ராகுல் நாடு திரும்பியதற்கான எழுச்சிப் பேரணி; காங்கிரஸ் ‘மெகா’ ஏற்பாடு

rahul-gandhi புது தில்லி: இதோ வருகிறார், இப்போது வருகிறார், இதோ வந்துவிட்டார் என்றெல்லாம் போக்குக் காட்டி, ஒருவழியாக வந்தே விட்டார் ராகுல் காந்தி. எங்கே? தில்லிக்குத்தான்! அவரை வரவேற்க காங்கிரஸின் சார்பில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எல்லோரும் காத்திருக்க, வருவது தெரியாமல் அமைதியாக தன் வீட்டுக்குள் நுழைந்த ராகுலை அவரது தாயார் சோனியாவும், சகோதரி பிரியங்கா காந்தியும்தான் வரவேற்றனர். அவர்கள் இருவரைத் தவிர அவர் வேறு யாரையும் சந்திக்கவுமில்லை. ராகுல் வருவதற்கு சில மணித்துளிகள் முன்னர் ராகுல் வீட்டுக்கு வந்த சோனியாவும், பிரியங்காவும், வெகுநேரம் தனியறையில் ரகசியமாகப் பல விஷயங்களைப் பேசிக் கொண்டனர். இந்நிலையில், சனிக்கிழமை இன்று அவர் விவசாயிகளைச் சந்திப்பதற்கும், நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஞாயிறு நாளை நடைபெற இருக்கும் பேரணியில் கலந்து கொண்டு பேசவும் ஏற்பாடுகளை காங்கிரஸார் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையேசெய்து வந்தனர். அவர்களுக்கு நாளை இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டமானது, நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிரானதாக இருப்பதைவிட, ராகுல் காந்தி நீண்ட இடைவெளியில் மீண்டும் அரசியலுக்குள் திரும்பி வந்து கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டமாகவும், அதைப்பறைசாற்றும் பேரணியாகவும் காட்டிக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இதர்காகவே லட்சக்கணக்கில் விவசாயிகளைத் திரட்டி, ராம் லீலா மைதானத்தை ஆட்டம்காணச் செய்ய வேண்டும் என்று பல்வேறு ஏற்பாடுகளை காங்கிரஸார் செய்துவருகின்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், இதற்காக, கிஸான் எக்ஸ்பிரஸ் என 17 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலையே புக் செய்துள்ளார். அது ஜெய்ப்பூரில் இருந்து தில்லி வரும் விவசாயிகள் எக்ஸ்பிரஸாக இருக்குமாம். ஹரியானாவில் இரு வேறு போட்டிப் பிரிவுகளாகப் பிரிந்து போயுள்ள காங்கிரஸார், தங்கள் தங்கள் கோஷ்டிகளின் வலிமையைக்காட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா ஒரு புறம், தனது ஆதரவாளர்களை பிங்க் வண்ணத்தில் டர்பன் கட்டிக் கொண்டு வர ஆணையிட்டிருக்கிறார் என்றால், மாநில கட்சித் தலைவர் அசோக் தன்வார் தனது ஆதரவாளர்களை காந்தி குல்லாய் அணிந்து வருமாறு கட்டளையிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வரும் ஆதர்வாளர்கள் தங்கள் அடையாளத்தைக் காட்ட ஒரு வண்ணத்தைக் கையாண்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் காவி வண்ண தலைப்பாகை அணிந்து வரவுள்ளனர். அவருடைய எதிர் கோஷ்டியான மாநில காங்கிரஸ் தலைவர் ப்ரதாப் சிங் பாஜ்வா, அதைத் தவிர மற்ற வண்ணங்களை பயன்படுத்தி வருபவர்கள் எல்லாம் என் ஆதரவாளர்கள் என்று கூறியிருக்கிறார். இந்தப் பேரணிக்காக சுமார் 500 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தில்லியில் இருந்து சுமார் 25 ஆயிரம் விவசாயிகளும் ஆதரவாளர்களும் திரண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், எல்லோருமே போன வருடம் நிகழ்ந்த தவறை மீண்டும் செய்துவிடாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றனர். ராகுல் காந்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த வேளையில், பாதியிலேயே பெரும்பாலானவர்கள் எழுந்து சென்று, ராகுல் பேச்சைப் புறக்கணித்த அதே செயல் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்று உன்னிப்பாக உள்ளனர். அதற்காகவே காங்கிரஸில் கில்லாடியான பிரம்ம யாதவ், இந்த முறை 14 எல்.ஈ.டி. திரைகள் கொண்ட பிரம்மாண்ட ஒளிபரப்பு ஏற்பாடும், கலாசார நிகழ்ச்சிகள் நடத்த மேடைகளும் அமைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால், நேற்று இந்த ஏற்பாடுகள் குறித்து கட்சித் தலைவர்கள் எல்லாரும் கூடி விவாதித்த போது, அந்த விவாதக் கூட்டத்தை புறக்கணித்து ராகுல் காந்தி அங்கே வரவேயில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாகத் தான் இருந்தது. இருப்பினும் வழக்கம்போல் சப்பை கட்டு கட்டும் திக்விஜய் சிங், நாங்கள் அனைவரும் காலாட்படை வீரர்களைப் போன்றவர்கள். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தலைமைக்கு கட்டுப்பட்டு, அவர்கள் இடும் கட்டளைப்படி பணியாற்றுவோம் என்று கூறினார். அவரிடம் செய்தியாளர்கள் சிலர், மிகவும் முக்கியமான ஒரு பேரணி குறித்த திட்டமிடல் கூட்டத்துக்கு ராகுல் காந்தி வராமல் புறக்கணித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள், அவர் உண்மையிலேயே இந்த மிகப் பெரும் அரசியல் பிரபலத் தன்மையை தொலைத்து விட்டார் என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது இவ்வாறு பதிலளித்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தி தில்லியில் சனிக்கிழமை இன்று 4 மாநில விவசாயிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். மேலும் நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிராக தில்லியில் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் பேரணி குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை அவர் கேட்டறிந்தார். தில்லி பேரணியில் நாளை பங்கேற்ற பின்னர் அடுத்த சில நாட்களுக்குள் தனது தொகுதியான அமேதிக்குச் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறியவும் ராகுல் திட்டமிட்டுள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் நாடு திரும்பியதற்கான எழுச்சிப் பேரணியாக நாளைய பேரணியை காங்கிரஸ் கையில் எடுக்கும் பட்சத்தில், கிர்க்கெட்டில் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டு, ஆல் அவுட் ஆகும் போக்கையே காங்கிரஸ் வெளிப்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.