சென்னை:
அதிமுக பொதுச் செயலராக ஆன சசிகலாவை, முதல்வராகவும் தேர்ந்தெடுத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது வாக்காளர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுக்க ஒப்புதல் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது அவர்களது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கு ஒன்றும் நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று திடீரென எழுந்துள்ள எதிர்ப்பு முழக்கத்தால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வர் என்ற காரணத்தால்தான் அதிமுக.,வுக்கு தமிழக மக்கள் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளும் அதிமுகவையே மீண்டும் அரியாசனத்தில் அமரவைத்து, ஜெயலலிதாவுக்கு ஒரு சாதனைப் பக்கத்தை எழுதி வைத்தனர். ஆனால் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா காலமாகிவிட்டார். இதையடுத்து முதல்வராக ஏற்கெனவே ஜெயலலிதாவால் முதல்வராக அமர்த்தப் பட்ட ஓ. பன்னீர்செல்வமே இம்முறையும் அமரவைக்கப்பட்டார். இதை தமிழக மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
அதேநேரத்தில் தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக அதிமுக பொதுச் செயலர் பொறுப்பை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் பேராசை பிடித்தவராக மக்கள் விருப்பத்துக்கு எதிராக முதல்வர் பதவியில் உட்காரவும் முடிவு செய்திருக்கிறார் சசிகலா. சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துள்ளனர். சசிகலா ஓரிருநாட்களில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் சசிகலா முதல்வராக நீங்கள் எப்படி ஆதரவு கொடுக்கலாம்? கட்சிப் பதவி உங்கள் கட்சியின் உள்விவகாரம் என்று நாங்கள் கருதினோம். ஆனால், முதல்வர் நாற்காலி என்பது, பொதுமக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அவரை எப்படி நீங்கள் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கலாம்? என அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சசிகலாவை முதல்வர் ஆக்கத்தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோமா? எங்கள் வாக்குகளை வாங்கி சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டாம்; அதற்கு நீங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள். இதனால், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.



