பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வல்லமை நம் ராணுவத்துக்கு உண்டு என்று பிரதமர் மோடி பேசினார்.
அகில இந்திய வானொலியில் அவர் ஆற்றும் மன்கி பாத் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
செப்.25ம் தேதி, அகில இந்திய வானொலியில் மன் கீ பாத், மனதின் குரல் – நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம் :
எனதருமை நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். கடந்த நாட்களில் ஜம்மு-கஷ்மீரத்தின் உரீ பகுதியில் ஒரு தீவிரவாதத் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, நமது நாட்டின் 18 இராணுவ வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். நான் உயிர் துறந்த, துணிவுமிக்க இராணுவ வீரர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன். இந்த கோழைத்தனமான நிகழ்வு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கிறது. நாட்டு மக்களின் நாடிநரம்புகளில் சோகம் பெருக்கெடுக்கிறது, கோபம் கொப்பளிக்கிறது; இந்த இழப்பு தங்கள் பிள்ளைகளை இழந்த, சகோதரர்களை இழந்த, கணவனை இழந்த அந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல. இந்த இழப்பை நாடு முழுமையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாட்டு மக்களே, அன்று உங்கள் முன்பாக நான் கூறியதையே இன்றும் கூறுகிறேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
எனது பிரியமான நாட்டுமக்களே, நமது இராணுவம் மீது நமக்கு அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் தங்கள் பராக்கிரமத்தால் ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிப்பார்கள், நாட்டின் 125 கோடி மக்களும் நிம்மதியாக, அமைதியாக வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும் முறையில் தங்கள் உச்சகட்ட வீரத்தை வெளிப்படுத்துவார்கள். நமது இராணுவம் குறித்து நாம் அதிக பெருமிதம் கொள்கிறோம். குடிமக்களாகிய நமக்கு, அரசியல் தலைவர்களுக்கு என நமது கருத்துக்களை வெளிப்படுத்த பல வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, நாம் உரைக்கவும் செய்கிறோம். ஆனால் இராணுவம் சொற்களால் உரைப்பது இல்லை; இராணுவம் தனது வீரத்தை வெளிப்படுத்துகிறது.
இன்று சிறப்பாக, கஷ்மீரத்தின் குடிமக்களுடன் நான் பேச விரும்புகிறேன். கஷ்மீரத்தின் குடிமக்கள் நாட்டின் எதிரி சக்திகளை நன்கு புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், அப்படிப்பட்ட நாசகார சக்திகளை தங்களிடமிருந்து விலக்கி, அமைதிப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பள்ளிகளும் கல்லூரிகளும் விரைவாக முழுமையான வகையில் செயல்படத் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு தாய் தந்தையரின் விருப்பமாக இருக்கிறது. விவசாயிகளும் தங்களின் விளைபொருட்களான பழங்கள் போன்றவை விரைவாக பாரதத்தின் சந்தைகளுக்குச் செல்ல வேண்டும் என்று விழைகிறார்கள், வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த சில நாட்களாக வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற ஆரம்பித்திருக்கிறது. அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவையே நமது பிரச்சனைகளின் தீர்வாக இருக்க முடியும், நமது முன்னேற்றப் பாதையாக இருக்க முடியும், நமது வளர்ச்சியின் பாதையாக இருக்க முடியும் என்பதை நாம் நன்கறிவோம். நமது வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாம் வளர்ச்சியின் புதிய சிகரங்களை எட்டிப் பிடித்தாக வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கான தீர்வையும் நாம் அமைதியான முறையில் கலந்தாலோசித்து ஏற்படுத்திப் பாதை வகுத்தோம் என்றால், காஷ்மீரத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு உன்னதமான வழியை நம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. காஷ்மீரக் குடிமக்களின் பாதுகாப்பு நிர்வாகத்தின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கைக் கட்டிக்காக்க நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மிடம் இருக்கும் திறன், சக்தி, சட்டம், விதிகள் அவற்றின் பயன்பாடு எல்லாம் சட்டத்துக்காகவும் ஒழுங்குக்காகவும் தான் இருக்கின்றன, அவை காஷ்மீரத்தின் சாமான்ய மக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவே இருக்கின்றன, அவற்றை நாம் நல்ல முறையில் பின்பற்ற வேண்டும் என்று நாட்டின் பாதுகாப்புப் படையினரிடமும் கேட்டுக் கொள்கிறேன். சில வேளைகளில் நம் கருத்துக்களிலிருந்து வேறுபட்டு சிந்திப்பவர்கள் புதிய கருத்துக்களை முன்வைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இப்போதெல்லாம் நான் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் கிடைக்கின்றன. இது மக்களாட்சி முறையின் சக்திக்கு வலு கூட்டுகிறது. கடந்த நாட்களில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஹ்ர்ஷ்வர்த்தன் என்ற இளைஞர் என் கவனத்துக்கு வித்தியாசமான கருத்தை முன்வைத்திருக்கிறார். ”உரீ தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு என் மனதில் கவலை அதிகம் சூழ்ந்தது, ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் பேரவா எழுந்தது, ஆனால் செய்வதற்கான வழியேதும் எனக்குப் புலப்படவில்லை. இருந்தாலும், என்னைப் போன்ற ஒரு எளிமையான மாணவனால் என்ன பெரியதாக செய்து விட முடியும். அப்போது தான் நாட்டு நலனுக்காக என் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. தினமும் நான் 3 மணி நேரம் கூடுதலாகப் படிப்பேன், நாட்டுக்காக உருப்படியாக ஏதாவது செய்யக் கூடிய ஒரு குடிமகனாக ஆகும் உறுதி பூண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சகோதரா ஹர்ஷ்வர்த்தன், ஆவேசம் நிறைந்த இந்தச் சூழலில், இத்தனை சிறிய வயதில், நீங்கள் ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்திருக்கிறீர்கள், இதுவே என் மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. ஆனால் ஹர்ஷ்வர்த்தன், நாட்டு மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் கோபத்துக்கு மிகப் பெரிய மதிப்பு ஒன்று இருக்கிறது. இது நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடு. இந்த தார்மீகமான கோபம் கூட ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதிப்பாடு நிரம்பியது. ஆம், நீங்கள் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை முன்வைத்தீர்கள். ஆனால் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது லால் பஹாதுர் சாஸ்த்ரி அவர்கள் நாட்டுக்குத் தலைமையேற்றிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும், நாடு முழுவதிலும் இப்படிப்பட்ட உணர்வு தான் மேலோங்கிக் காணப்பட்டது. ஆவேசம் இருந்தது, தேசபக்திக் கனல் இருந்தது, ஒவ்வொரு குடிமகன் மனதிலும் ஏதாவது ஒன்றை செய்தேயாக வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தது. அப்போது லால் பஹாதுர் சாஸ்த்ரி அவர்கள் நாட்டின் இந்த உணர்வுகளை மிக உன்னதமான முறையில் வருடிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் ஜெய் ஜவான் ஜெய் கிஸான் என்ற மந்திரச் சொற்களை அளித்து, நாட்டின் சாமான்ய மக்கள் நாட்டுப்பணியின் பொருட்டு எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஊக்கத்தை அளித்தார்.
குண்டு வெடிப்புக்களின் ஓசைக்கிடையே தேசபக்தியை வெளிப்படுத்தும் மேலும் ஒரு முயற்சியை, ஒவ்வொரு குடிமகனும் புரிய வேண்டும்; இதைத் தான் லால்பஹாதுர் சாஸ்த்ரி அவர்கள் முன்வைத்தார். காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்த வேளையில், சுதந்திரப் பேரியக்கம் தீவிரமாக கனன்று கொண்டிருந்த காலத்தில், அந்த இயக்கத்துக்கு வேறு ஒரு தளம் தேவைப்பட்ட போது, அவர் போராட்டத்தின் தீவிரத்தை சமூகத்தில் ஆக்கபூர்வமான பணிகளை நோக்கிய ஊக்கத்தை அளிக்கும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தினார். நாமும் நமது இராணுவமும் நமது கடமைகளை ஆற்றுவோம், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது கடமைகளை ஆற்றட்டும், நமது நாட்டு மக்களும், ஒவ்வொரு குடிமகனும் இந்த தேசபக்தி உணர்வோடு நம்மாலான ஏதோ ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்போம், அப்போது நாடு புதிய சிகரங்களைக் கண்டிப்பாக எட்டிப் பிடிக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, para olympic விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கச் சென்ற நமது விளையாட்டு வீரர்கள் வரலாறு படைத்திருப்பது மனித ஊக்கத்தின் வெற்றி என்று கார்த்திக் அவர்கள் narendramodiappஇல் தெரிவித்திருக்கிறார். நமது விளையாட்டு வீரர்கள் அருமையாக செயல் புரிந்திருப்பதாக வருண் விஸ்வநாதன் அவர்கள் narendramodiappஇல் பதிவு செய்திருக்கிறார். மேலும் இதை நீங்கள் உங்கள் மனதின் குரலில் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் இருவர் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் para olympicஇல் பங்கெடுத்த விளையாட்டு வீரர்களிடம் ஒருவிதமான உணர்வு பூர்வமான இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. விளையாட்டுக்களைத் தாண்டி, இந்த para olympic போட்டிகளும் நமது விளையாட்டு வீரர்களின் சாதனைகளும், மனிதத்துவக் கண்ணோட்டத்தை, மாற்றுத் திறனாளிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை முழுமையாக மாற்றி அமைத்திருக்கிறது. வெற்றி பெற்ற நமது சகோதரி தீபா மலிக் அவர்கள் பதக்கம் வென்ற பிறகு கூறிய சொற்களை நான் என் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன். ”இந்தப் பதக்கத்தை வென்றதன் மூலம் நான் என் உடல் குறைபாட்டை வெற்றி கொண்டேன்” என்று அவர் கூறினார். இந்த வரியில் பெரும் சக்தி பொதிந்திருக்கிறது. இந்த முறை para olympicஇல் நமது நாட்டின் 3 பெண்கள் உட்பட, 19 விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். மற்ற விளையாட்டுக்களோடு ஒப்பிடும் போது, மாற்றுத் திறனாளிகள் விளையாடும் போது, உடல்திறன், விளையாட்டில் அவர்களின் திறன் ஆகியவற்றை விடப் பெரிய விஷயம் – மனவுறுதியும், தீர்மானமும்.
