காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 101):

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ந் தேதி இரவு….

காந்தி தன் உண்ணாவிரதத்தை தொடங்கிய மூன்றாம் நாள்….

மத்திய அரசு ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.

‘ பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை நிறுத்தி வைப்பது எனும் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டதாக அறிவித்தது.

பணத்தை நிறுத்தி வைப்பதின் மூலம் எழக்கூடிய சந்தேகத்தையும், உரசலையும் தவிர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தது.

அமைதிக்காகவும்,நல்லிணக்கத்திற்காகவும், காந்தி மேற்கொண்டிருக்கும் உன்னத, அகிம்ஸை வழியிலான முயற்சிக்கு இது அரசின் பங்களிப்பு என்றும் கூறியது ‘.

படுக்கையிலிருந்த காந்தி உடனே அரசை பாராட்டி செய்தி அனுப்பினார்.

‘ஒப்புக் கொண்ட விஷயத்தை ஒப்புக் கொண்டபடி உடனே செய்தமைக்கு பாராட்டு ‘என்று அந்த செய்தி கூறியது.

இதற்கிடையே ஒரு புறம் பேச்சு வார்த்தைகள் மூலமும், மறுபுறம் பலப் பிரயோகம் மூலமும் அகதிகளின் ‘ எதிர்ப்பு ஊர்வலங்கள் ‘ நிறுத்தப்பட்டன.

குறைந்த பட்சம், பிர்லா ஹவுஸிலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஜனவரி மாதம் 16ந் தேதியிலிருந்து ‘ காந்தியை சாகும்படி ‘அறிவுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்கள் அவர் காதுகளில் விழாதபடி செய்து விட்டார்கள்.

அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் ஒரு 7 அம்ஸ ஃபார்மூலாவை முன் வைத்தார்.

அதன் மூலம் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள காந்தி முன் வைத்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என நம்பினார்.

ஹிந்துக்களும் ,சீக்கியர்களும் முஸ்லீம்களுக்கு இடையூறு செய்வதில்லை எனும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்…

 இந்த உறுதிமொழிக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்…பல்வேறு அகதி அமைப்புகள் மத நிறுவனங்கள்….மற்றும் பல்வேறு சமூக,சமுதாய நல அமைப்புகள்..
ஒப்புதல் அளிக்க வேண்டும்.

குறிப்பாக முஸ்லீம்கள் பெரும் பான்மையாக இருந்த இடங்களிலிருந்த பல்வேறு அமைப்புகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

காந்தியின் மரணம் எனும் அச்சுறுத்தல் காரணமாக பலரும் வேண்டா வெறுப்பாக இதற்கு ஒப்புக்கொண்டனர்.

இருந்தாலும் இந்த உறுதிமொழி பத்திரத்தில், எதிர்பார்க்கப்பட்ட பலரும் கையெழுத்திடுவார்களா எனும் சந்தேகமும் ,பதற்றமும் கடைசி நிமிடம் வரை இருந்துக் கொண்டே இருந்தது.

ஜனவரி மாதம் 17ந் தேதி இரவு முழுவதும் விழித்திருந்து அனைத்து கையெழுத்துகளையும் பெற்றார் ராஜேந்திர பிரசாத்.

காலையில் வெற்றி பெருமிதத்தோடு, கையெழுத்துகள் அடங்கிய ஆவணம் காந்தியிடம் கொண்டு செல்லப்பட்டது.

டெல்லியின் மக்கள்..

‘’முஸ்லீம்களின் உயிர்,உடமைகள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளை பாதுகாக்க உறுதி ஏற்றனர். டெல்லியில் நடந்தேறிய சம்பவங்கள் இனி நடக்காது’’

என ஆவணத்திலிருந்த வாசகங்கள் கூறின.

இந்த செய்கை தன் நெஞ்சை தொட்டு விட்டதாக உணர்ச்சி பெருக்குடன் கூறிய காந்தி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்து பிரார்த்தனைக் கூட்டம் நடைப்பெற்றது.

அதில் ஜப்பானிய, முஸ்லீம் மற்றும் பார்ஸிக்களின் மத நூல்களிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து…

’’அஸதோமா சத்கமய…
தமஸோமா ஜ்யோதிர்கமய…
ம்ருத்யோமா அமிர்தங்கமய….’’

எனும் சமஸ்கிருத மந்திரம் ஜெபிக்கப்பட்டது.

’’அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நோக்கி… இருளிலிருந்து ஒளியை நோக்கி….
மரணத்திலிருந்து மரணமில்லா வாழ்வை நோக்கி…’’

என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

தன் முஸ்லீம் நண்பர் அபுல் கலாம் ஆசாத் பழ ரசத்தை கொடுக்க, காந்தி அதைப் பருகி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

ஆப்தேயும்,நாதுராமும் பம்பாயிலிருந்து பயணித்த விமானம் டெல்லியை வந்தடைந்தது….

(தொடரும் )

காந்திகொலையும்பின்னணியும்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...