
இனி நான் 50 வயது கடந்து தான் சபரிமலைக்கு வருவேன் என்று ஒரு பதாகையை தனது கழுத்தில் எழுதி மாட்டிக் கொண்டு சபரிமலைக்கு வந்துள்ளார் அந்தச் சிறுமி. அவரின் வயது இப்போது 9.
இவரது இந்தப் பதாகை, சபரிமலைக்கு வந்தவர்களின் கருத்தைக் கவர்ந்தது! பலரும் அவரது விழிப்பு உணர்வுக் கருத்துக்கு தங்களது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் வர தடை விதித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருசூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 9 வயது மகள் கிருத்திகா, மாலை அணிந்து சபரிமலைக்கு வந்தார். தன் தந்தையுடன் சபரிமலைக்கு வந்த அவர், கழுத்தில் பதாகை ஒன்றையும் அணிந்திருந்தார்.
அந்தப் பதாகையில், இனி நான் 50 வயதுக்கு மேல் தான் சபரிமலைக்கு வருவேன்… என்ற வாசகங்களை எழுதி வைத்திருந்தார். இதனைப் படித்துப் பார்த்த ஐயப்ப பக்தர்கள் பலரும் அவருக்கு வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்தனர். இந்தப் படம் இப்போது சமூகத் தளங்களிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.