
இன்று பெரும்பாலான மனிதர்களும் பெரிதும் கவலைப்படுவது சர்க்கரை நோய் என்றாகிவிட்டது. பல்வேறு பெரிய உபாதைகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது சர்க்கரை நோய் என்பதால், அது குறித்து அதிகம் கவனமும் கவலையும் படுகிறார்கள் பலரும்!
அதென்ன சர்க்கரை நோய்?! சிலர் அதை நோய் என்று சொல்லக் கூடாது; சர்க்கரை அளவு குறைதல் என்கிறார்கள். நீரிழிவு நோய் என்று அதற்கு ஒரு பெயரை வைத்து, மனத்தளவில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.
நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் எனப்படுகிறது. எனினும், டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவுப் பழக்கத்தின் மூலம் எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
கண் பார்வை மங்குவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம்.
பலருக்கும் சோர்வு, அசதி, அடிக்கடி தூக்கம் வருவது போலிருத்தல் ஆகியவை இதன் அறிகுறியாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள்… எனவே, சர்க்கரை நோய் இருப்பது போல உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் அளவு : சர்க்கரை நோய்க்கான பரிசோதனை முதல் முறையாக செய்கையில், வெறும் வயிற்றில் நமது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு சராசரியாக 80 முதல் 100 மி.கி./டெ.லி. வரை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு சக்கரை நோய் இல்லை என்று அறிந்துகொள்ளலாம்.
வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவு 101 முதல் 125 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த அளவு என்பது சக்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி.
சர்க்கரை அளவு 125 மி.கி./டெ.லி க்கு மேல் இருந்தால் நமது உடலில் சர்க்கரை நோய் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க சர்க்கரை அளவு 111 முதல் 140 மி.கி./டெ.லி வரை இருந்தால் உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதுவே சர்க்கரை அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த அளவு என்பது சர்க்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி.
சர்க்கரை அளவு 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நாம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.