
உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்! அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாப்டே (63) நியமிக்கப் பட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே திங்கள்கிழமை இன்று காலை பதவியேற்றார். இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 17 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி பாப்டே. இவர் தந்தை அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே மூத்த வழக்கறிஞர். நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த, எஸ்.ஏ.பாப்டே உச்ச நீதிமன்றத்தில் 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என பணியாற்றி 2013ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பாப்டே பதவியேற்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.