ஓம், ‘மாடு’ ஆகியவை பிற்போக்குத்தனமான சொற்கள் என்று நினைப்பவர்கள் குறித்து மதுராவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்!
உத்தரப் பிரதேசம் – மதுராவில் ஒரு மெகா உழவர் நலத்திட்டத்தைத் தொடங்கும்போது, பசுக்கள் மற்றும் இந்து மதம் குறித்து விவாதிப்பது பிற்போக்குத்தனம் என்று கருதுபவர்கள் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி!
‘ஓம்’ அல்லது ‘மாடு’ என்ற சொற்களைக் கேட்கும் போதெல்லாம் சிலர் ஏதோ துள்ளி எழுந்தபடி “16 ஆம் நூற்றாண்டுக்கு நாங்கள் திரும்பிச் செல்கிறோம்” என்று நினைப்பது நாட்டுக்கு துரதிர்ஷ்டவசமானது. இந்த நாட்டை அழித்தவர்கள், நாட்டை அழிப்பதற்காக எந்தக் கல்லையும் விட்டுவிடவில்லை என்றார்.
துர் பிரசாரம் செய்பவர்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், என்செபலிடிஸை (Encephalitis) என்ற மூளை நோயை ஒழிக்க எத்தகைய முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டு முக்கியப் பங்காற்றினார் என்பது தெரிந்தும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் எதிர்பாராத நோய்த் தாக்கத்தால் மரணம் அடைந்த குழந்தைகள் மரணத்தில் மாநில அரசு குறித்து துர்பிரசாரம் செய்கின்றனர் என்றார் மோடி.
பிரதமர் மோடி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில், கால்நடைகளின் கால் மற்றும் வாய்ப் பகுதியில் ஏற்படும் நோய் புருசெல்லோசிஸை ஒழிப்பதற்கான தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தையும் தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
தேசிய அளவிலான கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிளாஸ்டிக் சேகரிக்கும் பெண்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு உதவி செய்தார்.
கோமாரி மற்றும் புரூசெல்லா நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டு தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் தொடக்க விழா, உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, ஹெலிகாப்டர் மூலம் மதுரா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளைப் பார்வையிட்டார். நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், அதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டு, அதுகுறித்த விவரங்களைச் சொல்லி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
விழா நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தையும் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதை ஒட்டி, அந்த வகை பிளாஸ்டிக்குகளைச் சேகரிக்கும் பெண் ஊழியர்களை மோடி சந்தித்தார்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அப்பெண்கள் ஈடுபட்டிருந்த போது, அவர்களுக்கு பிரதமர் மோடி உதவினார்.
நாட்டிலிருந்து ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுராவில் நடந்த ‘ஸ்வச்சதா ஹ சேவா’ நிகழ்ச்சியில் பெண்களுடன் சேர்ந்து குப்பைக் குவியல்களிலிருந்து பிளாஸ்டிக்கைப் பிரிப்பது குறித்துச் சொல்லி அவர்களுக்கு உதவினார்.
“அக்டோபர் 2, 2019க்குள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். இதில் உதவ சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள், தனிநபர்கள் மற்றும் பிறருக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார் பிரதமர்.
தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை கருவூட்டல் மற்றும் உற்பத்தித்திறன் குறித்து இந்தியாவின் 687 மாவட்டங்களிலும் கிருஷி விஜியன் கேந்திரங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் நாடு தழுவிய வொர்க்ஷாப்களை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தின் இயக்கத்தை மோடி தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமாமாலினியும் கலந்து கொண்டார்.