October 28, 2021, 3:09 am
More

  ARTICLE - SECTIONS

  ஆரிய நாடு- ஆரிய இனம்! திராவிட நாடு- திராவிட இனம்! இல்லாததும் பொல்லாததும்!

  helo a - 1

  ஆரிய நாடு ஆரிய நாடுன்னு எங்காச்சும் இருக்கான்னு தேடிப் பாத்தேன்… ஆனா, திராவிட தேசம்னு பழங்கால நாடு இருந்ததா தெரியவருது! அதுக்குப் பேருதான் திராவிட நாடு. திராவிட நாடு இருந்துது ஆனா திராவிட இனம்னு ஒன்னும் கிறிஸ்துவ பாதிரிகள் வருவதற்கு முன்னே இங்கே இல்லை…

  பண்டைய பாரத பூமி, 56 தேசங்களாக பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு தேசத்தையும் ஆள்பவர்கள் வேறு வேறு. அவர்கள் மொழி, உணவுமுறை, உடை உடுத்தும் தன்மை, பழக்க வழக்கங்கள், இயல்பு எல்லாம் வேறு வேறு. ஆனால், கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகவே இருந்தார்கள். அவர்களைப் பிணைத்தது, ராமனும் கண்ணனும், சிவனும் அம்பிகையும்! நாளும் நட்சத்திரமும், கோளும் குணங்களும்!

  அப்படின்னா… ஆரிய என்று சொல்லுக்குப் பொருள்?
  ஆர்ய எனில்… கல்வியிற் சிறந்தவன்னு பொருள்! குணத்தில் உயர்ந்தவன்னு பொருள்! மேம்பட்டவனை ஆர்ய என்றும், மேம்பட்டவர்கள் அரசு புரிவதை ஆர்ய ஆட்சி என்றும் கவிஞர்களும் புலவர்களும் பாடல்களில் போற்றி வைத்தார்கள்!

  வாழிய செந்தமிழை எத்தனை இடங்களில் நாம் பாடியிருப்போம்…
  எத்தனை கூட்டங்கள் முடிந்ததும், நாட்டுப் பண் எனும் அளவில்!

  வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித் திருநாடு
  வந்தே மாதரம் ! வந்தே மாதரம்! வந்தே மாதரம் என்று சொல்லி முழங்கிவிட்டுப் போய்க் கொண்டிருப்போம்.
  ஆனால், இந்த வரிகளின் முன்னும் பின்னும் அறிவோமா?

  பாரதியே கைகொடுக்கிறார்!
  நண்பர் ஒருவரின் பேஸ்புக் பதிவில் எப்போதோ கண்டது…


  பாரதியார் பாடல்

  ””ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்
  ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் ””.

  சீரிய சிந்தனை !

  நேரிய பார்வை !

  வீரிய உணர்வு !

  பாரிய நோக்கு !

  கூரிய மதி ! படைத்த பாரதியின் பாடல்களில் ஆரிய எனும் பிராமண வெறியா …. சமஸ்கிருதப் பற்றோ… ?

  இதோ பாரதிதம் ‘ஆரிய’ பாடல்கள் :

  1.தமிழ்த் தாய் பாடலில்……………..
  ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
  ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
  வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
  மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

  2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
  ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

  ஆரிய நாடு எது?

  3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
  பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
  ஆரிய நாடென்றே அறி

  ஆரியர் யார்?

  4.சங்கு என்ற பாடலில்………………
  பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
  புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
  ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
  ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

  5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
  ஆரிய வேல் மறவர் – புவி
  யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
  சீரியல் மதிமுகத்தார் – மணித்
  தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்

  6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
  அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
  ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
  சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

  பாரத மாதா= ஆரிய மாதா

  7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
  முன்னை இலங்கை அரக்கர் அழிய
  முடித்தவில் யாருட வில்? – எங்கள்
  அன்னை பயங்கரி பாரத தேவி நல்
  ஆரிய ராணியின் வில்

  சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
  சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
  அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
  ஆரிய ராணியின் சொல்

  8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
  அணி அணியாயவர் நிற்கும் – இந்த
  ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

  9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
  பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
  சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
  வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
  ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்

  ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
  பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
  அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
  பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
  பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
  ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
  (பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

  10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
  சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
  ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
  ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
  சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

  (சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

  இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார்.

  பாரதியார் தொல்காப்பியர் காலத்து , ‘ஆரியர்’ எனும் கற்ற மேன் மக்கள் நிறைந்த தமிழ்நாடு / இந்திய நாடு எனும் பொருளில் பாடுகிறார்… அவர் இன்றைய சாதிய பிராமணர் பற்றியா பாடுவார் !? .

