
ராமர் கோவில் கட்டுமானம் 2020 ஏப்ரலில் ராம நவமியில் தொடங்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ராம ஜன்மபூமி தலத்தில் ராமர் கோயில் கட்டுமானம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வரும் ராம நவமியில் தொடங்கக் கூடும் என்று எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. வெளியான செய்தியின்படி, ராம நவமி என்பது ராமரின் பிறந்த தினம். அது ஒரு சிறப்பு தினம். அந்த நாளில் ஒரு சிறப்பான நிகழ்வு நடைபெற உள்ளது என்று கூறப் படுகிறது.

ராம ஜன்மபூமியில் யாருக்கு உரிமை என்பது குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த அதன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பில், ராமஜன்மபூமி ராமருக்கே உரித்தானது. அதில் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.
மேலும், மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறக்கட்டளையே ராமர் கோயில் கட்டுமானத்தை கவனிக்கும். அதே நேரம், ராம நவமியும் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு நெருக்கத்தில் வருகிறது.
1989 ஆம் ஆண்டில் ஏற்கெனவே ஒரு விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அதைப் போலவே இப்போது மீண்டும் ஒரு ராம விக்ரஹப் பிரதிஷ்டை, (ஷிலாந்யாஸ்) இருக்குமா என்பது இன்னமும் தெளிவாக்கப் படவில்லை. இதனை எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

மேலும் அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி, கோயில் கட்டுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று அந்தச் செய்தி கூறுகிறது.
இதற்கிடையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம், அயோத்தி மாவட்ட நிர்வாகத்திடம், 5 ஏக்கர் நிலத்தின் 3 – 4 இடங்களை அடையாளம் காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளது! அவை சுன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படலாம்.
முஸ்லிம் தரப்புக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. சுன்னி வக்ஃப் வாரியம் விரும்பினால் அங்கு ஒரு மசூதியைக் கட்டலாம்.
ராமர் கோயில் கட்டுமானத்திற்கான மேலும் ஒரு திட்டமிடப் பட்ட தேதியாக, 2020 மார்ச் 25 குறிக்கப் பட்டிருக்கிறது. சைத்ர மாதத்திலிருந்து தொடங்கும் இந்து புத்தாண்டு 2020 மார்ச் 25 அன்று வருகிறது. அகில பாரதீய சந்த் சமிதி, இந்து புத்தாண்டு மற்றும் ராம நவமி இரு தேதிகளும் ராமர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்திற்கான நல்ல நாட்கள் என்று குறித்துக் கொடுத்துள்ளது.

முன்னதாக கோயில் கட்டுமானப் பொறுப்பு விஸ்வ ஹிந்து பரிஷத் வசம் இருந்தது. இருப்பினும், இப்போது அந்தப் பணி, மத்திய அரசால் உருவாக்கப்படும் அறக்கட்டளையால் கவனிக்கப்படும்.
இதனிடையே, எகனாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ள செய்தியின் படி, அறக்கட்டளைக்கு உரிமைப் படுத்தப் பட்டுள்ள இடத்தைச் சுற்றி 62.23 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.