ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரக்காக இருந்த பெரு மதிப்புக்குரிய மறைந்த சிவராம்ஜி அவர்கள் ஒரு முறை கூட்டமொன்றில் பேசும்போது கூறினார்:
’’ ஒருவனுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வயிறு நிரம்பியது என்றால், அதற்கு பொருள் நான்காவது இட்லி சாப்பிட்ட பிறகு மேலும் இட்லி தேவைப்படவில்லை என்பது மட்டுமல்ல. நான்காவது இட்லிக்கு முன் மூன்று இட்லிகள் வயிற்றுக்குள் போயிருக்கிறது என்பதுதான்…”
காந்தியும் நேருவும் விடுதலை இயக்கத்தை ஏற்று நடத்தும் முன்னரே, வெள்ளைக்காரன் இந்த நாட்டில் ஊடுருவிய 18ஆம் நூற்றாண்டிலிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவனை நாட்டை விட்டு வெளியேற்ற போராட்டங்கள் நடைபெற்றே வந்திருக்கின்றன.
‘ கடமா தொலைச்சிய கானுரை வேங்கை
இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும் ; இடமுடைய
வானகம் கைபுறினும் வேண்டார் ; விழிமியோர்,
மானம் மழுங்க வரின்’ என்கிறது ஒரு நாலடியார் பாடல்.
காட்டுப் பசுவைக் கொன்ற புலியானது தான் கொன்ற பசு இடப்புறம் வீழ்ந்தால் அதனை உண்ணாது தனது உயிரையும் விட்டு விடும். அது போல் விசாலமான, செல்வம் கொழிக்கும் சொர்க்கம் கிடைக்குமானாலும், அது தனது மானம் அழிய கிடைக்குமானால், சான்றோர் அதை விரும்ப மாட்டார்கள்.
இந்த மூதுரைக்கு ஏற்ப, மானம் இழந்து வெள்ளையன் கீழ் வாழ்வதை விட அவனை எதிர்த்து போராடி மரணத்தை ஏற்பதே சாலச் சிறந்தது எனக் கருதி தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் எண்ணிலடங்க மாட்டார்கள்.
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது சும்மாவா வந்தது என்ற தேசப் பக்தி பாடல் ஒன்று உள்ளது… சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சியை,யதார்த்தத்தை பிரதிபலிக்கும் பாடல் அது..
அதன் சில வரிகள்….
‘’ எத்தனை எத்தனை தடியடியை தாங்கினர்
எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்
தூக்க மேடை ஏறி நின்ற காளையர்கள் எத்தனை
தாக்குகின்ற குண்டினாலே உயிர் இழந்தோர் எத்தனை..’’
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி,ஆயிரக்கணக்கானோர் சுதந்திர போராட்ட வேள்வியிலே ஆகுதி ஆகி இருக்கின்றனர் … இரு சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை மட்டும் இங்கே நினைவு கூருகிறேன் ..
சுதந்திர போராட்டத்தின் தணலை உணர்வதற்காக…
அது 1802ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 11ந்தேதி. கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கில அதிகாரி தூத்துக்குடியிலிருந்து வாராப்பூர் பொம்மு நாயக்கர், ஒரு 15 வயது சிறுவன் உட்பட 76 பேரை நாடு கடத்தினான்.
அவர்கள் செய்த குற்றம், வெள்ளையனை எதிர்த்து சுதந்திர முழக்கம் எழுப்பியது தான். எந்த மண்ணை தங்கள் உயிரினும் மேலாக நேசித்தார்களோ அந்த மண்ணிலே அவர்கள் நிழல் கூட விழாது செய்வதுதான் நாடு கடத்தலின் நோக்கம்.
PRINCE OF WALES தீவிற்கு (இன்று பினாங்கு என்று அழைக்கப்படும் பகுதி) 72 நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தனர். வழியிலேயே 5 பேர் மரணம் அடைந்தனர். 5 மாதத்திற்குள் தீவில் 32 பேர், நிலவிய சூழ்நிலையின் கொடுமையின் காரணமாக மரணம் அடைந்தனர்.