  ஆரிய / ஆரியர் எனும் சொல்லைப் பார்க்கும் தமிழர் அதன் பொருள் பார்க்க மற்றும் தக்க சான்று பார்க்க தவறி விட்டனர். இதனால் தமிழர்கள் பலர் பாரதி தம் சாதி கொள்கைக்கு ஆளானவரே என்கின்றனர். … , குலத்தால் அவர் பிராமணர் என்பதால் அவரை சந்தேகிக்கின்றனர். இந்த சந்தேகம் தமிழர்க்கு வரும் என்று அறியாதவனா பாரதி…

  பாரதி , பல பிராமண கொள்கைகளை எதிர்த்து முண்டாசு… மீசை… குடுமி இன்மை என்று வீறு கொண்டு வாழ்ந்தவன்… .

  ஆரிய என்றால் பிராமணன் என்று , தேன் தமிழின் வேர்ச்சொல் காட்டும் மா மேதை தேவநேய பாவாணர் முதல் கொண்டு அறிஞர் பலர் கருத்துக்கள் தமிழரை பாரதியை விட்டு எட்டி நிற்க வைக்கிறது…

  நம் பாரதி மாசு மறுவற்ற … குற்றமற்ற சொல் வேந்தன் …சொல் பிழை பொருட்பிழை இல்லாத , ஈடு இணையற்ற .. நிகரற்ற ‘மா’த் தமிழன்… ; பெருந்தமிழன் நம் பாரதி…

  உலக இயக்கம் அறிந்த / பிரம்மம் அறிந்த அந்தணன் , பிராமணன் எனும் ‘ புது சொல்லாக்கத்தின் ‘ நாயகன் நம் பாரதி…

  பராதி போல் எத்தனை எத்தனையோ பாரதிகள்… நம் மண்ணில்…
  நமக்கு அவர்களைப் புரிந்து கொள்ள தெரியவில்லை …

  நம் தாயன்பு பாரதியை … மறத்தமிழன் பாரதியை … சன்னம் சன்னமாக புரிந்து கொள்வோம்.

  தமிழுக்கும் , தமிழர்க்கும் , தமிழ்த்திரு நாட்டிற்கும் என தன் உயிரின் தேவைக்கும் ;

  பாரத தாய் / வையம்(உலகம்) என தன் ஆத்மா தேவைக்கும் ;

  சரிநிகர் பார்வையை செலுத்தும் மார்க்கத்தைப் பாரதி வழி
  மெல்ல மெல்ல அணுகி அறிகடல் ஆவோம்..

  குறிப்பு: ”ஆரிய” தொகுப்பு – லண்டன் சுவாமிநாதன்.

  1 COMMENT

  1. ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல்.ஆரியம் என்ற சொல்லுக்கு நல்ல குணம் என்று பொருள்.இந்த சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் உள்ளது. பெரும்பாலும் பண்டைய இந்தியாவில் குமரி முதல் இமயம் வரையும் தற்பொது உள்ள அஸ்ஸாம் என்ற காமரூபம் முதல் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் என்ற காந்தார தேசம் வரை இருந்த 56 தேசங்களுள் ஒன்றாக வட இந்தியாவில் இமய மலையின் அடிவாரத்தில் இருந்த ஆரிய தேசம் என்ற ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் ஆரியர் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அதே சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து “ஆரிய அண்ணல்” என்று அந்த ஆரிய தேச அரசனை குறிப்பிடுகிறது.இந்த ஆரிய தேசம் என்பது தற்போது உள்ள உத்தர்கண்ட் மாநிலத்தின் வடபகுதி மற்றும் இமாச்சலபிரதேச மாநிலத்தின் தென் பகுதியாக இருக்கலாம்.சடைய வர்மன்(சடைய வன்மன் அல்லது வற்மன் ) சுந்தர பாண்டியன்(1252-1271) என்ற ஒரு பாண்டிய மன்னனின் மெய் கீர்த்தியில் கூட ஆரிய தேசம் என்ற ஒரு தேசத்தை குறிப்பிட்டு உள்ளது.
   ஐம்பெரும்காப்பிங்களில் ஒன்றாய மணி மேகலை காப்பியத்தில், ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதையில் “ஆரியன் அமைதியும் அமைவுறக்கேட்டு ” என்று புத்தரை சொல்லி உள்ளது.இமய மலையில் தவம் செய்யும் முனிவர்களை “ஆரியன் ” என்று சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து சொல்லி உள்ளது.

   குறுந்தொகை 184-வது பாட்டு நெய்தல் தலைவன் கூற்று எழுதியவர் “ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன்” என்று சொல்லப்பட்டு உள்ளது. இன்றும் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் என்று ஒரு தமிழ் அரச குடும்பம் உள்ளது.

   ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன்.

   இயம் என்பது தமிழில் குணத்தைக் குறிக்கும் ஒரு விகுதி.

   காப்பு+இயம்=காப்பியம். காப்புத் தன்மை உடையது காப்பியம்

   இலக்கு+இயம்=இலக்கியம். இலக்குத் தன்மை உள்ளது இலக்கியம்.

   ஒன்று+இயம்=ஒன்றியம். ஒன்றான தன்மை ஒன்றியம்.

   நகர்+ இயம்=நகரியம். நகர் தன்மை நகரியம்.

   பெண்ணியம்=பெண்+இயம் பெண் தன்மை பெண்ணியம்

   அதே போல் ஆள்+இயன்=ஆளியன். ஆள் தன்மை உள்ளவன் ஆளியன்.

   ஆளியன் என்பதில் இயன் என்பது பொதுவாக குணத்தைக் குறித்தாலும் இங்கு நல்லகுணத்தை தான் குறிக்கும்
   தமிழ் இலக்கண விதிப்படி “ள” என்ற எழுத்து “ர” என்று மாறும். சொல்லில் இந்த இரண்டு எழுத்துகளையும் மாற்றி எழுதலாம்.

   தெளிவு-தெரிவு,
   உளி-உரி,
   சுளுக்கு-சுருக்கு,
   ஆயுள்வேதம்-ஆயுர்வேதம்,
   திரும்பு-திளும்பு,
   துருக்கர்-துளுக்கர்.
   நீரு-நீளு(தெலுங்கு)( நீர்-தமிழ்).

   இவை போல ஆளியன்-ஆரியன்.

   இன்றும் வட இந்தியாவில் பெண்களுக்கு ஆளியா என்ற பெயர் உள்ளது அதன் பொருள் நல்ல குணம் உள்ளவள்,பண்பாடு உள்ளவள் என்று ஹிந்தியில் பொருள் சொல்லப்படுகிறது.இந்த சொல் ஆளியை அல்லது ஆளியாள் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம்.

   சித்தர்கள் எல்லாம் நல்ல குணம் உள்ளவன் என்று இறைவனை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர்.சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் பார்வதியை ஆரியத்தாள்,ஆரிய நங்கை என்று சொல்லி குறிப்பிடுகிறார்.

   தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது.

   தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது.

   கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆரிய நாடு என்று ஊர் பெயர் உள்ளது.

   கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு என்ற ஊர் பெயர் உள்ளது.

   கேரளாவில் ஆரிய வேம்பு என்று வேம்பைக் குறிப்பது உண்டு.காரணம் வேம்பின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர்.

   தமிழ் நாட்டில் கேழ்வரகை கொங்கு மண்டலத்தில் ஆரியம் என்று அழைப்பது உண்டு.காரணம் கேழ்வரகின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர்.

   சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன…………………………….

   திராவிடம் என்ற சொல்லும் தமிழ் சொல் தான்.சம்ஸ்க்ருதத்தில் சிதைந்த திரிந்த வடிவில் “த்ரவிடா” என்று உள்ளது.விந்திய மலைக்கு கீழ் உள்ள நிலப்பகுதியை சம்ஸ்க்ருதம் த்ரவிடா என்று சொல்லுகிறது.சம்ஸ்க்ருதம் “த்ரவிடா” என்ற சொல் “த்ரவ” மற்றும் “விடா” என்ற இரண்டு சொல்களின் கூட்டு என்று சொல்கிறது.த்ரவிடா என்ற சொல் நிலப்பகுதியை குறிக்கும் சொல் என்று சம்ஸ்க்ருதம் சொல்கிறது.

   த்ரவ என்றால் நீர். விடா என்றால் பகுதி என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்கிறது.அதாவது நீர் சூழ்ந்த பகுதி என்று சொல்லுகிறது.

   இந்த சொல் திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் என்ற சொல்லின் திரிபு என்று உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் இந்த பெயர் வந்தது.திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல்.

   தேசம்+இயம்=தேசயியம்=தேசியம்
   விழுமம்+இயம்=விழுமயியம்=விழுமியம்
   இவை போல் திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம்
   (திராவிடம் என்ற சொல்லில் ர இங்கு நீட்டல் விகாரப்பட்டு உள்ளது)

   மெட்ராஸ் பாஷையில் கூட இடம் என்பதை விடம் என்று சொல்வது உண்டு என்று சொல்லப்படுகிறது.

   “ஆரியம் என்பது குணத்தை குறிக்கும் சொல்……..திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் சொல்”

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-