January 23, 2025, 5:44 AM
23.8 C
Chennai

மறைந்து போகும் முறங்கள்!

அரிசியில் கல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அரிசியை பாத்திரத்தில் போட்டி அதில் நீர் விட்டுக் களைந்து மேலே வரும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அடியில் தங்கும் அரிசியையும் சிறுசிறு கற்களையும் பிரித்தெடுத்து…. அப்பப்பா.. சின்ன வயதினிலே இப்படியெல்லாம் என்னவொரு சுவாரஸ்யங்கள்!
இன்று அப்படியெல்லாம் நேரம் போக்குவதில்லை! அதுபோல்தான் முறமும்!

ஞாயிற்றுக் கிழமை – வேலைப்பளு அதிகம் இல்லாத இன்று காலை சமையலறையை சுத்தப் படுத்தி வந்தேன். அபோது ஒரு பையில் அவல் மொத்தமாக இருந்ததைக் கண்டேன். பையனின் காலை உணவுக்கு அம்மா ஆசையோடு கொடுத்து விட்டது. வெகுநாட்களாக கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டேன்! எடுத்துப் பார்த்தால்… தூசு, துகள்கள், மாவு… இத்யாதிகள்!

இதனைச் சரி செய்ய முறத்தை எடுத்து, அந்த அவலைப் போட்டு புடைத்து, மாவு, தூசுகளை நீக்கி எடுத்து வைத்தேன்!

அப்போது இந்த முறத்தைப் பற்றிய சிந்தனை வெகுவாக எழுந்தது. இன்றைய பாக்கெட் உணவுப் பொருள்கள், உடனடி பொருள்கள் ஷாப்பிங் மால்கள், கூட்டுறவு அங்காடிகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்போது, முறமாவது.. ஒண்ணாவது..? அடுத்த தலைமுறை இதனைப் பார்க்கவும் வாய்ப்பு உண்டோ இல்லையோ தெரியாது..!
இதனை மனதில் கொண்டு, இந்த விஷயத்தை இணையத்தில் ஏற்றி வைக்கிறேன். தேடலின்போது எவரேனும் சிலருக்கு பின்னாளில் உதவக்கூடும்!

தகுந்த படமும் கிடைத்தது. இந்தப் படத்தை அழகாக வரைந்திருப்பவர், உஷா சாந்தாராம். கர்நாடக மாநிலம், பெங்களூரூச் சேர்ந்த நுண்கலை ஓவியர்! அவருக்கு நன்றி!

ALSO READ:  பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

இந்தக் கட்டுரை, டாக்டர் ஷியாம் சுந்தர்கோஷ் என்பவர் ஹிந்தியில் எழுதிய கட்டுரை. முன்னர் மஞ்சரி இதழாசிரியராக அடியேன் இருந்தபோது, அனுபவித்துப் படித்து, மொழிபெயர்க்கச் சொல்லி வாங்கி வெளியிட்ட கட்டுரை!

——————————————————
நமது கிராமத்து முறங்கள் எங்கே ?

தூற்ற, தூசு தட்ட, புடைக்கப் பயன்படுவது முறம். இவ்வளவு நாள் வரை நமது பெண்மணிகளின் தளராத பணி களால் சுத்தமாக்கப்பட்ட தானியங்கள் கொண்டு சமைக்கப்பட்ட நல்ல உணவைப் பெற்று வந்தோம்.

இவைகளைப் புடைக்கும்போது உண்டாகும் ஒலி, எவ்வளவு மதுரமானது. இப்படிப்பட்ட முறங்கள் இப்போது காணக்கிடைக்குமா? முறங்களில் திறமையுடன் எல்லா வேலைகளையும் செய்து வந்த மாதரசிகள் உள்ளனரா? வியக்கிறார் டாக்டர் கோஷ்.
நேற்று நான் மிகவும் குறுகலான வீதியில் சென்று கொண்டிருந்தேன். ஒரு வீட்டிலிருந்து ஒருவித ஒலி வந்தது. நின்றேன். சற்று சிந்தித்தேன். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஒலி.

ஆம், நினைவுக்கு வந்துவிட்டது. முறத்தால் புடைத்தல், தானியத்தை  கோதுமையோ, அரிசியோ, தாத்தி எடுக்கும்போது முறத்திலிருந்து உண்டாகும் ஒலி.

எனது சிறு வயதில் எனது தாயாரும், அக்காவும், பாட்டியும் முறத்தால் தானியங்களைச் சுத்தம் செய்வார்கள். புடைத்து அதிலிருந்து ஒருவித ஒலி உண்டாகும். அதே ஒலிதான் இது.

நான் சிறுவனாக இருந்தபோது காலை உணவிற்கு கஞ்சி சத்துமாவு, அவல் போன்றவை அதிகமாக உபயோகப்பட்டு வந்தன. இவைகளுக்கு முறம் கட்டாயம் தேவை?

ALSO READ:  பொங்கலுக்காக... கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்!

