spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஉண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்... சுகி சிவம் என்ற திறமையான பேச்சு வியாபாரி!

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்… சுகி சிவம் என்ற திறமையான பேச்சு வியாபாரி!

- Advertisement -

 

சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது.

திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம்.

‘சாமி உன்னுது பூசை என்னுது’ என்று கூட்டணி வைத்தார்கள் என்று வேறு கொச்சைப்படுத்துகிறார் இந்து சமயத்தை. வேத சமயத்திலும் சரி அதன் பன்மை வளர்ச்சியிலும் சரி பூசகர் முறைகள் வேற்றுமை உடையவை. மிக அண்மை காலங்கள் வரை விலங்கு பலியிடுதல் நம் பெரும் கோவில்களில் இருந்ததும் அதனை அருட்பிரகாச வள்ளலார் முதல் திருமுருக கிருபானந்த வாரியார் வரை எதிர்த்து பல கோவில்களில் இல்லாமல் ஆக்கியதும் வரலாறு. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இந்த பன்மை சிறப்பை கொண்டாடுகிறார்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்;

ஷடாக்ஷர மந்திரத்தை சொல்லி வழிபடுகின்றனர் அந்தணர். அவர்கள் வெளியிலிருந்து வந்தவர் என்றோ அன்னியர் என்றோ அல்லது வடக்கத்தியர் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக ‘தொல்குடி’ என காட்டப்படுகின்றனர். இந்த வழிபாட்டை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிற அதே முருகன் குறமகள் அளிக்கும் பலியையும் ஏற்றுக்கொள்கிறார். எப்படிப்பட்ட வழிபாடு?

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய துரவெள் அரிசி
சில்பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇச்,
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுத்தண் மாலை
துணையுற அறுத்துத் துரங்க நாற்றி
நளிமலைச் சிலம் பின் நன்னகர் வாழ்த்தி,
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி

இங்கு எங்கும் ஒரு முறை சிறந்தது மறுமுறை தாழ்ந்தது என நக்கீரர் கூறவில்லை. ஒன்று தமிழருடையது மற்றது அன்னியருடையது என அவர் சொல்லவில்லை. வேத வழிபாட்டிலும் ஊன் பலி உண்டு.வேத சமுதாயத்தில் ஆவேச வழிபாடுகள் – induced altered states of consciousness- உண்டு. வாக் சூக்தத்தில் தேவி ஆவேசிப்பதை கூறுகிறாள். ஆனால் வேதத்திலும் சரி சங்க இலக்கியத்திலும் சரி இவ்விரு முறைகளும் ஒன்று இழுக்காக ஒன்று மேலாக கருதப்படவில்லை. அவை இனரீதியாக அடையாளப் படுத்தப்படவும் இல்லை. இவை இரண்டுமே முருகனுக்கு விருப்பமானவைதாம். பின்னாட்களில் உயிர்பலி கொடுத்தலை பௌத்தமும் சமணமும் கீழாக கருதிய போது கண்ணப்பர் மூலம் வழிபாட்டு முறைகளல்ல சிரத்தையும் பக்தியுமே முக்கியம் என காட்டியது இந்து சமயம்.

இங்கு முக்கியமாக நக்கீரர் கூறுவதை கவனிக்க வேண்டும்:

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே.

விளக்கம் [கிவாஜ]: “தன்னை விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பியபடியே அடைந்து வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமாகும்.”

இதுவே பாரதிய ஞானத்தின் உச்சம். ஏறக்குறைய அனைத்து சமய சாத்திரங்களிலும் பிரஸ்தான த்ரயமோ பக்தி பனுவல்களோ பழந்தமிழ் இலக்கியமோ மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது இதுவே: ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’ என்பது வேதம். ‘அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
எவ்வயி னோயும் நீயே’ என்பது பரிபாடல்.

