தமிழ்ப் புத்தாண்டு முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து: ரங்கசாமி

RANGASAMY-puducheryபுதுச்சேரி: வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்.14ம் தேதி முதல், புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்குகிறது என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார். ஏர் இந்தியா நிறுவன கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமானப் போக்குவரத்தை தொடங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன அதிகாரிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, “புதுவையிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கு ஏர் அலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 48 பேர் பயணம் செய்யக்கூடிய ஏ.டி.ஆர். ரக விமானங்களை இது இயக்க உள்ளது. வரும் தமிழ்ப் புத்தாண்டு முதல் விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளது. மாலை 3–45க்கு பெங்களூரிலிருந்து புறப்படும் விமானம் 4–45க்கு புதுச்சேரி வந்தடையும். இங்கிருந்து 5–05க்கு புறப்பட்டு 6–05க்கு பெங்களூர் சென்றடையும். இந்த சேவை புதன் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருக்கும். தற்போது விமான சேவையைத் தொடங்கும் நிறுவனத்துக்கு விமான எரிபொருளுக்கான வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார். முன்னதாக, புதுவையிலிருந்து பெங்களூருக்கு தனியார் நிறுவனங்கள் சிறிய ரக விமானங்களை இயக்கின. லாபகரமாக இல்லாததால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரண்டு முறை இவ்வாறு நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பான விமான சேவை நிறுவனங்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.