
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் காஷ்மீரைச் சேராத 5 தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் ஒரு தொழிலாளிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில்,அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிக்கி மேலும் ஒரு தொழிலாளிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு அனந்த்நாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொழிலாளர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.
குல்காமில் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் மீதான தேடுதல் வேட்டை தொடர்கிறது. கூடுதல் வீரர்களும் இப்பகுதிக்கு விரைவில் வரவுள்ளனர்.
தினக்கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்ட அந்தப் பகுதியில் 18-ஆவது பட்டாலியன் ராணுவப் பிரிவும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.