விஷ்ணு கார்கரே கடும் உழைப்பாளி என்பதையும்,வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சமூகத்தில் மரியதைக்குரிய ஒரு நிலைக்கு வந்தவர் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். அவர் எண்ணியிருந்தால்,தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்கம் செய்துக் கொண்டே போயிருக்கலாம்,நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருந்திருக்கலாம்.
ஆனால் ஒரு நிலைக்கு வந்ததும் ,இது போதுமென்று என்று எண்ணினார். இனி தன் உழைப்பை,தேசத்திற்காக,தன் மதத்திற்காக,சமூகத்திற்காக கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதன்படி நடக்கவும் செய்தார்.
தன்னுடைய டெக்கான் விருந்தினர் விடுதிக்கு ஒரு மேலாளரை நியமித்து,அவர் மூலம் நடத்தி வந்தார். விடுதியின் மூலம் நல்ல லாபமும் கிடைத்து வந்தது.
நவ்காளியிலிருந்து திரும்பிய பின்பு, ஆப்தேயின் அழைப்பின் பேரில்,வாரம் ஒரு முறையேனும் பூனா வந்து அவரைச் சந்தித்து பேசுவார்;ஆப்தேயுடன் பலமுறை பம்பாய் சென்று வந்தார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து அஹமத் நகரிலேயே வசித்து வந்தார். தன்னுடைய டெக்கான் விருந்தினர் விடுதியை மேற்பார்வையிடுவது,ஹிந்து மஹா சபா அலுவலகத்தை பார்த்துக் கொள்வது எனும் பணிகளை செய்து வந்தார்.
ஆனால் இந்த அன்றாட பணிகளில் அவருக்கு அதிக ஆர்வம் இல்லை.
இந்த நேரத்தில்… பாகிஸ்தானிலிருந்து சொந்த நாட்டிற்கே அகதிகளாய் திரும்பியவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அஹமத் நகர் வந்து சேர்ந்தனர்.
‘அகதிகளுக்கான நிவாரணப் பணி ‘ இப்போது கார்கரேயை ஈர்த்தது.அதில் முழு மூச்சில் ஈடுபடத் தொடங்கினார். இந்த வேலையில் கார்கரேயோடு சேர்ந்து பணியாற்றிய கனாஷ்யாம் கில்டா ( GHANASHYAM GILDA ) கூற்றின்படி,
அகதிகள் அஹமத்நகர் வரத் தொடங்கிய போது,அரசாங்கம்அவர்களுக்கான எந்தவொரு அடிப்படை ஏற்பாட்டினையும் கூட செய்யவில்லை. அவர்களை ரயில் பெட்டிகளுக்கு அருகே விட்டு விட்டுச் சென்று விட்டது.
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் குப்பைக்கூளங்களைப் கொட்டுவது போல கொட்டி விட்டுச் சென்று விட்டது. ‘’ நீங்கள் எப்படியோ பிழைத்துபோங்கள் ‘’ எனும் மனோபாவமே தொனித்தது.ஏனென்றால் அவர்களைப் பற்றி பிறகு மறந்தே போனது.
கனாஷ்யாம் கில்டா, தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து சில லாரிகளை வரவழைத்து, அகதிகளை நகரத்திற்குள் ஏற்றி வந்து,அவர்கள் தங்குவதற்கு இடத்தையும் பார்த்து ,தகரத்தாலான கூரைகளையும் செய்வித்து அங்கு தங்க வைத்தார்.
ஆனால், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது. கார்கரே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கனாஷ்யாம் கில்டா அகதிகளை நகரத்திற்குள்,லாரிகளில் ஏற்றி வருவார். கார்கரே, அவர்களுக்கு தன்னுடைய ஹோட்டலில் உணவளிப்பார். சில நாட்கள் சென்ற பிறகு,கார்கரே ராணுவத்தினரிடமிருந்து கூடாரங்களை பெற்று அவற்றை பயன் பாட்டிற்கு தயாரும் செய்தார்.
ஏறக்குறைய ஒரு மாதக் காலத்திற்கு,அதாவது அரசாங்கம் ‘ விஸாப்பூர் ‘ அகதிகள் முகாமை உருவாக்கும் வரையில்,கார்கரே எப்படியும் 30000 பேருக்கான உணவு ஏற்பாட்டையாவது செய்திருப்பார்.
இந்த ‘ விஸாப்பூர் முகாம் ‘ அஹமத்நகரிலிருந்து 26 மைல்கள் தூரத்தில் அமைந்திருந்தது. இதனை கிட்டத்தட்ட ஒரு புறக்கணிக்கப்பட்ட சிறையென்றே சொல்லலாம். அதில் 10,000 அகதிகளுக்கு குறைவில்லாமல் ‘ அடைக்கப் பட்டிருந்தனர்’.
அதிகாரப்பூர்வமான தகவலின்படி, அந்த அகதிகள் கடும் கோபத்தில் இருந்தனர். டெல்லியைப் போலவே இங்கேயும் கூட முஸ்லீம்கள், தங்கள் சொத்துக்களைப் பார்த்துக் கொண்டு,தொழிலினை செய்துக் கொண்டு,அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு, ‘ அரசாங்கம் முழு பாதுகாப்பளிக்க ‘ சுகமாக வாழ்ந்து வந்தனர்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்



