இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான பணியிடங்கள் அதிகப் படுத்தப் பட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளில் பெண் அதிகாரிகள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ராணுவ காவல் படையிலும் சிப்பாய்கள் அந்தஸ்தில் பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர். 2019-20 முதல் ஆண்டுக்கு 100 பெண்கள் வீதம் இந்தப் பணிகளில் நியமிக்கப்படுவார்கள். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்திய ராணுவத்தில் கல்வித்தகுதி, அனுபவம், சிறப்பு இயல்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் தேவைக்கு ஏற்பவும் பெண்களை பணியமர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்திய கடற்படையில், பாலின சமன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவம், பல் மருத்துவம், ராணுவ செவிலியர் சேவை பிரிவிலும் பெண்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கடலுக்கு செல்லாத பிரிவுகளில் பெண்கள் சேர்க்கப் படுகின்றனர். இருப்பினும் கடற்படையின் விமானப் பிரிவில் பைலட் அந்தஸ்தில் பெண் அதிகாரிகள் நியமிக்கப் படுகின்றனர்.
இந்திய விமானப் படையின் அனைத்து காலிப் பணியிடங்களுக்கு விருப்பம், தகுதி, உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆண், பெண் வேறுபாடின்றி அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். நிர்வாக பதவிகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவத்தில் இதுவரை ஆயுதப்படை, காலாட்படை, எந்திரவியல் படை, பீரங்கிப் படை ஆகியவற்றில் பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை.