
வரலாற்று ரீதியான வெற்றி கண்ட அமெரிக்க சுற்றுப் பயணத்துக்குப் பின் இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில், கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்… என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பாஜக., தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா.
இந்தியாவை உலக அரங்கில் புதிய உச்சத்துக்கு கொண்டு நிறுத்தியிருக்கும் பயணம் இது என்று வர்ணித்துள்ளார் அமித் ஷா. மேலும், அனைத்தையும் செய்ய இயலும் புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையைக் கொடுத்திருக்கும் தலைமை என்று கூறியுள்ள அமித் ஷா, இந்தியா வெகுநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவர் அவர் என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் பெருமை மோடி என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையில் பேசிய பின்னர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு புறப்பட்டார். ஐநா சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா திரும்புவதற்கு முன்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

முன்னதாக, கிரீஸ் பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இதே போல் பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடனும் மோடி உரையாடினார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை மோடி சந்தித்தபோது, பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என இரு நாட்டு தலைவர்களும் உறுதி கூறினர். இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். வங்கதேசத்தின் தந்தையென அழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியும் அதனை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் துளசி கப்பார்ட்டுடன் பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணி அளவில் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக இன்று இரவு பிரதமர் தில்லி வந்து சேர்ந்தார். அவரை பாஜக.,வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து தில்லியில் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது.
பல மணி நேர பயணத்திற்கு பின்னர் தில்லி வந்து சேர்ந்த பிரதமருக்கு தில்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ஜ., செயல் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் மோடியை வரவேற்றனர். பிரதமரை வரவேற்க ஏராளமான பாஜக.,வினர் விமான நிலையத்தில் திரண்டனர்.
பின்னர் விமான நிலையம் அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் மோடி பேசியபோது… என்னை வரவேற்க அதிகளவில் கூடிய தொண்டர்களுக்கு நன்றி. மறக்க முடியாத வரவேற்பாக அமைந்தது. இந்த நேரத்தில் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைவணங்குகிறேன்.
2014 தேர்தலுக்கு பின்னரும் அமெரிக்கா சென்றேன். தற்போதும், அமெரிக்கா சென்று வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. இதற்கு 130 கோடி மக்களே காரணம்.
ஹூஸ்டன் நகரில் மிகச் சிறப்பான நிகழ்ச்சி நடந்தது. அந்த நகரில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெருமளவில் திரண்டு, தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அங்கு தான் ஜனநாயகத்தின் வலிமையை அறிந்தேன்.
ஹவ்டி மோடி நிகழ்ச்சி பெரிய திருவிழா போல் நடந்து வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சி, இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை வெளிப்படுத்தியது.
இந்தக் கூட்டத்தில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையில் உலக தலைவர்களை சந்தித்த போது ஹவ்டி மோடி குறித்து பேசினர். உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நமது வெற்றி உணரப்படுகிறது.. என்று பேசினார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். இரு புறமும் கூடி நின்று மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