நமது விளையாட்டு வீரர்கள் இது வரை சாதித்திராத அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு 4 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் இவற்றில் அடங்கும். தங்கம் வென்ற சகோதரர் தேவேந்த்ர ஜாஜரியா ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாகப் பெற்றிருக்கிறார். 12 ஆண்டுகளில் வயது அதிகரிக்கிறது. ஒரு முறை தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஊக்கம் குறைந்து விடும், ஆனால் தேவேந்த்ர அவர்கள், உடலின் நிலை, வயது அதிகரிப்பு ஆகியன அவரது மனவுறுதிப்பாட்டை எந்த வகையிலும் குலைத்து விடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்திருக்கிறார். அவர் பிறவியிலேயே மாற்றுத் திறனாளி அல்ல. மின்சாரம் பாய்ந்ததால் அவர் ஒரு கையை இழக்க நேர்ந்தது. சிந்தித்துப் பாருங்கள், 23 வயதில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மனிதர், மீண்டும் தனது 35ஆவது வயதில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெல்வது என்றால், அவர் எந்த அளவுக்கு பயிற்சி மேற்கொண்டிருக்க வேண்டும்!! மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். மாரியப்பன் அவர்கள் வெறும் ஐந்தே வயதில் தனது வலது காலை இழந்திருக்கிறார். ஏழ்மை கூட அவரது மனவுறுதிக்கு தடை ஏற்படுத்த முடியவில்லை. அவர் ஒன்றும் பெரிய நகரத்தில் வசிப்பவரும் அல்ல, மத்தியத்தட்டுக் குடும்பத்தையோ, செல்வந்தர்கள் குடும்பத்தையோ சேர்ந்தவர் அல்ல. 21 வயதில் கஷ்டங்கள் நிறைந்த வாழ்கையைத் தாண்டி, உடல் இடர்பாடுகளைப் பொருட்படுத்தாது, மனவுறுதியை மட்டுமே துணை கொண்டு பதக்கத்தை ஈட்டித் தந்திருக்கிறார். விளையாட்டு வீரரான தீபா மலிக் அவர்களின் பெயரோடு பல வெற்றிப் பதாகைகள் ஏற்கெனவே இணைந்திருக்கின்றன.
வருண் சீ. பாட்டி (भाटी) அவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். Para olympic பதக்கத்துக்கு என ஒரு மகத்துவம் நமது நாட்டில், நமது சமுதாயத்தில், நமது அண்டைப்புறத்தில் இருக்கிறது. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் நமது கவனத்தை அவர்களின் பக்கம் ஈர்க்க மிகப் பெரிய பணியாற்றி இருக்கிறார்கள். நமது உணர்வுகளை அவர்கள் தட்டி எழுப்பி இருக்கும் அதே வேளையில், மாற்றுத் திறனாளிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தையும் மாற்றியிருக்கிறார்கள். இந்த முறை para olympic போட்டிகளில் நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரியர் ஆற்றியிருக்கும் அருமையான செயல்பாடு பற்றி குறைவானவர்களுக்கே தெரிந்திருக்கும். சில நாட்கள் முன்பாக, இதே இடத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. வாடிக்கையான ஒலிம்பிக் போட்டிகளின் பதிவை மாற்றுத் திறனாளிகள் தகர்க்க முடியும் என்று யாரேனும் கற்பனை செய்திருக்க முடியுமா? இந்த முறை அது நடந்தது. 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர் ஏற்படுத்திய பதிவை விட, மாற்றுத் திறனாளிகள் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த abdul latif bakar அவர்கள் 1.7 நொடிகள் குறைவான நேரத்தில் நிகழ்த்தினார்; இது 1500 மீட்டர் ஓட்டத்தின் புதிய பதிவாக ஆனது. இது மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கான sprint, தடகள ஓட்டப்பந்தயப் பிரிவில் நான்காவதாக வந்தவருக்கு எந்தப் பதக்கமும் கிடைக்கவில்லை, அவர் பொதுவான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவரை விடக் குறைவான நேரத்தில் அந்த தூரத்தைக் கடந்தார் என்பது எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நான் மீண்டும் ஒரு முறை நமது இந்த விளையாட்டு வீரர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன், இனிவரும் காலகட்டத்தில் பாரதம் para olympicற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், ஒரு நேர்த்தியான திட்டத்தை ஏற்படுத்தும் திசையில் பயணிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த வாரம் எனக்கு குஜராத்தின் நவசாரியில் மிக வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அது எனக்கு மிக உணர்வுபூர்வமான கணமாக மிளிர்ந்தது. மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு மெகா கேம்ப்புக்கு பாரத அரசு ஏற்பாடு செய்திருந்தது, அதில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அங்கே கண்பார்வை இல்லாத ஒரு சின்னஞ்சிறிய பெண் குழந்தையை நான் சந்திக்க நேர்ந்தது. கௌரி ஷார்துல் அவள் பெயர் – டாங்க் (डाँग) மாவட்டத்தின் தொலைவான காட்டுப் பகுதியிலிருந்து வந்த சின்னஞ்சிறு குழந்தை அவள். இராம காவியம் முழுவதும் அவளுக்கு மனப்பாடம்; அவள் எனக்கு அதில் சில பாகங்களை சொல்லிக் காட்டினாள், அதை நான் மக்கள் சபை முன்பாக ஒப்பிக்கச் சொன்ன போது, மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அன்று ஒரு புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு கிட்டியது. அந்தப் புத்தகம் சில மாற்றுத் திறனாளிகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பு. அதில் ஊக்கம் அளிக்கும் பல நிகழ்வுகள் இருந்தன. பாரத அரசு நவசாரியில் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியது, இதை மகத்தான ஒன்றாக நான் கருதுகிறேன். எட்டே மணி நேரத்துக்குள்ளாக, கேட்புத் திறன் இல்லாத 600 மாற்றுத் திறனாளிகள் கேட்கக் கூடிய கருவிகள் வாயிலான செயல்முறை நிகழ்த்தப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. ஒரே நாளில் மாற்றுத் திறனாளிகள் வாயிலாக 3 உலக சாதனைகள் ஏற்படுத்தப்படுவது என்பது நமது நாட்டுமக்களுக்கு பெரும் கௌரவம் அளிக்கும் விஷயம்.
எனதருமை நாட்டு மக்களே, 2 ஆண்டுகள் முன்பாக, அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியடிகள் பிறந்த நாளன்று தூய்மையான பாரதம் என்ற இயக்கத்தை நாங்கள் தொடக்கி வைத்தோம். தூய்மை என்பது நமது இயல்பாக மாற வேண்டும், ஒவ்வொரு குடிமகனின் கடமையாக ஆக வேண்டும், அசுத்தம் அசூயையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அன்று நான் கூறியது நினைவிருக்கலாம். இப்போது அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று 2 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் வேளையில், நாட்டின் 125 கோடி நாட்டு மக்களின் இதயத்தில் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அதே போல, தூய்மையை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைப்போம் என்று கூறியதற்கு ஏற்ப, ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்து வைக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அதாவது நாட்டின் 125 கோடிக் கால்களும் தூய்மையை நோக்கி முன்னேறியிருக்கின்றன. செல்லும் திசை சரியானதாக இருந்தால், கிட்டும் பலனும் நன்றாகவே இருக்கும் என்பது மெய்ப்படுத்தப்பட்டிருக்கிறது. சாமான்ய குடிமகனாகட்டும், ஆட்சியாளராகட்டும், அரசு அலுவலகங்கள் ஆகட்டும், சாலையாகட்டும், பேருந்து அல்லது ரயில் நிலையமாகட்டும், பள்ளி அல்லது கல்லூரியாகட்டும், வழிபாட்டுத் தலமாகட்டும், மருத்துவமனையாகட்டும், பிள்ளைகள் முதல் பெரியோர் வரை, கிராமத்தின் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் தூய்மைக்கான தங்கள் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். ஊடக நண்பர்களும் ஒரு ஆக்கபூர்வமான பணியை ஆற்றியிருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் போதாது, நாம் இன்னும் கூட முன்னேற்றம் காண வேண்டியிருக்கிறது. ஆனால் தொடக்கம் நல்லவிதமாக அமைந்திருக்கிறது, முழுமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை என் மனதில் துளிர்த்திருக்கிறது. இது மிகவும் தேவை; இதனால் தான் ஊரக பாரதம் பற்றிப் பேசும் போது இது வரை 2 கோடியே 48 இலட்சம், அதாவது சுமார் 2 ½ கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன, இனிவரும் ஆண்டுகளில் மேலும் 2 ½ கோடி கழிப்பறைகள் கட்டும் உறுதிப்பாடு இருக்கிறது. உடல்நலத்துக்காக, குடிமக்களின் கண்ணியம், குறிப்பாக தாய்மார்கள்-சகோதரிகளின் கண்ணியம் காக்கப்பட, திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கம் என்பது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்; ஆகையால் தான் open defecation free, திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுதலை என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. மாநில அரசுகளுக்கு இடையில், மாவட்டங்களுக்கு இடையில், கிராமங்களுக்கு இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது. ஆந்திர பிரதேசம், குஜராத், கேரளம் ஆகிய மாநிலங்களில் வெகு விரைவில் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்படும். குஜராத்தில் காந்தியடிகளின் பிறந்த இடமான போர்பந்தருக்கு நான் அண்மையில் சென்றிருந்த போது, திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்தை முடிவு கட்டும் நாளாக வரும் அக்டோபர் 2ஆம் தேதியை குறித்திருப்பதை அதிகாரிகள் எனக்குத் தெரிவித்திருந்தார்கள். இதை சாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்போருக்கு என் நல்வாழ்த்துக்கள்; தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியம் காக்கப்பட, சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக, இந்தப் பிரச்சனையிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்று நான் நாட்டு மக்கள் அனைவரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள் மக்களே, நாம் சபதம் பூண்டு முன்னேற்றம் காண்போம். குறிப்பாக எனது இளைய சகோதரர்கள் இன்று தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி வருகிறார்கள், அவர்கள் முன்பாக நான் ஒரு திட்டத்தை முன்வைக்க விரும்புகிறேன். தூய்மையான இந்தியா இயக்கத்தின் நிலை உங்கள் நகரில் எப்படி இருக்கிறது? இதைத் தெரிந்து கொள்ளூம் உரிமை அனைவருக்கும் இருக்கிறது, இதை அறிந்து கொள்ள பாரத அரசு 1969 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. காந்தியடிகளின் பிறந்த ஆண்டு 1869. 