18 வருடம் கழித்து கர்னல் வெல்ஷ் ஒய்வு எடுக்க PRINCE OF WALES தீவிற்கு பயணம் ஆனான். அங்கு அடைந்த அவனைக் காண முதுகு வளைந்து, கூனிக் குறுகி, உடல் நடுங்க தள்ளாடிய படி ஓர் உருவம் வந்தது.
அருகில் வந்ததும், ”வெல்ஷ் சவுக்கியமா.. என்னைத் தெரிகிறதா “ என்று கேட்டான் குரலுக்கு சொந்தக்காரன்.
வெல்ஷிற்கு தெரியவில்லை. ” நான்தான் வெல்ஷ்..தொ..ர..சாமி , 18 வருடங்களுக்கு முன்பு .. தூத்துக்குடியிலிருந்து .. நாடு கடத்தினீர்களே…”.
15 வயது சிறுவனாக நாடு கடத்தப்பட்டவன்.. சிறை வாசத்தின் கொடுமை காரணமாக அப்படி ஆகியிருந்தான்.
”துரைசாமியா..!?”, வெல்ஷ் திகைத்துப் போனான்.
தன் ‘MILITARY REMINISCENCES’ (போர் கால நினைவுகள்) டைரியில் குறிப்பிடுகிறான்: ”இப்படி யொரு கொடுமையா.. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”.
அந்த துரைசாமி யார் தெரியுமா உங்களுக்கு? மருது பாண்டியர்களில்.. சின்ன மருதுவின் மகன். நம்மில் எத்தனை பேருக்கு இந்த வரலாற்று உண்மை தெரியும்…?
குதிராம் போஸ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகரமான இளைஞர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கிய வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட்டைக் கொலை செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 19.
குதிராம் போஸ் பிறந்தது 1889 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 3ந் தேதி. தூக்கிலிடப்பட்டது 1908 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 11ந் தேதி.
பிரிட்டிஷ் அரசு அவரைத் தூக்கில் போட முடிவு செய்தவுடன் மேற்கு வங்க மக்கள் கொந்தளித்தனர்.
குதிராம் போஸின் தாய் கதறினார். “”என் பச்சிளம் பாலகனை விட்டு விடுங்கள்” என்று அரற்றினார்.
குதிராம் போஸ் மனம் கலங்கவில்லை. தூக்கிலிடுவதற்கு முதல்நாள் இரவு, சிறைச் சாலையின் சுவரில் கரித்துண்டால் அவரது அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதினான்:
“”அழாதே அம்மா!
நான் மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில் மகனாக..
பிறந்தது
நான்தான் என்ப தறிய
குழந்தையின்
கழுத்தைப்பார்
அதில் –
தூக்குக் கயிற்றின்
தழும்பு இருக்கும்!
அழாதே அம்மா!”
அந்த நேரத்தில் அவரது சித்திக்கு பிரசவ நேரம். அதனால் அவர் அப்படி எழுதிவிட்டு தூக்கு மேடை ஏறினார்.
அதன் பிறகு மேற்கு வங்க மக்கள் குதிராம் போஸ் எழுதிய கவிதை வரிகளை சிறைச்சாலைச் சுவரில் தங்கள் கைகளால் தடவிப் பார்த்து ஆவேசமடைந்தார்கள்.
கிராமப் புறப் பாடல்களில் குதிராம் போஸின் வீரம் இன்றளவும் போற்றப்படுகிறது.”
இப்படி கூறிக் கொண்டே போகலாம்….
நான்கு இட்லிகளில் நான்காவது இட்லியாக வந்தவர்கள்தான் காந்தியும் நேருவும்..
ராமனும்,கிருஷ்ணனும் பிறந்த இந்த பூமியில்… ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த நாட்டிற்கு தந்தை என காந்தியை குறிப்பிடுவது எவ்வாறு பொருந்தும்…?!
இதை விட அபத்தம் ஒன்று இருக்க முடியுமா ?
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்






