறிப்பிட்டார்.

ஹிந்து என்ற சொல்லை தெளிவாக வரையறுத்து, ஹிந்து என்ற வார்த்தை சிறப்பு மிக்கது. அது தேசிய பண்பாடு , தேசிய பாரம்பரியம் ஆகியவற்றை குறிக்கும் சொல்லாகும். நம் நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அந்நியர்கள் இல்லை , என்று குறிப்பிட்டார்.

மிக முக்கியமான கலாச்சார கூறுகளும் தத்துவங்களும் கொண்டதாக இந்து மதம் இருக்கிறது. அதுதான் இந்தியன் என்ற விரிவான அடையாளத்தை தருகிறது. என்றாலும் தேவரஸ் ‘ஹிந்து’ என்பதை மதம் சார்ந்த சொல்லாக அல்லாமல் பண்பாட்டுச் சொல்லாக, புவியியல் சார்ந்ததாக வரையறுத்தார்.

ஆனாலும் சங்கத்தை விமர்சிப்பவர்கள் ஹிந்து என்பதை பண்பாடு சார்ந்ததாக அல்லாமல் மதம் சார்ந்ததாகவே பொருள் கொண்டு சங்கம் முஸ்லிம்களுக்கு எதிரி கிறிஸ்தவர்களுக்கு எதிரி என்று மீண்டும் மீண்டும் குறை கூறி வருகின்றனர். உண்மையும் சான்றுகளும் அவர்கள் சொல்வதற்கு மாறாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதை ஆர்எஸ்எஸ் தேவரஸ் காலத்தில் இருந்து இன்றுள்ள சர்சங்கசாலக் மோகன் பாகவத் (2009 முதல் இன்று வரை) வரை வலியுறுத்தி வருகிறது.

ஜம்முவில் சுமார் 1200 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்ட முகாமில் தேவரஸ் பேசும்போது , ஆர் எஸ் எஸ் கண்ணோட்டத்திலான ஹிந்துராஷ்டிரத்தில் எல்லா இந்தியர்களும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அடங்குவார்கள். இந்த நாட்டிலுள்ள எல்லா முஸ்லிம்களும் அனைத்து கிறிஸ்தவர்களும் கலாச்சார ரீதியிலும் , இனரீதியிலும் ஹிந்துக்களே. எல்லா இந்தியர்களும் ஒரு தாய் மக்கள். எனவே சங்கம் ஹிந்து என்பதையும் பாரதிய என்பதையும் ஒரே அர்த்தத்தில் தான் பார்க்கிறது. யாரோ சிலருக்கு ஹிந்து என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்பதற்காக சங்கம் அந்த வார்த்தையை விட்டு விடாது , என்று கூறினார்.

தேவரஸ் தனது உரையில் மூன்று விஷயங்களை பற்றி பேசினார். 1. மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான பொதுவான முன்னோர்கள், பொதுவான வரலாறு உள்ளது. 2. ‘ ஹிந்து ‘ என்ற சொல் அனைவரையும் உள்ளடக்கியது. 3. சங்கத்திற்கு வெளியில் இருக்கும் மக்களுக்கு ஆர்எஸ்எஸ் தன் நிலைப்பாட்டை, அனைவரையும் அரவணைத்து செல்வதன் மூலம் தன் லட்சியத்தை அடைய முனைகிறது என்பதை, விளக்கிச் சொல்வது.

நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் அரசியல் சகாக்களுடன் இணைந்து ஜனதா கட்சி அரசியல் அங்கம் வகித்த போதிலும், 1979 மார்ச் 11 தேதி தேவரஸ் தனது உரையில், ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது என்ற தனது அடிப்படையான கட்டமைப்பு பணியை ஆர்எஸ்எஸ் விட்டு விடாது . அதற்கு எந்த தேவையும் எழவில்லை. நாம் தொடர்ந்து அதே வழியில் சமுதாயத்தை உயர்த்தும் பணியில் ஈடுபடுவோம். அதிகார அரசியலில் ஈடுபடும் நோக்கம் நமக்கு இல்லை. புகழ், அதிகார மோகம் நமக்கு இல்லை, என்று முந்தைய ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மேற்கொண்ட அதே நிலையை உறுதிப்பட தெரிவித்தார்.

ஜனதா அரசில் ஆர் எஸ் எஸ் காரர்கள் இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறது, என்று பலரும் குற்றம் சுமத்திய நிலையில் மேற்கண்டவாறு தேவரஸ் தெளிவாக , உறுதியாக சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். ஆர் எஸ் எஸ் , ஜனசங்க உறுப்பினர்களிடையே இருக்கும் உறவு குறித்து மற்றவர்கள் இரட்டை உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பி போட்டி பூசலை உருவாக்கியதால் ஜனதா கட்சி ஒன்றுபட்டதாக எழுச்சி பெற முடியாமல் போனது. இது பாரதிய ஜனதா கட்சி உருவாக வழி வகுத்தது. அந்த கட்சிதான் இன்று ஆர் எஸ் எஸ் முன்னாள் பிரசாரக்கான நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவை ஆண்டுக்கொண்டு இருக்கிறது.

ஆர் எஸ் எஸ் இன்று அனைத்து சமுகத்தைச் சேர்ந்தவர்களும், குறைந்தபட்சம் தலைவர்கள் நிலையில், சமமாகவும் தோழமையுடனும் பழகுவதை தங்கள் கிளை செயல்பாடுகள் மூலம் எட்டி உள்ளது. இது மிகப்பெரிய விஷயம்.

இந்தியர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் என்று பல்வேறு களங்களில் கிளை அமைப்புகளை ஆர் எஸ் எஸ் உருவாக்கியுள்ளது. விஸ்வஹிந்து பரிஷத்தை தவிர மற்ற எல்லா அமைப்புகளிலும் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு சமூக படிநிலையில் உள்ளவர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

பெண்களுக்கான அமைப்பு (இது 1930 ஆரம்பிக்கப்பட்டது) ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கருத்தியல் குடும்ப அமைப்புகளுடன் இணைந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் பெண்களும் அன்னையர்களும் இதுபோன்றே இணைந்து செயல்படுகின்றனர்.

அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவது இப்போது ஆர்எஸ்எஸ் ஸின் சாரமான கொள்கையாக உள்ளது. இதை தீனதயாள் உபாத்யாயா வார்த்தையில் சொல்வதானால் ஒருங்கிணைந்த மனிதத்துவம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

நன்றி : சண்டே கார்டியன்


கட்டுரையாளர்கள் : ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வால்டர் ஆண்டர்சன். ஆர் எஸ் எஸ் பற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார் ஐஸ்வர்யா பண்டிட்


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.