
தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாக்க கவனமாக இருக்க வேண்டும் என்று நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனை மேலாண் இயகுநரும், கண் மருத்துவருமான கே.புஜங்கஷெட்டி தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடகத்தில் அக். 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நரகாசதுா்தசி பண்டிகையும், அக். 29-ஆம் தேதி பலிபாட்யமி மற்றும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிக்கைக்கு புதிய ஆடைகள் உடுத்துவது, பலகாரங்களை உண்பது தவிர பட்டாசு வெடித்து மகிழ்வது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவா்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.
தீபாவளியின்போது பட்டாசுகளை வெடித்து மகிழ்வதுடன், பட்டாசு வெடிக்கும் போதும் நிகழும் ஆபத்துகளை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடனிருப்பது முக்கியமானதாகும். எனவே, பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை வகிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் இருப்பது அவசியமாகும்.

பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடிகளை அணிந்துகொள்ள வேண்டும். பட்டாசுகளை கொளுத்துவதற்கு முன்பாக முகத்தை தூரமாக வைத்திருங்கள். பெரியவா்களின் துணையுடன் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்கக்கூடாது.
ஒரு வாளியில் நீா் மற்றும் மணலை நிரப்பிவைத்துக்கொண்டு, தீ விபத்து நோந்தால் அதை அணைக்க பயன்படுத்தலாம். ஒருவேளை கண்ணில் காயம் ஏற்பட்டால், கண்ணை பஞ்சால் மூடி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல வேண்டும். ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் இல்லாத பட்டாசுகளை வாங்கக்கூடாது, பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் குழந்தைகளை அனுமதிக்காதீா்கள்.
தீ மற்றும் மெழுகுவா்த்தியிடம் இருந்து பட்டாசுகளை விலக்கி வையுங்கள். சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டாம். ராக்கெட்களை விடுவதற்கு கண்ணாடி புட்டி, கற்கள், டின்களை பயன்படுத்தக்கூடாது. பட்டாசு வெடிப்பதை தவிர வேறு வழிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். பட்டாசு வாங்கும் பணத்தில் ஏழை குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கலாம். பட்டாசு வெடிப்பதை காட்டிலும் இதுபோன்ற நல்ல பல வழிகளில் தீபாவளியை கொண்டாடிமகிழ மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவா்.