
நாதுராமின் குடும்பம் பெரியது.. வினாயக் கோட்ஸேயிக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். கூடவே ஏழ்மையும்…
நாதுராமின் கோட்ஸேயின் தந்தைக்கு அடிக்கடி பணி நிமித்தமாக,அன்றைய பம்பாய் மாகாணத்தின் பல்வேறு குக்கிராமங்களுக்கு,சிறு நகரங்களுக்கு போஸ்ட் மாஸ்டராக பணி இட மாற்றங்கள் நடந்தன.
நாதுராம், தன் ஆரம்பக் கல்வியை தன் தாய் மொழியான மராத்தியில் படித்து முடித்த பிறகு மெட்ரிகுலேஷன் படிப்பதற்காக பூனா சென்றார். அவர் குழந்தையாக இருந்த போது,அவருக்கு தெய்வ வாக்கு கூறும் சக்தி இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் நம்பினர்.
குடும்ப தேவதையின் படம் முன் அமர்ந்து கொள்வார். ஒரு செம்பு தட்டின் மையப் பகுதியிலே புகையை படர விட்டு விட்டு அந்த புகை உருவாக்கிய பகுதியிலே உற்று நோக்கியவாறு இருப்பார். சற்று நேரத்தில் சமாதி நிலையை அடைந்து விடுவார்.
அப்போது அந்த கரும் பகுதியிலே அவருக்கு சில வடிவங்கள் மற்றும் எழுத்துக்கள் புலப்படும்..
வீட்டு உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரிடம் ஏதாவது கேள்விகள் கேட்பார்கள். அவரும் பதில் அளிப்பார். அவர் கூறும் பதில்கள் தேவ வாக்காகக் கருதப்பட்டது.
அதைப் பல முறை பார்த்திருந்த கோபால் கோட்ஸே கூறுகிறார் ‘’ தான் இதற்கு முன் படித்திராத வேத நூல்களில் இருந்த சமஸ்கிருத ஸ்லோகங்களை மனனம் செய்திருந்ததைப் போல் அண்ணன் கூறுவார். சமாதி நிலையிலிருந்து வெளியே வந்த பிறகு தான் கூறியது எதுவுமே அவருக்கு நினைவிருக்காது ‘’.
அவர் பதினாறு வயதை எட்டிய போது இந்த தெய்வ வாக்கு கூறும் பழக்கத்தை விட்டு விட்டார். மிகுந்த பக்தி எனும் நிலையிலிருந்தும் விலகினார்.
முன்பு போல் மனதைக் குவிக்க முடியாது போனது ஒரு காரணமாக இருக்கலாம் என குடும்பத்தினர் எண்ணினார். அவருக்கு வேறு விஷயங்களில் நாட்டம் ஏற்பட்டது.
அவரை ஒரு பெண் போல் வளர்த்து வர குடும்பத்தினர் எண்ணினாலும் அதிலிருந்து அவர் விடுபடத் தொடங்கினார். உடற் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
நீச்சல் அடிப்பதிலே தனித் திறமை பெற்று விளங்கினார்.அதில் ஒரு பெருமிதமும் கொண்டிருந்தார்.
எந்தவொரு விஷயத்தையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் திறமையுடன் விளங்கினார். அக்கம்பக்கத்தாரைப் பொறுத்த வரையில்,அவர் ஆப்த நண்பராகக் காட்சி அளித்தார்.அவர்களுக்கு நன்மைச் செய்யும் ஒருவராகத் தோன்றினார்.
ஒரு சாரணர் படை மாணவரைப் போல் தன்னை கருதிக் கொண்டு காரியங்களில் ஈடுபட்டார்.
கிராம கிணறுகளில் ஏதாவது பொருட்கள் தவறி விழுந்து விட்டால் அதை எடுப்பதற்கு ‘கூப்பிடுங்கள் நாதுராமை’ என்பர் கிராமத்து மக்கள். பூனைகளை விரட்ட வேண்டுமா, ஊரில் யாருக்காவது உடல் நிலை சரியில்லையா, கோயில் விழாக்களில் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டுமா, திருமண நிகழ்ச்சிகளா..
ஊர் ஏழை மக்களுக்கு உதவ ஆஜராகி விடுவார் நாதுராம்.
அவருடைய குடும்பம் லோனாவாலா எனும் ஊரில் வசித்தப் போது கிணற்றில் விழுந்து விட்ட தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தையைக் கிணற்றில் குதித்துக் காப்பாற்றினார்.
சற்றே நேரம் கழித்து தன் பெற்றோரிடம் இதைக் கூறியப்போது,தாழ்த்தப்பட்ட சமுதாயக் குழந்தையை தொட்டு விட்டு,’ பரிகார ஸ்நானம் ‘ செய்யாது வீட்டிற்குள் நுழைந்ததற்கு, மடி ஆசாரத்திற்கு பங்கம் விளைவித்ததற்காக அவரைக் கடிந்து கொண்டனர்.
அந்தக் காலங்களில் பிராமணக் குடும்பங்களில் இத்தகைய உணர்வுகள் இருந்தது சாதாரணமான ஒன்றே. ஆனால் இதைப் பற்றியெல்லாம் நாதுராம் கோட்ஸே கவலைப்படவில்லை.
பின்னாட்களில் நாதுராம் கோட்ஸே தீண்டாமையை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்ட போது அவருடைய பெற்றோர்கள் அவரைப் பற்றி மிகுந்த கவலை கொண்டனர்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்



