
புது தில்லி: சாலைவழி போக்குவரத்து மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவன சேவை இவற்றால் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள ரயில்வேத் துறை, தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜாஸ் மற்றும் கடிமன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் 25 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்க உள்ளது.
குளிர்சாதன இருக்கை வசதி, எக்ஸிக்யூடிவ் சேர் கார் இருக்கைகளுக்கான அடிப்படைக் கட்டணம், ஜிஎஸ்டி, முன்பதிவுக் கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களில் தள்ளுபடி வழங்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேற்று தெரிவித்துள்ளனர்.
“முந்தைய ஆண்டின் மாதாந்திர நிரப்பல் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் ரயில்களில் இந்த தள்ளுபடி சலுகை இருக்கும்” என்று அந்த அதிகாரி கூறினார்.
அடையாளம் காணப்பட்ட ரயில்களில் தள்ளுபடி கட்டண சலுகை திட்டம் அறிமுகப்படுத்தப் படும். இதற்கு, மண்டல முதன்மை வணிக மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப் படும் என்று ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும் இதில் சில வழிகாட்டுதல்கள் வகுக்கப் பட்டுள்ளது.

தள்ளுபடி விலையை நிர்ணயிக்கும் போது போட்டி கட்டணம் ஒரு அளவுகோலாக இருக்க வேண்டும், பயணத்தின் அனைத்து பகுதிகளிலும் தள்ளுபடி கட்டணங்களை வழங்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதுடன், அனுமதியும் வழங்கியுள்ளது,
தள்ளுபடி, ஆண்டு, அரை ஆண்டு, பருவகால அல்லது வார இறுதி நாட்களில் வழங்க முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தரப்படுத்தப்பட்ட தள்ளுபடி அல்லது வசதிக்கேற்ப மாறுதலுக்கு உட்படும் கட்டணம் போன்ற வேறு எந்த தள்ளுபடியும் பொருந்தாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இதுபோன்ற ரயில்களை அடையாளம் காணுமாறு ரயில்வே மண்டலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன!



