தேஜஸ் விமானத்தில் தெம்பாகப் பறந்த ராஜ்நாத் சிங்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
rajnath - 2026

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் செப்.19 வியாழக்கிழமை பயணித்து சாதனை புரிந்துள்ளார்.

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (ஹெச்ஏ.எல்.,) தேஜஸ் ரக போர் விமானங்களை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இந்த தேஜஸ் ரக விமானங்கள் 40 ஐ இந்திய விமானப் படைக்கு தயாரித்து வழங்க ஹெச்.ஏ.எல் ஒப்புக் கொண்டுள்ளது. அண்மையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மேலும் 80 விமானங்களை வழங்க ஆர்டர் பெற்றுள்ளது ஹெச்.ஏ.எல். நிறுவனம்!

தற்போது, கடற்படை பயன்பாட்டுக்காக தேஜஸ் விமானம் உருவாக்கப் பட்டு, அதனை வெற்றிகரமாக தரையிறக்கும் சோதனை முயற்சி அண்மையில் கோவாவில் நடைபெற்றது. இந்த விமானம் மணிக்கு 2,005 கிமீ., வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது. மிக்-21 ரக விமானங்களுக்கு மாற்றாக தேஜஸ் விமானம் உருவாக்கப் பட்டுள்ளது.

rajnath1 - 2026

தேஜஸ் விமானம் வெற்றிகரமாக தரையிறக்குதலில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தேஜஸ் விமானத்தில் பயணித்தார். இதன் மூலம் தேஜஸ் விமானத்தில் பயணித்த நாட்டின் முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார் ராஜ்நாத் சிங்.

தேஜஸ் விமானத்தில் பறந்தது குறித்து அவர் கூறிய போது, இந்த பயணம் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருந்தது. போர் விமானங்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை இந்தியா பெற்றுள்ளது. ஏர் வைஸ் மார்ஷல் திவாரி கூறியபடி தேஜஸ் விமானத்தை சிறிது நேரம் இயக்கிப் பார்த்தேன் என்றார். சுமார் 30 நிமிடங்கள் அவர் விமானத்தில் பறந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.