
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரியானாவில் நடந்தது.
புதிய மோட்டார் வாகன சட்டம் செப்.,1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குடிபோதையில் ‘பைக்’ உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; சிறுவர்கள் கார் ஓட்டினால் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை என்பன போன்றவை புதிய சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியானா மாநிலம் குர்கானில், வாகன சோதனையில் சிக்கிய தினேஷ் மதன் என்பவருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, போக்குவரத்து காவலர் அபராதம் விதித்தனர்.
ஓட்டு உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம், வாகனப்பதிவு சான்றிதழ் இல்லாததற்காக ரூ.5 ஆயிரம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாததற்காக ரூ.2 ஆயிரம், காற்று மாசுபாடு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.1,000 என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ‘சலான்’ வழங்கப்பட்டது.
அவரது ஸ்கூட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது ஸ்கூட்டியின் மதிப்பே ரூ.15 ஆயிரம் தான். ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி எனக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். இனி பயணத்தின் போது, எப்போதும் ஆவணங்களை உடன் கொண்டு செல்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.