1969இல் காந்தியடிகளின் நூற்றாண்டை நாம் கொண்டாடினோம். 2019இல் காந்தியடிகளின் 150ஆவது ஆண்டை கொண்டாட இருக்கிறோம். இந்த 1969 எண்ணில் நீங்கள் ஃபோன் செய்து, உங்கள் நகரில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதன் நிலைமை பற்றித் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விண்ணப்பமும் செய்யலாம். நீங்கள் இதன் பயனை கண்டிப்பாக அடையுங்கள். இது மட்டுமல்ல, தூய்மை தொடர்பான குறைகளையும், அவற்றின் தீர்வு பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு தூய்மை appம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் இதை நன்றாகப் பயன்படுத்துங்கள். நீங்களும் முன்வந்து உங்கள் பங்களிப்பை நல்குங்கள் என்று பாரத அரசு கார்ப்பரேட் உலகுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. தூய்மைக்காக பணியாற்ற விரும்பும் இளம் தொழில்முறை பணியாளர்கள், professionalsக்கு ஆதரவு அளியுங்கள். மாவட்டங்கள் தோறும் தூய்மையான இந்தியா கூட்டாளிகள், swach bharat fellows என்ற வகையில் அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த தூய்மையான இந்தியா இயக்கம் அரசுகளோடு நின்று விட்டால் முன்னேற்றம் காண முடியாது. தூய்மை என்பது இயல்பாக ஆவதோடு நிறைவு பெறாது. இன்றைய யுகத்தில் தூய்மையோடு ஆரோக்கியம் எப்படி இணைகிறதோ அதே போல, தூய்மையோடு வருவாய் மாதிரி, revenue model இணைவதும் முக்கியமானது. Waste to wealth, கழிவிலிருந்து செல்வம் என்பதும் முக்கியமானது. ஆகையால் தூய்மை இயக்கத்துடன் கூடவே waste to compost, கழிவிலிருந்து உரம் என்ற திசையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். திடக்கழிவுகளை பதப்படுத்த வேண்டும், காம்போஸ்ட் உரமாக அதை மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும், இதற்காக அரசு தரப்பில் policy interventionம், அதாவது கொள்கை இடையீடும் தொடங்கப்பட்டு இருக்கிறது. கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட காம்போஸ்ட் உரத்தை வாங்கிக் கொள்ள உர நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபட விரும்பும் விவசாயிக்கு இந்த உரம் கிடைக்க அவர்கள் வழிவகை காண வேண்டும். யார் தங்கள் நிலத்தின் வளத்தை மேம்படுத்த நினைக்கிறார்களோ, நிலத்தின் நலத்தில் அக்கறை கொண்டிருக்கிறார்களோ, எந்த நிலத்துக்கு ரசாயன உரங்களால் கணிசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் இந்த உரத்தின் தேவை சிறிதளவே இருந்தாலும் கூட இது அளிக்கப்பட வேண்டும். அமிதாப் பச்சன் அவர்கள் brand ambassador என்ற வகையில் இந்தப் பணியில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். கழிவிலிருந்து செல்வம் என்ற திசையில் start up முனைப்புக்களை ஏற்படுத்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இது தொடர்பான இயந்திரங்களை மேம்படுத்துங்கள், தொழில்நுட்பத்தை மேம்படுத்துங்கள். மலிவு விலையில் பெரும் உற்பத்திப் பணியில் ஈடுபடுங்கள். இது செய்யக் கூடிய பணி தான். மிகப் பெரிய அளவிலான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பணி இது. மிகப் பெரிய பொருளாதார செயல்பாடுகளுக்கான நல்வாய்ப்பை அளிக்கக் கூடியது இது. கழிவிலிருந்து செல்வம் படைப்பது வெற்றியளிக்கும் முயற்சி. இந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரை ஒரு சிறப்பான நிகழ்ச்சியான Indosen, Indian Sanitation Conference, அதாவது இந்திய சுகாதார மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதிலிருந்தும் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநகர மேயர்கள், ஆணையர்கள் என அனைவரும் இணைந்து தூய்மை பற்றி மட்டும், ஆழமான கலந்தாய்வுகள் செய்யவிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தால் என்ன சாதிக்க முடியும்? Financial model, நிதி மாதிரி என்னவாக இருக்க முடியும்? மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க முடியும்? வேலைவாய்ப்புகளை இதன் மூலம் எப்படி அதிகரிக்க முடியும்? என அனைத்து விஷயங்கள் மீதும் விவாதங்கள் நடைபெற இருக்கின்றன. தொடர்ந்து தூய்மை பற்றிய புதுப்புது செய்திகள் வந்தவண்ணம் இருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 107 கிராமங்களுக்குச் சென்று கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள் என்று அன்றொரு நாள் செய்தித் தாளில் நான் படித்தேன். அவர்களே பணியாற்றி, சுமார் 9000 கழிப்பறைகள் கட்டுவதில் பங்களிப்பை நல்கினார்கள். Wing commander பரம்வீர் சிங் அவர்களின் தலைமையில் ஒரு அணி கங்கையில் தேவப்பிரயாகை தொடங்கி கங்கா சாகர் வரை, 2800 கி.மீ. நீந்திப் பயணித்து, தூய்மை பற்றிய செய்தியை கொண்டு சேர்த்தார்கள் என்பதை நாம் கடந்த நாட்களில் கேள்விப்பட்டிருக்கலாம். பாரத அரசும் தன் அமைச்சகங்களில், ஒரு ஆண்டு முழுவதுக்குமான அட்டவணை தயாரித்திருக்கிறது. ஒவ்வொரு துறையும் 15 நாட்கள் சிறப்பாக தூய்மை பற்றி முனைப்பு காட்ட வேண்டும். வரவிருக்கின்ற அக்டோபர் மாதம் 1 முதல் 15 வரை குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை, பஞ்சாயத் ராஜ் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தத்தமது ஆட்சி எல்லைகளில் தூய்மை தொடர்பான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவிருக்கின்றன. அக்டோபர் மாதத்தின் கடைசி 2 வாரங்களில், அக்டோபர் மாதம் 16 தொடங்கி 31 வரை மேலும் 3 அமைச்சகங்களான விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம், உணவு பதனிடும் தொழிற்சாலைகள், நுகர்வோர் விவகாரங்கள் ஆகியன அவற்றின் துறை தொடர்பான ஆட்சி எல்லைகளில் தூய்மை இயக்கத்தை செயல்படுத்துவார்கள். இந்தத் துறைகளோடு ஏதேனும் தொடர்புடையதாக உங்கள் பணி இருக்குமானால், நீங்களும் இதில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நான் குடிமக்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது தூய்மை தொடர்பான ஆய்வு இயக்கம் நடைபெற்று வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். முதலில் 73 நகரங்களில் தூய்மை எப்படி இருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது நாட்டு மக்கள் முன்பாக வைக்கப்பட்டது. ஒரு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட 500க்கும் மேற்பட்ட நகரங்கள் இருக்கின்றன, இப்போது அவற்றின் முறை; ஆகையால் ஒவ்வொரு நகரிலும், நாம் பின் தங்கியிருக்கிறோம், அடுத்த முறை முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. தூய்மை தொடர்பான ஒரு போட்டிச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. குடிமக்கள் நாமனைவரும் இந்த இயக்கத்துக்கு எத்தனை பங்களிப்பு அளிக்க முடியுமோ, அத்தனை நாம் அளிக்க வேண்டும். வரவிருக்கும் அக்டோபர் 2ஆம் தேதியன்று காந்தியடிகள், லால் பஹாதுர் சாஸ்த்ரி ஆகியோரின் பிறந்த நாள். தூய்மையான இந்தியா இயக்கம் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகி இருக்கின்றது. காந்தி ஜெயந்தி தொடங்கி தீபாவளி முடிய, கதராடைகளைக் கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு கதராடையை வாங்குங்கள் என்று மீண்டுமொரு முறை கேட்டுக் கொள்கிறேன்; அப்போது தான் ஏழைகளின் இல்லங்களில் தீபாவளியன்று விளக்கு எரியும். இந்த அக்டோபர் 2ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மால் தூய்மையோடு தொடர்புடைய ஏதாவது ஒரு செயலில் ஈடுபட முடியாதா? 2 மணி நேரம், 4 மணி நேரம் உடல்ரீதியாக நீங்கள் தூய்மைப்பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன், அதன் புகைப்படம் ஒன்றை என்னோடு narendramodiappஇல் பகிர்ந்து கொள்ளுங்கள். வீடியோ இருந்தால், அந்த வீடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மனைவரின் முயற்சியால் நாடு முழுவதிலும் மீண்டும் ஒரு முறை இந்த இயக்கத்துக்கு பலம் கிடைக்கும், புதிய வேகம் பிறக்கும். காந்தியடிகள், லால் பஹாதுர் சாஸ்த்ரி ஆகியோரை மீண்டும் நினைந்து, நாம் நாட்டுக்காக ஏதாவது ஒன்றைச் செய்யும் மனவுறுதி பூணுவோம்.
