ஆரிய திராவிட இனக்கொள்கையின் முதுகெலும்பை முறிக்கிறது அறிவியல்! அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அறிவியல் நிரூபிக்கிறது!
1) ஆரிய திராவிட இனக்கொள்கை என்பது பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அழுகிய மூளையில் உதித்த பொய்.
2) தமிழ்நாட்டில் வாழ்ந்த கிறித்துவப் பாதிரியார் கால்டுவெல், கொல்கொத்தாவில் நீதிபதியாக இருந்த பிரிட்டிஷ் மொழியியலாளர் (Philologist) வில்லியம் ஜோன்ஸ், சமஸ்கிருதம் கற்ற ஜெர்மானிய மொழியியலாளர் மாக்ஸ் முல்லர் ஆகிய மூவரும் உருவாக்கிய, அறிவியலுக்கு எதிரான கோட்பாடே ஆரிய திராவிட இனக்கொள்கை.
3) ஆரியம் என்பது ஒரு மொழிக்குடும்பம் (language family). அது மரபினம் (ethnic race) ஆகாது. மொழிக் குடும்பத்தை மரபினமாகக் கருதும் பாரிய
தவறைச் செய்தவர்கள் இவர்கள். எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லாமல், சொல்லப்பட்ட இந்தப்பொய் பிரித்தாளும் சூழ்ச்சியை நோக்கமாகக் கொண்டது.
4) இப்போலிக் கொள்கையின் முதுகெலும்பை முறிக்கிறது அறிவியல்.
5) நேச்சர் (Nature) என்று ஒரு அறிவியல் பத்திரிகை உள்ளது. உலக அளவில் அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் நிகழும் ஆராய்ச்சிகள் மற்றும் கோட்பாடுகளை வெளியிடும் பத்திரிகை இது. 1869 முதல் வெளிவரும் இப்பத்திரிகை வாரப் பத்திரிக்கை ஆகும்.
6) இவ்வளவு புகழார்ந்த நேச்சர் பத்திரிகையில் 2011இல் டூமஸ் கீவிஸ்லிட் (Toomas Kivislid) என்னும் கேம்பிரிட்ஜ் பல்கலையின் மரபியல் அறிஞர் (Geneticist) தன் அணியினருடன் இணைந்து ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அக்கட்டுரை ஆரிய இனக்கொள்கையை வெட்டி வீழ்த்தி விடுகிறது.
7) முப்பது பல்வேறு இனக்குழுக்களை (ethnic groups) சேர்ந்த நபர்களின் ஆறு லட்சம் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன.
8) மேற்கூறிய ஆறு லட்சம் மாதிரிகளும் SNP samples ஆகும். (SNP = Single Nucleotide Polymorphism). (SNP உள்ளிட்ட அறிவியல் விஷயங்கள் குறித்து தனிக்கட்டுரை பின்னர் எழுதப்படும்).
9) SNP மாதிரிகளை ஆய்வு செய்த அறிஞர் டூமஸ் கீவிஸ்லிட் குழுவினர் பின்வரும் முடிவுக்கு வந்தனர். இந்தியர்களின் மூதாதையர்களின் மரபணுக்கள்
12500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்தன.
10) ஆரியப்படையெடுப்பு அல்லது ஆரியர் வருகை என்பது இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு, கிமு 1500இல் நிகழ்ந்தது என்றுதான் பிரிட்டிஷ்
காலனியாளர்கள் கூறுகிறார்கள்.
11) அது உண்மையென்றால், இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வெளியில் இருந்து ஜீன் வரத்து (Gene flow) நடந்திருக்க வேண்டும்.
அப்படி எந்த விதமான ஜீன் வரத்தும் நடைபெறவில்லை என்பதை ஆய்வு முடிகள் நிரூபித்துள்ளன.
12) இன்றிலிருந்து 12500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஜீன்கள்தாம் தற்போதும் உள்ளனவே தவிர, புதிய ஜீன் வரத்து எதுவும் இல்லை என்ற உண்மை
ஆரிய இனக்கொள்கையை வீழ்த்தி விடுகிறது.
13) மேலும் ஒட்டு மொத்த தெற்காசியர்களின் மூதாதையர்களின் ஜீன்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பிராந்திய ரீதியிலான எந்த விதமான ஜீன் வேறுபாடுகளும் இல்லை என்பதையும் ஆய்வு முடிவுகள் நிரூபித்தன.
14) இவை அனைத்தும் ஆரிய திராவிட இனக்கொள்கை என்னும் பொய்மைப் பாம்பின் உயிரைப் பிளந்து குடிக்கின்றன.
* நியூட்டன் அறிவியல் மன்றம்
- கட்டுரையாளர்: இளங்கோ பிச்சாண்டி Ilango Pichandy





