கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில், புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 1,82,611 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸுக்கு 7,171 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தியாவிலும், கொரோனா பாதிப்பு 150 க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது என்றும், கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருப்பதாகவும் செய்தி வெளியானது.
மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 64 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழப்பு 3 ஆக அதிகரித்துள்ளது.
ஃபிரான்ஸில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஃபிரான்சில் 6 ஆயிரத்து 633 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
உணவு, மருந்துகள் வாங்கச் செல்வது, பணிக்கு செல்வது, நடைப் பயிற்சி செல்வது தவிர்த்த வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். குறைந்தது அடுத்த 15 நாட்களுக்கு பயணங்கள், வெளியே செல்வது பெருமளவு குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அவசியத் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத சூழலில் மட்டும் அலுவலகம் செல்லுமாறும் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீடுகளில் விசேஷங்களுக்காக கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும்,. நாம் போர்க் களத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும் ஒரு லட்சம் போலீசார் களமிறக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து ஃபிரான்சும் போக்குவரத்து, மக்கள் நடமாட்டத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி வருகின்றன. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 65 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு, கர்நாடகாவில் நிகழ்ந்தது. இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கல்புர்கி (குல்பர்கா) மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹுசைன் சித்திக் (76) என்ற முதியவர் சவுதி அரேபியாவுக்கு சென்று வந்தார். அவருக்கு காய்ச்சல், இருமல், சளி இருந்தது. இதை அடுத்து அவர் ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிய வரும் முன்னதாக, கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் உயிரிழப்பாக அவரது மரணம் பதிவானது.
இந்நிலையில் சித்திக்கை பரிசோதனை செய்த 63 வயதான டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவர், தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், சித்திக்கிற்கு சிகிச்சை அளித்த 63 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கேரளத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவர் வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.