
ஆர்டிசி போராட்டம் குறித்து தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் விசாரித்தறிந்தார்.
தொழிலாளர்களின் போராட்டத்தால் யாருக்கும் இன்னல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மாநிலத்தில் ஆர்டிசி போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அந்த விவகாரத்தின் மீது பார்வையை செலுத்தி உள்ள ஆளுநர் தமிழிசை, அக்டோபர் 17ஆம் தேதி வியாழன் அன்று மதியம் போக்குவரத்துத் துறை அமைச்சர் புவ்வாட அஜய்குமாரிடம் தொலைபேசியில் அழைத்து விவரங்களை கேட்டறிந்தார்.
அவருக்கு பதில் அளித்த அமைச்சர் அஜய்குமார், போக்குவரத்து துறை முக்கிய செயலர் சுனில் சர்மா ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று கூறினார்.
தொடர்ந்து ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்த சுனில் சர்மா மாநிலத்தில் ஆர்டிசி போராட்டச் சூழல்கள் மற்றும் அரசு செய்து வரும் மாற்று ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். ஆர்டிசி போரிட்டம் பற்றி தமக்கு அதிகளவு புகார்கள் வருவதாகவும் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சுனில் சர்மாவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார்.
இதனிடையே இரு நாள் பயணமாக தமிழிசை நேற்று இரவு சென்னை கிளம்பிச் சென்றார். சனிக் கிழமை அன்று கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அன்று மாலையே ஹைதராபாத் திரும்புகிறார்.



