“கலப்பட பால் விவகாரத்திற்கு பிறகு ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சி பெரிதளவில் இல்லை”
-தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்மை நிலவரம்.

“தனியார் பால் நிறுவனங்கள் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ஆபத்தான ரசாயனங்களை கலப்படம் செய்கின்றன. அதனால் தனியார் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது” என கடந்த ஆண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போது அடிப்படை ஆதாரமற்ற அவரது பேச்சினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடுமையாக எதிர்த்ததை அனைவரும் நன்கறிவீர்கள்.

அமைச்சரின் உள்நோக்கம் கொண்ட அடிப்படை ஆதாரமற்ற அந்த பேச்சினை கடுமையாக எதிர்த்த போது தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பேசுவதாகவும், பொன்னுசாமி பால் முகவரே அல்ல எனவும் அமைச்சர் அடுக்கடுக்காக என் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததோடு, எனக்கு பால் விநியோகம் செய்யும் தனியார் பால் நிறுவனமும், ஆவின் மொத்த விநியோகஸ்தரும் அமைச்சரின் பெயரால் எனக்கு பால் விநியோகம் செய்யக்கூடாது என என்னை பால் வணிகத்தை விட்டே துரத்தும் நோக்கில் அவர்கள் மிரட்டப்பட்டதும் தனிக் கதை.

மேலும் அமைச்சர் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து அவ்வாறு பேசிய காரணத்தால் தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, ஆவின் பால் விற்பனை பல லட்சம் லிட்டர் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும், அமைச்சரை எதிர்ப்பதாக நினைத்து தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராகவும், ஆவின் நிறுவனத்திற்கு மறைமுகமாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் செயல்பட்டது எனவும் தனியார் பால் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் எங்களது சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக வதந்திகளை கிளப்பி விட்டனர்.

சரி அமைச்சர் அவ்வாறு பேசிய பிறகு ஆவின் பாலின் விற்பனை உண்மையில் உயர்ந்திருக்கிறதா? என்பதற்கு விடை காண கடந்த 01.11.2018அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். நாங்கள் கேட்டிருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு வரப்பெற்றுள்ள பதிலில் “ஓரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்” என்கிற அடிப்படையில் கீழ்க்காணும் தகவல் அமைந்துள்ளது.

அது என்னவெனில் 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது? என்கிற கேள்விக்கு சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 11.61லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 01.07.2016ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட அதே கேள்வியை கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். அந்த கடிததத்திற்கான பதிலில் சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 11.25லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை சுமார் 2.5ஆண்டுகளில் சென்னையில் மட்டும் வெறும் 36ஆயிரம் லிட்டர் மட்டுமே ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக உறுதியாக தெரிய வருகிறது.

அதே போல் பால் கொள்முதல் தொடர்பான மற்றொரு கேள்விக்கு 2016ம் ஜூலை மாதம் நிலவரப்படி தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 33லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி நாளொன்றுக்கு 35.77லிட்டராக இருக்கிறது. இது கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை 2.5ஆண்டுகளில் சுமார் 2.77லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் அதிகரித்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக உறுதியாக தெரிய வருகிறது.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் செய்வது எவராக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதிலும், அவ்வாறு கலப்படம் செய்வது ஆவின் நிறுவனமாக இருந்தாலும், தனியார் பால் நிறுவனங்களாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் உறுதியாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி பால் கலப்படம் தொடர்பாக தவறான தகவல்களையோ அல்லது வதந்திகளையோ பரப்புவது மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்தாலும், அரசு அதிகாரிகளாக இருந்தாலும் அல்லது பொதுமக்களாக இருந்தாலும் அவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதிலும் தெளிவாகவே இருக்கிறோம். அந்த வகையில் தான் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்களை நாங்கள் கடுமையாக எதிர்த்து நின்றோம். தவறிழைப்பது எவராக இருந்தாலும் இனியும் அப்படியே செயல்படுவோம்.

அப்படியானால் பால் விற்பனையில் ஒரு சுணக்கம் ஏற்பட என்ன காரணம்? என அலசி ஆராய்ந்த போது கீழ்க்காணும் உண்மைகள் உறுதியாகின்றன.

1) தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்கள் அவ்வாறு பேசியதின் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பால் குறித்து மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டு கடந்த ஓராண்டில் மட்டும் பால் உபயோகத்தை பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொண்டுள்ளனர் என்பதை பொதுமக்களோடு கலந்துரையாடியதில் தெரிய வந்தது.

2) இளம் தலைமுறையினர் மத்தியில் பசுமைத் தேனீர் (Green Tea), எலுமிச்சை தேனீர் (Lemon Tea) மோகம் பெருகி வருவதால் பால் தேவைகள் குறைகிறது.

3) உணவகங்களில் காபி, தேனீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் உணவகங்களில் தேனீர் அருந்துவதை குறைக்கத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக உணவகங்கள் பால் கொள்முதலை கணிசமாக குறைத்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

4) மேலும் தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் புற்றீசல் போல புதிது, புதிதாக நிறைய தோன்றியுள்ளதால் முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் விற்பனையில் கடுமையான சரிவு ஏற்பட மற்றொரு காரணம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.

~ சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்.)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...