
எந்தப் படத்தைக் கொடுத்தாலும் அதைப் பார்த்து ரசிப்பவர்கள் ரசிகர்கள். அதனால்தான் அவர்கள் ரசிகர்கள்.
இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தை தீபாவளி ஸ்பெஷல் என்று கூறி வெள்ளிக்கிழமை இன்றே வெளியிட்டிருக்கிறார்கள் பிகில் குழுவினர்.
படம் வெளியாகும் முன்பே பலத்த சர்ச்சைகள். சான்றிதழ் பெறுவதில் இருந்து பல்வேறு பிரச்னைகள். ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அரசியல். இப்படி எத்தனையோ கட்டங்களைத் தாண்டி இன்று திரையில் தன் முகத்தைக் காட்டியிருக்கிறார் பிகிலு.!

வழக்கமாக படம் வெளியாகும் போது சில நாட்கள் சிறப்பு காட்சிகளைப் போட்டு, கலெக்சனை எடுத்துவிடுவார்கள். காரணம், தமிழ்ராக்கர்ஸ் மாதிரியான அசுரர்களின் பார்வை பட்டு விடக் கூடாதே என்ற ‘நல்ல’ எண்ணம்தான்! ஆனால் பிகிலு பிரச்னையை சந்தித்த போது, அதன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
தீபாவளியையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். முன்னதாக, பிகில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியானது.
இதனால், இன்று அதிகாலை 5 மணிக்கே, முதல் காட்சி திரையரங்கில் ஓடத் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பிகிலு ரிலீஸ் ஆனது.

இன்று காலை தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனதால், நள்ளிரவு முதலே கூடியிருந்த ரசிகர்கள் தெருவில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர். வன்முறை வெறியாட்டத்தில் ரசிகர்கள் இறங்கி, கடைகளின் ஷட்டர்கள் மீது கல்வீசி, காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டுகளை உடைத்து, சாய்த்து ரகளை செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி ரணகளமானது.
இதுபோல், இலங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடினர்.

இலங்கை ஜாஃப்னாவில் உள்ள ராஜா திரையரங்கில் “பிகில்” திரைப்படம் திரையிடப்பட இருந்த நிலையில், அதிகாலையே வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்தியவர்கள் பின்னர், திரையரங்கின் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அந்த நேரத்தில் திரையரங்கு ஊழியர்களும் தாக்கப் பட்டுள்ளனர்.

இப்போது இந்தப் படத்தைப் பார்க்கவா இத்தனை ஆத்திரப் பட்டு, வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள் என்று சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!
பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..! |
பிகிலு எப்படியாவது ஓடியாகணும்! அரசியல் விஜய் ஏற்படுத்திய திகிலு!