‘யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்ச்சிதுமிச்சதி/ தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்’ 7:21 ’எவர் எவர் என்னை எந்தெந்த மூர்த்தி வடிவத்தில் சிரத்தையுடன் வழிபட்டாலும் அவரவர் நிலைப்பாட்டை அவ்வடிவத்திலேயே உறுதிகொண்டதாக்குகிறேன்.’ என்பது பகவத் கீதை. ‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது அருணந்தி சிவாச்சாரியார் வாக்கு.

வேதம் கூறிய பெரும் சத்தியமான ஒருமையின் பன்மை பன்மையின் ஒருமை என்பதை சங்க இலக்கியங்களும் நம் அருளாளர்களும் சொல்லியிருக் கிறார்களே, ஒரு பேச்சுக்கு ஆரிய திராவிட இனவாத கோட்பாட்டை ஒத்துக் கொண்டால் அவர்கள் என்ன ஒப்பந்தம் வைத்து கொண்டிருப்பார் கள்? சுகி.சிவத்தின் பாணியில் சொன்னால் ‘மொழி உன்னுது தத்துவம் என்னுது எப்படி எப்படி மொழி உன்னுது தத்துவம் என்னுது’ என்று சொல்லியிருப்பார்களோ? இது எப்பேர்பட்ட அபத்தம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் வரும். வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் அரவணைத்து பன்மையையும் மாற்றத்தையும் அரவணைத்து செல்லும் தர்மம் நம் சனாதன தர்மம். முருகன் என்கிற சுப்ரமணியன் அதில் ஒரு பெரும் ஞான தரிசனம், பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பேருரு.

இன்னும் சொன்னால் முருகப் பெருமானுக்கு ஸ்கந்தன் என்று பெயர். கந்தன் என்கிற மிக மிக சகஜமான தமிழ் பெயரின் வேத வடிவம் ஸ்கந்தன். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன், அருமையான கட்டுரையான ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ என்பதில் கூறிய தரவுகள் சில இங்கு முக்கியமானவை: “சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்ப  இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த ‘கந்துடைப் பொதியில் ‘ குறிப்பிடப் பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.”

கந்து என்பதும் ’ஸ்கந்த’ ’ஸ்கம்ப’ என்கிற பிரபஞ்ச பெருந்தூண் வடிவில் நிற்கும் தெய்வத்துடன் தொடர்புடையது. ’கம்பு’ என்பதும் உறவுடைய சொல்லே. அதர்வ வேதத்தில் வரும் ஸ்கம்ப சூக்தம் ஸ்கம்பமாக வெளிப்படும் பிரம்மத்துக்கு வேத மந்திரங்கள் அனைத்துமே பாகங்கள் என கூறுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பின்னால் இதை அருணகிரிநாத சுவாமிகள் ‘வேத மந்த்ர சொரூபா நமோநம’ என்கிறார்.

ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார்.

இந்த பிளவுப்பார்வையை – நக்கீரர் சொல்லவில்லை. பரிபாடல் சொல்லவில்லை. கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்லவில்லை. அருணகிரிநாத சுவாமிகள் சொல்லவில்லை. அருட்பிரகாச வள்ளலார் சொல்லவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லவில்லை. இவர்களுக்கு இல்லாத ஆராய்ச்சி பார்வையும் அருட்பார்வையும் கால்டுவெல் சந்ததியாருக்கு ஏற்பட்டுவிடவும் இல்லை.

தன் வாழ்க்கைக்கு இந்து மத கோவில்களில் இந்து சமய கூட்டங்களில் ஆன்மிக பேச்சாளராக வாழ்ந்துவரும் ஒருவர், ஆன்மிக பெரியார்களின் அருட்பார்வையை ஆழமான ஆராய்ச்சிப் பார்வையையும் விடுத்து கால்டுவெல் பார்வையுடனும் சீமான் பார்வையுடனும் நம் தமிழ் கடவுளை அணுகுவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது அன்றி வேறென்ன?

வேதனை. வெட்கம்.

– அரவிந்தன் நீலகண்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe