
ஆளுநராகப் பதவியேற்ற அன்றைய தினமே இரண்டு அமைச்சர்களுக்கு, அதுவும் இரண்டு பெண் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன்.
நேற்று தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராகப் பதவியேற்றுக்கொண்டார் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே நாளில்தான் தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெற்றது. முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் உட்பட ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்ற ஆறு அமைச்சர்களில் இரண்டு பெண்களும் அடக்கம். அந்த வகையில் இவர்கள் இருவரும் தெலங்கானாவின் முதல் பெண் அமைச்சர்களாகிறார்கள்.

ஒருவர் சபிதா இந்திரா. ஒருங்கிணைக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்த காலத்தில் முதல் பெண் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

இவர் தவிர, தெலங்கானாவின் முதல் பழங்குடியினப் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமையை சத்தியவதி ரத்தோட் பெறுகிறார். சத்தியவதிக்கு பெண்கள் மற்றும் பழங்குடியின மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தெலுங்கானா ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