அப்போதெல்லாம் முறம் புடைக்கவும், தாத்தவும் அனுபவம் உள்ள பெண்கள் செய்து வந்தனர். எல்லாப் பெண்களுக்கும் தெரிந்திருந்தாலும் இதில் சிலர்தான் நிபுணர்களாக விளங்கினர். இதில் அவர்களின் திறமைதான் என்ன?

இரண்டு கைகளின் உள்ளங்கைகளும் முறத்தைத் தாங்கியிருக்கும். முறத்தின் பின்னால் நான்கு விரல்களும் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இது தபேலாவின் ஒலியை நினைவுபடுத்தும். தபேலா வாசிக்கும்போது மணிக்கட்டும் விரல்களும் தங்கள் திறனைக் காட்டும். ஆனால் முறத்தின் அடிப்பகுதியில் விரல்கள்தான் நடனமாடும்.

நான் எனது சிறுவயதில் முறத்தின் நாதத்தையும், விரல்களின் நடனத்தையும் பார்த்திருக்கிறேன். உள்ளங் கைகளையும் கட்டை விரலும் முறத்தைத் தாங்கியிருக்கும். மற்ற நான்கு விரல்களும் முறத்தின் அடிப்பகுதியில் இருக்கும். அவை நல்ல சப்தத்தை எழுப்பும். நடமாடும். இது எவ்வளவு மதுரமாக இருக்கும்!? அதை நான் கவனமாகப் பார்த்து ரசிப்பேன்.

இப்போது அப்படிப்பட்ட உயர்ந்த முறங்களும் கிடையாது. முற விற்பனையும் கிடையாது. முறங்களை முடைபவர்கள் பெண்கள்தான். இப்போது உள்ளவர்களுக்கு முன்போல தரமான உறுதியான முறங்கள் பின்னத் தெரியாது. அவை அழகாகவும் உறுதியாகவும் இருப்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.

இப்போது தகரத்தால் செய்யப்பட்ட முறங்களும் வந்துவிட்டன. ஆனால் இந்தத் தகரத்தால் செய்த முறங்களில் அழகு இருக்காது. சங்கீதத்தின் ஒலியும் இருக்காது. தகரத்தால் செய்த முறங்களைக் காட்டிலும் மூங்கிலால் செய்த முறங்கள்தான் உயர்ந்தவை.

ALSO READ:  மகாகவி பாரதியார் தீபாவளி பற்றி எழுதிய கட்டுரை

முறம் விற்பவன் வந்தாலும் வீட்டில் உள்ள வயதான பெண்கள்தான் அவைகளைச் சோதித்து வாங்குவார்கள். தட்டிப்பார்ப்பார்கள். நீண்ட நேர சோதனைக்குப் பின்னரே முறம் தேர்ந்தெடுக்கப்படும். முறங்கள் வாங்குவதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை. அவைகளை மெழுகுவார்கள். காகிதக்கூழ் மெழுகப் பயன்படுவதுண்டு. அவைகளின் பின்புறம் பலநிறங்களால் அழகுபடுத்துவர். படங்கள் வரைவார்கள். அவைகளுக்குச் சிலர் வழவழப்பான துணிகளால் உறையும் தயார் செய்வார்கள். முறங்களில் விசேஷ நாட்களில் இனிப்புகள் பலகாரங்கள் வைத்து உறவினர்களுக்கு அன்பளிப்பாகவும் சீர் வரிசையாகவும் அனுப்புவார்கள்.

முறத்தின் வேலை முடிந்தாலும் அதை மெழுகி நிழலில் உலர்ந்ததும் நன்றாகத் துடைத்து சுவரில் மர ஆணி அடித்து அதில் மாட்டிவிடுவார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது பாலிதீன், எவர்சில்வர், அலுமினியம் முதலியவைகளாலான பாத்திரங்கள்  முறங்கள்  வந்ததில்லை.

கிராமங்களின் எல்லைகளில் மூங்கில் புதர்கள் காணப்படும். இவைகளைக் கடந்துதான் போகவேண்டும். அதன் நிழலில் தங்கவும், ஓய்வு பெறவும் செய்யலாம். இதனால் மனதிற்குக் குளுமை… இதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

அந்த நாளில் மூங்கில்களும் வாரைகளும் சமூக வாழ்வுக்கு இன்றியமையாதவை. வீடு கட்டவும், குடிசைகள் அடைக்கவும் இவை தேவைப்படுகின்றன. மூங்கிலை லேசாகச் சீவி விசிறிகள் செய்வது, கட்டுமான வேலைகள்  எல்லாவற்றிற்கும் மூங்கில்களும் வாரைகளும் தேவை.

ஹிந்தியில்: டாக்டர் சியாம் சுந்தர் கோஷ் / தமிழில்: டி.எஸ்.ஆர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. ஸ்ரீராம் சார்! முறத்தால் புடைக்கும் போது சிதறும் தானியங்களைத் தின்ன வரும் கோழி, குருவி போன்றவைகளுக்கும் உணவு இல்லாமல் செய்து விட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.