
மதுரை: வௌவால்கள் மூலமாக கொரோனா பரவுவரதற்கான எந்த ஆராய்ச்சி தரவுகளும் இல்லை – NSS மாணவர்கள் மூலம் கல்லூரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்று காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வௌவால்கள் மூலமாக கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதால் மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 மரங்களில் தங்கி வசித்துவரும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பழம் தின்னும் வவ்வால்களால் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது;
வவ்வால்களால் கொரோனா தொற்று பரவும் என்று எந்த ஆராய்ச்சியும் உறுதி செய்யவில்லை, குறிப்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை வௌவால் ஆராய்ச்சி முழுமையாக செயல்படுத்தும் பல்கலைக்கழகமாக உள்ளது.
மேலும் தற்போது உள்ள வவ்வால்கள் வசித்து வருகின்ற மரங்கள் துணைவேந்தர் இல்லம் மற்றும் பேராசிரியர்கள் இல்லத்திற்கு அருகில்தான் உள்ளது. இந்த நிலையில் வவ்வாலினால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதியாக கூறிகொள்கிறோம்.
முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி, அடிக்கடி கைகளை கழுவுவது, முககவசம் அணிந்து தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து NSS மாணவர்கள் மூலம் பல்கலைக்கழகத்தை சார்ந்த கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் உள்பட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை