மயிலாடுதுறை : என்னைக் கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது குறித்து எனக்குத் தெரியாது என்று கூறினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்து சமுதாயத்தின் வழிபாட்டு உரிமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஒரு கோவிலில் கூட சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. கோயில் சொத்துக்கள் 82 சதவிகிதம் திருடப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
என்னைக் கைது செய்ய காவல்துறை தனி படை அமைத்துள்ளது பற்றி எனக்குத் தெரியாது. நான் தலைமறைவாக இல்லை.
ஆஹம விதிகளைக் காரணம் காட்டி நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு அனுமதி மறுப்பது கண்டனத்துக்கு உரியது. கோயில்களின் ஆகம விதிமுறைகளில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட உரிமையில்லை.
தமிழகத்தில் 10 ஆயிரம் இந்துக் கோவில்கள் காணாமல் போயுள்ளன… என்றார் ஹெச்.ராஜா. மேலும் சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப்படுத்தினர், ஆனால் தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை ? என்று அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பினார்.