எனக்கு பிரியமான நாட்டுமக்களே, யார் அங்கீகாரம் அளிக்கிறார்களோ இல்லையோ, வாழ்க்கையில் அளித்தலில் இருக்கும் ஆனந்தம் அலாதியானது. அளிப்பதில் இருக்கும் சந்தோஷம் அற்புதமானது. கடந்த நாட்களில் எரிவாயு மானியத்தைத் துறக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டுமக்கள் அளித்த (response) பதில், நாட்டின் உயிர்த்துடிப்புக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நாட்டின் பல இளைஞர்கள், சின்னச்சின்ன அமைப்புக்கள், கார்ப்பரேட் உலகில் பணிபுரிவோர், பள்ளிகளில் பணி புரிவோர், சில அரசுசாரா அமைப்பினர் என அனைவருமாக இணைந்து அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை பல நகரங்களில் joy of giving week, அளித்தலில் இருக்கும் ஆனந்தம் வாரத்தை கொண்டாடவிருக்கிறார்கள். தேவையில் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், துணிமணிகள் ஆகியவற்றை சேகரித்துக் கொண்டு சேர்க்கும் இயக்கம் இது. நான் குஜராத்தில் இருந்த போது, நமது அனைத்துப் பணியாளர்களும் தெருக்களில் இறங்கி, குடும்பங்களில் இருக்கும் பழைய விளையாட்டுச் சாமான்களை தானமாகப் பெற்று, அவற்றை ஏழைகள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஆங்கன்வாடியில் கொண்டு சேர்த்தார்கள். அந்த ஏழைச் சிறுவர்களின் முகத்தில் மிளிரும் அலாதியான ஆனந்தத்தைப் பார்க்கும் போது, மனம் குதூகலிக்கும். அதே போல இந்த joy of giving week எந்த நகரங்களில் நடைபெற இருக்கிறதோ, அதை செயல்படுத்தவிருக்கும் இளைஞர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களின் உற்சாகத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும், அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு வகையில் இது ஒரு தான உத்ஸவம். இந்தப் பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நான் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பிரியம் மிகுந்த நாட்டு மக்களே, இன்று செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பண்டித தீன் தயாள் உபத்யாயா அவர்களின் பிறந்த நாள்; இன்று அவரது பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குகிறது. எந்த அரசியல் சிந்தனைகளால் உந்தப்பட்டு என்னைப் போன்ற இலட்சக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோமோ, அந்த அரசியல் எண்ணங்களுக்கு விளக்கம் கொடுத்தவர் பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்கள்; பாரதத்தின் வேர்களோடு தொடர்புடைய அரசியல் சிந்தனை, பாரத கலாச்சாரத்தின் பாரம்பர்யத்தைப் போற்றும் எண்ணப்பாடு, அந்தப் போக்குக்கு இசைவான அரசியல் தத்துவத்தையும், மனித நேய தத்துவத்தையும் அளித்த பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. सर्वजन हिताय-सर्वजन सुखाय, அனைவரின் நலம், அனைவரின் மகிழ்ச்சி, அந்த்யோதய் சித்தாந்தம் ஆகியன அவரது பங்களிப்பு. காந்தியடிகள் கூட கடைக்கோடியில் இருப்பவரின் நலன் பற்றியே பேசினார். வளர்ச்சியின் பலனை கடைக்கோடியில் இருக்கும் ஏழையிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது? ஒவ்வொரு கரத்துக்கும் வேலை, ஒவ்வொரு நிலத்திலும் நீர், என்று ஒரே சொற்றொடரில் ஒட்டு மொத்த பொருளாதாரத் திட்டத்தையும் தீன் தயாள் உபாத்யாயா அவர்கள் முன்வைத்து விட்டார். நாடு அவரது பிறந்த நூற்றாண்டை ஏழைகள் நலன் ஆண்டாக கொண்டாட வேண்டும். சமூகம், அரசு என அனைவரின் கவனமும், வளர்ச்சியின் பலன்களை ஏழைகளிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பதையே குவிமையமாகக் கொண்டிருக்க வேண்டும். பிரதமர் வசிக்கும் இல்லத்தை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து ரேஸ் கோர்ஸ் ரோடு என்றே அழைத்து வந்தார்கள். பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நூற்றாண்டை ஒட்டி, பிரதமர் வசிக்கும் இடம் இருக்கும் சாலை லோக் கல்யாண் மார்க் என்று மாற்றப்பட்டிருக்கிறது. அவரது நூற்றாண்டான கரீப் கல்யாண் வர்ஷ், அதாவது ஏழைகள் நலன் ஆண்டின் ஒரு அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது. நம்மனைவரின் கருத்தூக்கமாக விளங்கிய, நமது சிந்தனைகளின் வற்றாத ஊற்றாகத் திகழ்ந்த வணக்கத்துக்குரிய பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களை நான் பெரும் மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
