மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் என்ஜினீயர் கணேஷ்குமார் (வயது 29), கடந்த 2017-ம் ஆண்டு அரசு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள மத்திய அரசின் ‘செயில்’ (இந்திய இரும்பு உற்பத்தி கூடம்) நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
நேற்று மாலை அங்கு ஒப்பந்த பணியாளர்களுக்கு அவர் பணிகளை ஒதுக்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அனில் லோகர் என்பவர் தனக்கு வழங்கப்பட்ட பணியை ஏற்க மறுத்தாராம். இது தொடர்பாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டாராம்.
ஆத்திரம் அடைந்த அனில்லோகர் இரும்பு கம்பியால் தாக்கியதில் கணேஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்தாராம். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனராம். ஆனால் வழியிலேயே கணேஷ்குமார் பரிதாபமாக இறந்து விட்டாராம்.
இந்த செய்தி அறிந்ததும் மதுரையில் இருந்து கணேஷ்குமாரின் உறவினர்கள் ஒடிசா சென்றுள்ளனர். இதற்கிடையே மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குமார் மனு கொடுத்தார்.