புது தில்லி:
தேர்தலில் வாக்களிக்காவிட்டால் அரசை கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தில்லியைச் சேர்ந்த ‘இந்தியாவின் குரல்’ என்ற என்ஜிஓ அமைப்பு சார்பில் தனேஷ் லெஷ்தான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் ‘நாடு முழுவதும் சாலையோரங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே அவற்றை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் டி.ஓய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், என்ஜிஓ சார்பில் ஆஜரான தனேஷ் லெஷ்தானிடம், தேர்தலில் வாக்களித்தீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘நேர்மையாக சொல்வதென்றால் எனது வாழ்நாளில் ஒருமுறை கூட வாக்களித்தது இல்லை’’ என்றார்.
இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நீதிபதிகள், ‘‘தேர்தலில் வாக்களிக்காத பட்சத்தில் அரசை கேள்வி கேட்கவோ, குற்றம்சாட்டவோ உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும்படி உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்துக்கு போதிய அதிகாரம் இல்லை.
ஒருவேளை அப்படி உத்தரவு பிறப்பித்தாலும், அதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் குவிந்துவிடும். எனவே இது சாத்தியமற்றது. தவிர அந்தந்த உயர் நீதிமன்றங்களை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு வந்திருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் விளம்பரத்தை தேடிக் கொள்ளத்தானோ என தோன்றுகிறது. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றங்களை அணுகி தீர்வைத் தேடிக் கொள்ளுங்கள்’’ என உத்தரவிட்டனர்.
இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இதே போன்ற பொதுநல மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் எல்லாமே நடந்து விடுமா? ஒரேயொரு உத்தரவால் நாட்டில் ஊழல் ஒழிந்துவிடுமா? நாடு முழுவதும் ராம ராஜ்யம் மலர்ந்து விடுமா?’’ என அடுக்கடுக் காக கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