என் நெஞ்சில் நீங்காது நிறைந்த நாட்டு மக்களே, விஜயதசமி நன்னாளன்று, ஈராண்டுகள் முன்னதாக, மனதின் குரலை நான் தொடங்கினேன். இந்த விஜயதசமி நன்னாளன்று 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மனதின் குரல் அரசுப் பணிகளுக்கு பரணி பாடும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கக் கூடாது, இந்த மனதின் குரல் அரசியல் தூற்றல்களுக்கான மேடையாக ஆகக் கூடாது, இந்த மனதின் குரல் குற்றாச்சாட்டுக்கள்-எதிர்க்குற்றச்சாட்டுக்களின் களமாக ஆகக் கூடாது என்பது உள்ளபடியே என் முயற்சியாக இருந்து வந்திருக்கிறது. 2 ஆண்டுகளில் பல வகையான அழுத்தங்களைத் தாண்டி, மனதில் உந்துதல் ஏற்படும் வேளையில், மனம் சலிக்கும் தருணங்களையும் தாண்டி எப்போதாவது கோபம் மேலிட சில சொற்களைப் பேச வேண்டிய அழுத்தம் ஏற்பட்டதுண்டு, ஆனால் உங்கள் அனைவரின் ஆசிகளால் மனதின் குரலில் அப்படிப்பட்ட எந்த வலையிலும் வீழ்ந்து விடாமல், சாதாரண மக்களோடு இணையக் கூடிய ஒரு முயற்சியாகவே அணுகி வந்திருக்கிறேன். இந்த நாட்டின் சாமான்யன் எனக்கு எப்படிப்பட்ட ஊக்கங்களை அளித்து வருகிறான். இந்த நாட்டின் சாமான்யனின் ஆசைகள்-அபிலாஷைகள் என்ன? என் மனதிலும் எண்ணத்திலும் பதிந்திருக்கும் நாட்டின் சாமான்யன் பற்றிய பதிவு ஆகியவை தான், மனதின் குரலில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. நாட்டு மக்களுக்கான மனதின் குரல் தகவல்கள் பரிமாற்ற சந்தர்ப்பமாக அமையலாம், என்னைப் பொறுத்த மட்டில் மனதின் குரல் என்பது எனது 125 கோடி நாட்டு மக்களுக்கு அவர்களின் சக்தியை உணர்த்தும் நிகழ்ச்சி, எனது நாட்டின் 125 கோடி மக்களின் திறனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் மேடை, இதிலிருந்து அவர்கள் செயலாற்ற ஊக்கம் பெற வேண்டும் என்பதே என் எண்ணப்பாடு, இதுவே இந்த நிகழ்ச்சியின் களம். இன்று இந்த வாரம் நிறைவடையும் வேளையில், ஈராண்டுகள் முழுமை பெறும் இந்தத் தருணத்தில், மனதின் குரலை நீங்கள் எப்படி ஆதரித்தீர்கள், எந்த வகையில் ஊக்கமளித்தீர்கள், எப்படி ஆசி நல்கினீர்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன், மனம் நெகிழ்கிறது, என் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். எனது கருத்துக்களை ஒலிபரப்பியதோடு, அதை அனைத்து மொழிகளிலும் கொண்டு சேர்க்க முழுமையான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நான் ஆகாசவாணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தாம் மனதின் குரலுக்குப் பின் கடிதங்களை தொகுத்தளித்து, ஆலோசனைகளை கொடுத்து, அரசின் கதவுகளைத் தட்டி முழக்கினார்கள். அரசின் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள், ஆகாசவாணி இப்படிப்பட்ட கடிதங்களைக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து, அரசுத் தரப்பிலிருந்து பிரதிநிதிகளை அழைத்து, பிரச்சனைகளின் தீர்வுக்கான ஒரு தளம் அமைத்துக் கொடுத்தார்கள். மனதின் குரல் என்பது ஏதோ 15-20 நிமிட உரையாடல் என்பதோடு நின்று விடவில்லை, இது சமூக மாற்றத்துக்கான ஒரு புதிய சந்தர்ப்பமாக அமைந்தது. இதை விட மகிழ்ச்சி தரும் விஷயம் யாருக்கும் வேறு என்ன இருக்க முடியும்; ஆகையால் இதன் வெற்றியில் பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் நான் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன், அவர்களுக்கு என் வணக்கங்களை செலுத்துகிறேன்.
நேசம் நிறைந்த என் நாட்டு மக்களே, அடுத்த வாரம் நவராத்ரி, துர்க்கா பூஜை, விஜயதஸமி ஆகியன வரவிருக்கின்றன, தீபாவளிக்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கும், ஒரு வகையில் ஒரு வித்தியாசமான சூழல் நாடு முழுவதிலும் நிலவுகிறது. இது சக்தி உபாஸனைக்கான வேளை. சமூகத்தின் ஒற்றுமை தான் நாட்டின் சக்தி. அது நவராத்ரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், இந்த சக்தி வழிபாட்டை, சமுதாய ஒற்றுமைக்கான வழிபாடாக ஆக்குவது பற்றிச் சிந்திப்போம். அது தான் உண்மையான சக்தி வழிபாடு, இப்படிச் செய்யும் போது தான் நாமனைவருமாக இணைந்து வெற்றியின் திருநாளைக் கொண்டாட முடியும், வாருங்களை சக்தியை வழிபடுவோம். ஒற்றுமை என்ற மந்திரத்தை உச்சரித்துப் பயணிப்போம். நாட்டை புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்ல அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற கருத்துக்களை மனதில் சுமந்து, நவராத்திரி, துர்க்கா பூஜை ஆகிய புனித நாட்களைக் கடைப்பிடிப்போம். விஜயதசமியை வெற்றித் திருவிழாவாகக் கொண்டாடுவோம்.
மிக்க நன்றி.
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்,
அகில இந்திய வானொலி, சென்னை




