
அயோத்தியில், ராமஜன்ம பூமி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கின் வெற்றிக்காகப் பாடுபட்ட, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு பல்வேறு தரப்பினரும் சமூகத் தளங்களில் தங்கள் வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அனுராக் சக்சேனா என்பவர், ஹனுமான் பல்வேறு வடிவங்களில் வருவார். நன்றி. வணங்குகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் தள்ளாத இந்த 92 வயதிலும், ராமனுக்காக நின்று கொண்டே வாதிட்டு, வெற்றியைத் தேடித் தந்தவர் என்று கூறி பலரும் பகிர்ந்து வரும் தகவல் இது…
“உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்” என்றார் தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய்.
“வக்கீல் நின்று வாதிடுவதுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார் தமிழகத்தைச் சார்ந்த முதுபெரும் வழக்கறிஞர் திரு. கேசவன் பராசரன் அவர்கள்.
இந்த வழக்கில் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக் கொள்ள வில்லை அவர். இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார்.
அயோத்தி வழக்கின் நியாயமான தீர்ப்புக்கு உறுதுணையான தெளிவான, உறுதியான வாதங்களை பராசரன் முன்வைத்தபோது உடன் பக்கபலமாக வாதாடினார் மூத்த வழக்கறிஞர் திரு. சி.எஸ்.வைத்தியநாதன். இவர் வழக்கு நடைபெற்ற 40 நாள்களும் காலணி அணியவில்லை.
தொழில் பக்தியும் இறை பக்தியும் இணைந்த இவ்விருவரின் வாதங்களே நீதிபதிகளை உண்மையை நோக்கி வழிநடத்தின.