காந்தி செய்த இரண்டு மிகப் பெரிய பிழைகள்… மன்னிக்க முடியாதவை…
ஒன்று… அன்றையக் காலக்கட்டத்தில் அவருக்கு இருந்த ஆகிருத்திக்கு (STATURE)… அவர் பிரிவினையை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும் என்றே தேசபக்திமிக்கவர்கள் கருதுகிறார்கள்.
‘’ சுதந்திரம் கிடைப்பதற்கு இன்னும் சிறிது காலம் நான் காத்திருக்கத் தயார்.. அதுவரை ஆங்கிலேய அரசுக்கு என் ஒத்துழையாமை தொடரும். எக்காரணம் கொண்டும் பிரிவினையை மட்டும் ஒப்புக் கொள்ள மாட்டேன் ‘’ என்று காந்தி உறுதி படக் கூறியிருக்க வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகள், ஹிந்துக்களோடு சேர்ந்து வாழ்ந்த முஸ்லீம்கள், நிச்சயம் தொடர்ந்து வாழவே செய்திருப்பார்கள்.
இரண்டாவது பிழை… நேருவை முன்னிறுத்தியது.
நேதாஜியோ, வல்லபாய் படேலோ தலைமை ஏற்றிருந்தால் இந்த தேசத்தின் தலையெழுத்தே வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்படி நடக்காததை எண்ணி நம்மால் இப்போது வேதனைப் பெருமூச்சு மட்டுமே விட முடியும்….
1942ல் ‘ வெள்ளையனே வெளியேறு ‘ போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற பிறகே, காந்தியின் போக்கில், காங்கிரஸ் தலைவர்களின் மனப்போக்கில் மாறுதல் ஏற்பட்டு விட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த 1944 ஆம் ஆண்டே காந்தியின் மனம் பிரிவினைக்கு தயார் ஆகி விட்டது.
அதன் பின், ‘’ நான் பிரிவினையை ஏற்க மாட்டேன் ‘’ என்று கூறி வந்ததெல்லாம் வெறும் வெளிப் பேச்சிற்காகவே…
அந்தக் காலத்தில், வருடத்தில் சில வாரங்கள், பூனாவிலிருந்து 50 மைல்கள் தொலைவிலிருந்த பஞ்சக்னி எனும் மலை வாசஸ்தலத்தில், ஓய்வெடுப்பது காந்திக்கு வழக்கம்.
நாராயண் ஆப்தே, ஒரு தொண்டர்கள் படையோடு அந்த இடத்திற்குச் சென்று காந்தியை முற்றுகையிட்டார்.
‘’ பிரிவினையை ஏற்க மாட்டேன் ‘’ என்று கூறி விட்டு இப்போது தன் உறுதிமொழியை காந்தி மீறுவதாகக் கூறி, ஆப்தேயும் அவருடன் சென்ற தொண்டர்களும் கோஷமிட்டனர்.
1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ந் தேதி, தி டைம்ஸ் ஃஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் தலைப்பிட்டது :
‘ MR.GANDHI HECKLED ‘ – பொருள் : ‘ காந்திக்கு எதிராக கோஷங்கள் ‘
அதன் செய்தியில் அது கூறியதாவது … பூனாவைச் சேர்ந்த நாராயண் ஆப்தே எனும் பத்திரிகையாளர், ஹிந்து இளைஞர்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டு,’ தேசப்பிரிவினைக்கு காந்தி தன் ஆசிகளை வழங்கி விட்டதாகக் கூறி கோஷங்கள் எழுப்பினார் ‘.
காந்தியின் பாதுகாப்பிற்கு, சாதாரண உடையில், ஆனால் ஆயுதம் ஏந்தி நான்கு போலிஸ் அதிகாரிகள் இருந்தனர் என்றும் ‘ டைம்ஸ் ‘ குறிப்பிட்டது.
கோஷங்கள் எழுப்பிக் கொண்டும், கருப்புக் கொடிகள் காட்டிக் கொண்டும் இருந்த நானூறுக்கும் மேற்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி இழக்கத் தொடங்கியதும், போலீஸ்காரர்கள் ஆப்தே மீது பாய்ந்து, அவரை கைது செய்து, அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது பஞ்சக்னி பகுதியின் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்த N.Y.DEULKAR உயரமான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர்…
பிற்காலத்தில் காந்தி கொலை வழக்கு விசாரணையில் முக்கியப் பங்காற்றியவர்..
தேனொழுகும் குரலில், வசப்படுத்தும் விதமாக ஆப்தேயிடம் விசாரணை மேற் கொண்டார். போராட்டத்தை கைவிடும்படியாகக் கேட்டுக் கொண்டார்.
‘ 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே, காந்தியை வெளிப்படையாகவே வெறுத்தவர் ஆப்தே ‘ என, பின்னாளில் காந்தி கொலை வழக்கில் , ஆப்தேயை சேர்க்க உதவியது எனும் காரணத்தால்தான், இந்த தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்



